பஞ்சு விலை கேண்டி ரூ.62 ஆயிரமாக குறைந்தது - இறக்குமதி வரியை நீக்க ஜவுளித் துறையினர் வலியுறுத்தல்

பஞ்சு விலை தற்போது ஒரு கேண்டி ரூ.62 ஆயிரமாக குறைந்துள்ளதால், ஏற்றுமதி அதிகரித்து உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், இறக்குமதி வரி 11 சதவீதத்தை நீக்க வேண்டும் என ஜவுளித் தொழில்துறையினர் வலியுறுத்தல்.


கோவை: பஞ்சு விலையில் காணப்படும் நிலையற்ற தன்மையால், இந்திய ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு மே மாதத்தில் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை ரூ.1 லட்சத்தை கடந்து புதிய வரலாறு படைத்தது. மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக விலை குறைய தொடங்கியது.



இந்திய பருத்தி கூட்டமைப்பின் (ஐசிஎப்) தலைவர் துளசிதரன் கூறும்போது, “பஞ்சு விலை தற்போது ஒரு கேண்டி ரூ.62 ஆயிரமாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு பின் சந்தையில் பஞ்சு வரத்து கணிசமாக அதிகரிக்கும். இதனால் விலை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. விலை குறைந்தால் இந்தியாவில் இருந்து பஞ்சு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும். இதன் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் உள்நாட்டு தேவைக்கு பஞ்சு தட்டுப்பாடு ஏற்படும்” என்றார்.

இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (சிட்டி) தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:



கடந்தாண்டு பருத்தி விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.12,500-க்கு மேல் விலை கிடைத்தது. பெரும்பாலும் விவசாயிகளும், பருத்தி வியாபாரிகளும் 60 சதவீதத்துக்கு குறைவாகவே சந்தைக்கு கொண்டு வந்தனர்.

இந்திய ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 28 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் நஷ்டத்தை தவிர்க்க 30 முதல் 60 சதவீதம் வரை உற்பத்தி நிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை கடந்த 10 மாதங்களாக நிலவி வருகிறது.

பஞ்சு ஏற்றுமதி அதிகரித்து உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க பஞ்சுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரி 11 சதவீதத்தை மத்திய அரசு நீக்க வேண்டும். பருத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை பாதுகாப்பாக உள்ளதால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படாது.

பன்னாட்டு பருத்தி பஞ்சு வியாபாரிகள் மீண்டும் இந்திய பருத்தி பொருளாதாரத்தை சீர்குலைத்து இந்திய ஜவுளித்தொழிலில் பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, பஞ்சு மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்குவது மட்டுமே 10 மாதங்களாக சரிவை சந்தித்து வரும் ஜவுளித்தொழிலுக்கு நிவாரணமாக அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...