கோவை இசைக்கல்லூரியில் டிச.17-ல் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் - ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் மலுமிச்சம்பட்டியில் உள்ள இசைக் கல்லூரி வளாகத்தில், வரும் 17ஆம் தேதி மாவட்ட அளவிலான குரலிசை பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு



கோவை: கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள இசைக் கல்லூரி வளாகத்தில் வரும் 17ஆம் தேதி தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட கலை போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கலைப் பயிற்சிகள் வழங்குதல், பொதுக்கல்வியுடன் கலைக்கல்வி வழங்குதல், சிறார்களிடம் மறைந்துள்ள கலைத் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பளித்தல், கலைப் போட்டிகள் நடத்துதல் மற்றும் கலையால் சிறார்களை நல்வழிப்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு ஜவஹர் சிறுவர் மன்றம் 1979 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது.

தற்போது மாநிலம் முழுவதும் 40 இடங்களில் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்றங்கள், விரிவாக்க மையங்கள், ஊரக மையங்கள் என செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தேசிய சிறுவர் மன்றத்தின் நோக்கங்களை மாநில அளவில் தமிழ்நாடு ஜவஹர் சிறுவர் மன்றம் செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் நடைபெறவுள்ளன. கோவை செட்டிபாளையம் பிரிவு ரோடு மலுமிச்சம்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள இசைக்கல்லூரி வளாகத்தில் வரும் டிசம்பர் 17 சனிக்கிழமை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில், குரலிசை பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. மேலும் 5-8, 9-12,13-16 என்ற வயது வரம்பில் போட்டிகள் நடைபெறும். டிசம்பர் 17 அன்று காலை 10 மணிக்கு குரலிசை போட்டி, பரதநாட்டிய போட்டி கிராமிய நடன போட்டி நடைபெறும்.

குரலிசை போட்டியில் முறையாக கர்நாடக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாடவேண்டும். பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனப் போட்டியில் அதிகபட்சமாக 3 நிமிடம் ஆட அனுமதிக்கப்படுவார்கள்.

இப்போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. கிராமிய நடனப் போட்டியில் நமது பாரம்பரிய கரகம், காவடி, பொய்க்கால் குதிரை போன்ற நடனங்கள் மட்டும் ஆடப் பெற வேண்டும்.

மதியம் 2 மணிக்கு ஓவியப்போட்டி நடைபெறும். இதற்கான ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றை போட்டியாளர்கள் கொண்டு வர வேண்டும். தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.

பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். இதில், முதல் பரிசு பெறும் சிறுவர்கள் அரசின் செலவில் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு கோயம்புத்தூர் மண்டலக் கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை 0422 2610290 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...