ஆளுநரை அழைத்து வந்து அசிங்கப்படுத்துவதா..? - கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆவேசம்

தி.மு.க-வுக்கு ‘தமிழ்நாடு முன்னேற்ற கழகம்’ என பெயரை மாற்ற தயாரா? என்றும், திராவிட மாடல் என்பதை தமிழ்நாடு மாடல் என்று சொல்ல தயாரா? என்றும் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.



கோவை: திராவிட முன்னேற்ற கழகம் என்பதை 'தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்' என்றும், திராவிட மாடல் என்பதை தமிழ்நாடு மாடல் என்று சொல்ல தயாரா என பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழக சட்டப்பேரவையில் மரபுப்படி ஆளுநர் உரையாற்றி உள்ளார். ஆளுநர் உரைக்கு பொதுவாக எதிர்க்கட்சிகள் தான் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால், ஆளுநருக்கு ஆளும் கட்சியான திமுகவே எதிர்ப்பு தெரிவித்து கேவலமான நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். முன்கூட்டியே திட்டமிட்டு, கூட்டணி கட்சிகளை ஏவி விட்டு, ஆளுநரை அவமதித்துள்ளனர். இது கடும் கண்டனத்திற்குரியது.

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனம் அவருக்கு அளித்த கடமைகளின் படியே செயல்பட்டு வருகிறார். ஆளுநர் பதவி என்பது நியமன பதவியாக இருக்கலாம். ஆனால், அவர், இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பிரதிநிதி. ஆளுநர் பதவியை பா.ஜ.க அரசு புதிதாக உருவாக்கவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய பதவி. எனவே, ஆளுநரை அவமதிப்பது சட்டமேதை, மக்கள் தலைவர் டாக்டர் அம்பேத்கரை அவமதிப்பதற்கு சமம்.

ஆளுநர் பதவி என்பது தேவையில்லாத பதவி என்று தி.மு.கவினர் விமர்சிக்கின்றனர். அப்படியெனில், 1989 - 1990, 1996-1998, 1999 – 2013 வரை மத்திய அரசில் அங்கம் வகித்த போது, காங்கிரஸை மிரட்டி மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றபோது, ஆளுநர் பதவியையே நீக்கம் செய்ய, தி.மு.க நடவடிக்கை எடுத்திருக்கலாமே.

ஆளுநர் பதவியை நீக்கம் செய்யாவிட்டால், மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவு தர மாட்டோம் என, 2004-ல் தி.மு.க கூறியிருக்கலாமே. ஏனெனில் 2004 - 2009 வரை ஐந்து ஆண்டுகள் தி.மு.க தயவில் தானே, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தது?.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சென்னா ரெட்டி, சுர்ஜித்சிங் பர்னாலா போன்ற ஆளுநர்களை பயன்படுத்தி, மாநில அரசுக்கு திமுக கடும் நெருக்கடி கொடுத்தது. அப்போதெல்லாம், மாநில சுயாட்சி, மாநில உரிமையெல்லாம் என்ன ஆனது?.

திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல், வாரிசு அரசியல் போன்றவற்றை மறைப்பதற்காக, தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். திமுகவின் சித்தாந்தத்தை பேசுமாறு ஆளுநரை நிர்பந்திப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதனை திசைதிருப்பும் திட்டத்துடன், ஆளுநரை அசிங்கப்படுத்தியுள்ளனர்.

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 'தமிழ்நாடு' என்று சொல்ல வேண்டாம் என்றோ, 'தமிழ்நாடு 'என்பதற்கு எதிராகவோ எதுவும் பேசவில்லை. 'தமிழகம்' என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று தான் சொன்னார்.

'தமிழகம்' என்பது பொருத்தமாக இருக்கிறது என்பதால் தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரும், தமிழகம் என்பதை பயன்படுத்தி வந்தனர். 'தலைநிமிர்ந்த தமிழகம், மனம் குளிருது தினந்தினம்' என்று, தி.மு.க. அரசு விளம்பரம் செய்து வருகிறது.

மறைந்த கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் இந்த வாசகத்தை தி.மு.கவினர் வைத்திருந்தனர். முதலமைச்சர் ஸ்டாலினும் இந்த வாசகத்தை, தனது சமூக ஊடக பக்கங்களில் முகப்பு படமாக வைத்திருந்தார்.

'தமிழ்நாடு' என்று தான் சொல்ல வேண்டும். 'தமிழகம்’ என்று தான் சொல்ல வேண்டும் என, திமுக கூறுகிறது. அப்படியெனில், 'திராவிட மாடல்' என்பதற்குப் பதிலாக, 'தமிழ்நாடு மாடல்' என்று சொல்லலாமே. தங்கள் கட்சியின் பெயரை ஏன், 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று வைத்துள்ளனர். 'தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்' என வைத்திருக்கலாமே.

ஆந்திராவில், 'தெலுங்கு தேசம்' என்றுதானே கட்சி உள்ளது. 'திராவிட தேசம்' என்று அவர்கள் பெயர் வைக்கவில்லையே. தி.மு.க.வுக்கு ஏன் இந்த இரட்டை வேடம்?.

'தமிழ்நாடு' என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், தி.மு.க.வினருக்கும் விருப்பமானது என்றால், 'தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்' என்று பெயரை மாற்ற தயாரா? 'திராவிட மாடல்' என்பதை 'தமிழ்நாடு மாடல்' என்று சொல்ல தயாரா?.

இவ்வாறு வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...