கோவையில் நவ 17 நடைபெற உள்ள அமைதி பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள டாக்டர் கிருஷ்ணசாமி அழைப்பு

கோவை மக்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உருவாக்கக்கூடிய வகையில் வரும் 17 ஆம் தேதி, காலை 11 மணி அளவில் கோட்டைமேடு கோட்டை ஈஸ்வரன் கோவிலிலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அமைதி பேரணி நடைபெறும்.


கோவை: சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கோவை மீண்டும் அமைதி பூங்காவாக மாற வேண்டும் என்ற நோக்கில் "Rally of Peace for Coimbatore"என்ற அமைதி பேரணியை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார்.

வரும் நவம்பர் 17ஆம் தேதி பேரணி நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், மக்கள் அனைவரும் திரளாக பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அழைப்பில், "கோவை மாநகரம் - மாவட்டம் தொன்றுதொட்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் உகந்த தட்பவெப்ப சூழலில் அமைந்துள்ள மிக முக்கியமான தொழில் நகரமாகும். மும்பைக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவின் ’மான்செஸ்டர்’ என்று அழைக்கப்படக்கூடிய அளவிற்கு நூற்பாலைகளும், பிற தொழில் நிறுவனங்களும்; தற்பொழுது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பெருகி வரும் நகரமாக விளங்குகிறது.

1998 இல் நடந்த தொடர் வெடிகுண்டு நிகழ்வுகள் பெரும் உயிரிழப்புக்களையும், பொருளாதார சேதங்களையும் உருவாக்கியது. அதனால், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்தது.

கடந்த 23ஆம் தேதி அதிகாலை கோவை, கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் வெடி விபத்தும், அதைத் தொடர்ந்து அதில் சம்பந்தப்பட்டவர்களுடைய இல்லங்களில் நடைபெற்ற சோதனைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதும் மிகக் கவலை அளிக்கக் கூடியது ஆகும்.

கோவைக்கு நேர்ந்திருக்கக் கூடிய மிகப்பெரும் ஆபத்து அதிர்ஷ்டவசமாக அன்று தடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் திட்டப்படி ஏதாவது நிகழ்ந்திருக்குமே ஆனால், கோவையை மட்டும் அல்ல, தமிழகம் - இந்தியாவின் ஒட்டுமொத்த அமைதியையும் சீர்குலைத்து இருக்கக்கூடும். இது போன்ற தீவிரவாதிகளின் கேந்திரமாக கோவையைத் தொடர்ந்து அனுமதிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது ஆகாது.

எனவே, கோவையில் நிரந்தரமாக பயங்கரவாத செயல்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும். அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல எண்ணங்களும், ஒற்றுமை உணர்வும், ஒருமைப்பாடும் வளர்க்கப்பட வேண்டும். சட்டம் ஒரு பக்கம் தனது கடமையைச் செய்தாலும், மக்கள் மத்தியில் நிலவும் நல்ல உணர்வுகளே நிரந்தரமான அமைதியை உருவாக்கும்.

எனவே, கோவை வாழ் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு மிகப்பெரிய சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உருவாக்கக்கூடிய வகையில் அனைத்து தொழில் - வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மத அமைப்புகள் உட்பட அனைவரும் பங்கேற்கக்கூடிய வகையில் வரும் வருகின்ற 17.11.2022 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் கோட்டைமேடு கோட்டை ஈஸ்வரன் கோவிலிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ’RALLY OF PEACE FOR COIMBATORE’ எனும் தலைப்பில் கோவையில் ’அமைதிப் பேரணி’ நடைபெற உள்ளது.

எனவே, அதில் தமிழக – கோவை மக்கள் அனைவரும் இந்த அமைதி பேரணியில் பெரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்", என அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...