குறு, சிறு தொழில் நிறுவனங்களில் பணி ஆணைகள் 40 சதவீதம் குறைந்ததால், ஹோட்டல்களுக்கு வேலை தேடிச் செல்லும் தொழிலாளர்கள்..!

கோவையில் செயல்படும் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணி ஆணைகள் 40 சதவீதம் குறைந்த நிலையில், தொழில்நுட்ப பணியாளர்கள் ஹோட்டல் ஊழியர்களாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தகவல்.


கோவை: தொழில் நகரமான கோவை ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், பம்ப்செட், வார்படம், கிரைண்டர், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. மேலும் கோவையில் 1.5 லட்சம் பதிவு செய்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

கோவையில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பம்ப்செட், வார்படம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் நிலவும் மந்த நிலை காரணமாக கோவையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணி ஆணைகள் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்நுட்ப பணியாளர்கள் கூட ஹோட்டல் தொழிலாளர்களாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் திருஞானம் கூறியதாவது, பருவமழை, உலகளாவிய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பணி ஆணைகள் 40 சதவீதம் குறைந்துள்ளது.

இதனால் தொழில் முனைவோர் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். ஜனவரிக்கு பின் நிலைமை சீரடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



இதேபோல், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் (டாக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது, கொரோனா நோய் தொற்று மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது மீண்டும் ஜிஎஸ்டி மின்கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பணி ஆணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறு, சிறு தொழில்கள் வளர்ச்சியில் மத்திய அரசும் மாநில அரசும் ஒரே நிலைப்பாடு தான் கொண்டுள்ளன.

நாங்கள் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தியும் பலனில்லை. 30 குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் 5 ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே பெயரளவுக்கு செயல்படுகின்றன. பிட்டர், டர்னர், வெல்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை.

இதனால் நிலைமை சீரடையும் வரை ஹோட்டல் உள்ளிட்ட சேவை துறையின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்ற சென்று கொண்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் மிகவும் ஆபத்து.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...