கோவையில் விற்பனைக்குத் தயாராகும் வண்ண வண்ணப் பொங்கல் பானைகள்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, கோவையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பொங்கல் பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: தமிழர்களின் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் பண்டிகைகளில் முக்கியமானது தைப்பொங்கல். ஆண்டுதோறும் தை முதல் நாள் பொங்கல் பண்டிகையாக தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.

அறுவடைத் திருநாள் என்று கூறப்படும் இந்த பொங்கல் பண்டிகையின்போது, மண்பானைகளில் பொங்கல் செய்து, கரும்பு, மஞ்சள் வைத்து படையலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது மரபு.



அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் மண்ணால் ஆன பொங்கல் பானைகள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.



தரமான களிமண்ணை தேர்வு செய்து, பல கட்டங்களாகப் பக்குவப்படுத்தி இந்த மண்பானைகள் உருவாக்கப்படுகிறது. அப்படி உருவாக்கப்படும் மண்பானைகளை சுமார் ஒரு வாரம் வரை நிழலில் காயவைத்து, பின்னர் சூளையில் வைத்து சுட்ட பிறகே அது பயன்படுத்துவதற்கு ஏற்றதாக மாறுகிறது.

இந்த மண்பானைகளை அப்படியே விற்பனை செய்துவந்த காலம்போய், தற்போது மக்களின் ரசனைக்கு ஏற்ப அவற்றை அழகுபடுத்தி விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர் விற்பனையாளர்கள்.



அந்த வகையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் விற்பனைக்கு தயாராக உள்ள மண்பானைகளை அழகுபடுத்தும் பணியில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வண்ண சாயங்களைக் கொண்டு பானைகளை விதவிதமாக அழகுபடுத்தி, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அவற்றை சாலையோரங்களில் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ளனர்.



நவீன யுகத்தில் பொங்கல் வைப்பதற்கு பித்தளை, செம்பு, எவர்சில்வர் என எத்தனையோ வகையான உலோகங்களில் பொங்கல் பானைகள் கிடைத்தாலும், இன்றும் மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானைகளுக்கான மவுசு இன்னும் குறையவில்லை என்பதுதான் நிதர்சனம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...