கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமான சேவை தொடங்கப்படாதது ஏன்? - அதிகாரிகள் விளக்கம்

கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படாதது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், விரிவாக்க பணிகள் தாமதமே காரணம் என அதிகாரிகள் விளக்கம்.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உள்பட சுற்று வட்டாரத்தில் உள்ள 7 மாவட்ட மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். விமான நிலைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு 627 ஏக்கரில் விரிவாக்க திட்டம் 2010-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இன்று வரை நிலங்களை தமிழக அரசு விமான நிலைய ஆணையகத்துக்கு ஒப்படைக்காததால் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இருப்பினும் தற்போது உள்ள ஓடுதளத்தில் திருப்பி விடப்படும் வெளிநாட்டு விமானங்கள் எளிதில் தரையிறங்கி புறப்பட்டு செல்லும் நிலையில் கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்காதது தொழில்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக கொங்கு குளோபல் போரம் (கேஜிஎப்) கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் கூறியதாவது, கோவை விமான நிலையத்தில் தற்போது விமான ஓடுதளம் 9,760 அடியாக உள்ளது.

தற்போது கோவையில் உள்ள ஓடுதள பாதையில் மோசமான வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருப்பி விடப்படும் பல வெளிநாட்டு விமானங்கள் (வைட் பாடி) எளிதில் தரையிறங்கவும், புறப்பட்டு செல்லும் போது பல்வேறு கோரிக்கைகள் விடுத்தும் இன்று வரை பன்னாட்டு விமான சேவை அதிகரிக்கப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

தமிழக அரசு விரிவாக்க திட்டத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்தியுள்ளது. 80 சதவீதத்துக்கும் மேல் பணிகள் முடிந்த நிலையில் விரைவில் நில்ங்களை விமான நிலைய ஆணையகத்துக்கு ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, பெரிய விமானங்கள் இரு வகைப்படும். நேரோ பாடி மற்றும் வைட் பாடி என்பதாகும். பன்னாட்டு விமான நிறுவனங்கள் இரண்டு வகை விமானங்களையும் சேவைக்கு பயன்படுத்துக்கின்றன.

கோவையில் நேரோ பாடி வகை விமானங்கள் எளிதில் கையாள முடியும். வைட்பாடி விமானங்களை கையாள முடியாது என்பதை விட அவற்றை கையாள்வதில் சற்று கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

பிரதமர் மோடி பயன்படுத்தும் விமானம் வைட்பாடி ரகத்தை சேர்ந்தது. பிரதமர் வருகையின் போது கோவையில் இந்த விமானம் ஒரு முறை தரையிறங்கி, புறப்பட்டு சென்றுள்ளது.

ஓடுதள நீளம் 12 ஆயிரம் அடியாக அதிகரித்தால் வைட் பாடி ரகத்தை சேர்ந்த விமானங்கள் எளிதில் கையாள முடியும். தவிர பயணிகளுக்கு தேவையான வசதிகளை கொண்ட உள்கட்டமைப்பு வசதிகளும் விமான நிலையத்தில் அமைக்க முடியும்.

இதனால் பன்னாட்டு விமான சேவையை கோவையில் தொடங்க பல வெளிநாட்டு விமான நிறுவனங்களும் ஆர்வம் காட்ட தொடங்குவார்கள்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...