'சமூகநீதி குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு அருகதை இல்லை..!' - கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

மோடி குறித்த பிபிசி ஆவணப்படுத்தை தமிழ்நாட்டில் யார் போட்டாலும் பிரச்சினை இல்லை. அது ஒரு பொய் செய்தி. அதையெல்லாம் பார்த்து மோடியின் மீது மக்களுக்கு மதிப்பு அதிகரிக்கதான் போகிறது - பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.



கோவை: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் பழனி பாதயாத்திரை தொடக்க விழாவில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டார்.



பாத யாத்திரையை தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:



எம்எல்ஏ வானதி சீனிவாசனின் பயணம் ஒரு சரித்திர பயணமாக, புனித பயணமாக வெற்றி பயணமாக இருக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை. ராகுல் காந்தி நடைபயணம் எதற்காக தொடங்கப்பட்டது என்பதில் பல்வேறு சிக்கல்களும் கேள்விகளும் எழுந்துள்ளது. எதிர்பார்த்த எழுச்சியை யாரும் காணவில்லை. எதிர்பார்த்த எழுச்சி இந்த நடை பயணத்தில் அவருக்கு கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு அமைச்சர், கல் கொண்டு எறிகிறார். இன்னொரு அமைச்சர் மேடையில் தொண்டனை அடிக்கிறார். டி ஆர் பாலு கோவிலை இடிப்பதை பெருமையாக பேசினார். அதேசமயம் பேசி முடிக்கும் பொழுது பெரிய கோவிலை கட்டி கொடுத்துள்ளேன் எனவும் கூறுகிறார்.

நேற்று ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக வேலை செய்வதற்காக அமைச்சர்கள் பேசிய வீடியோவையும் நாம் பார்த்தோம். ஏ.வா.வேலு அந்த வீடியோவை தான் எடிட் செய்து வெளியிட்டதாக கூறுகிறார். நான் அவருக்கு சவால் விடுகிறேன் ஒரிஜினல் வீடியோவை அவர் எங்கு கூறினாலும் நான் அங்கு அளிக்கிறேன்.

தமிழ்நாடு காவல்துறைக்கும் அளிக்கிறோம் அந்த வீடியோவை ஆய்விற்கு தமிழக முதல்வர் உட்படுத்த வேண்டும். நீலகிரியின் பொறுப்பு அமைச்சரை மிக தவறாக கீழ்த்தரமான வார்த்தைகளால் அமைச்சர் கே என் நேரு பேசியுள்ளார். அந்த வீடியோவில் நாம் பார்க்க வேண்டியது தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்றால் கே என் நேரு எதைப் போன்ற வார்த்தைகளால் அந்த அமைச்சரை பேசுகிறார், என்பதை பார்க்க வேண்டும். இவர்கள் சமூக நீதியை பற்றி நம்மிடம் பாடம் எடுக்கிறார்கள்.

இந்த வீடியோவை பாஜகவினர் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க உள்ளோம். ஏ.வ. வேலு அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகி செல்ல நான் தயார். அது எடிட் செய்யப்படாத வீடியோ என நிரூபிக்கப்பட்டால் தமிழக முதல்வர் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

சேலத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞர் கோவிலுக்குள் சென்றதற்கு திமுக பிரமுகர் தரக்குறைவாக பேசியுள்ளார். இது சேலத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் நடக்கிறது. இதைக் கேட்டால் சமூகநீதி என்று திமுகவினர் பேசுகிறார்கள். திமுகவிற்கு சமூக நீதியை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் 30 நாட்களாகியும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் தற்போது சிபிஎஸ்சிஐடி க்கு கொடுத்துள்ளார்கள்.



ஈரோடு இடைத் தேர்தலை பொருத்தவரை, தற்பொழுது உள்ள அமைச்சர்கள் பட்டியலிட்டு பணம் விநியோகம் செய்வார்கள் என நான் கூறியது தான் நடைபெற்று வருகிறது. பாஜகவை பொருத்தவரை ஒரு உறுதியான வேட்பாளர் நின்று அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற வேண்டும். இது எங்களுக்கான(பாஜக) தேர்தல் இல்லை. எங்களுக்கான தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல்தான்.

கடந்த 45 நாட்களாக தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பட்ட குழுக்களை பாஜகவினர் டெல்லி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க வைத்துள்ளோம். இந்த பட்ஜெட் தொழில்துறைக்கான பட்ஜெட் . ஆத்ம நிர்ப பாரத் என்பதை வலிமைப்படுத்தக் கூடிய பட்ஜெட் ஆக இது இருக்கும்.

பிபிசி ஆவணப்படுத்தை தமிழ்நாட்டில் யார் போட்டாலும் தங்களுக்கு பிரச்சினை இல்லை. அது ஒரு பொய் செய்தி. அதையெல்லாம் பார்த்து மோடியின் மீது மக்களுக்கு மதிப்பு அதிகரிக்க தான் போகிறது. இதனை திரையிட்டால் பாஜக தொண்டர்கள் யாரும் அதனை தடுக்க மாட்டார்கள். திரையரங்குகளில் கூட வெளியிடுங்கள்.

வெளியில் இருந்து வரக்கூடிய நபர்கள் குறைந்த சம்பளத்தை பெற்றுக்கொண்டு வேலை செய்கின்ற பொழுது அவர்களுக்கு அந்த அட்வான்டேஜ் கிடைக்கிறது. உத்திரப்பிரதேச அரசு மாநிலத்தில் பொருளாதாரத்தில் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் உத்தரபிரதேச அரசு இரண்டாவது இடத்திலும் தமிழ்நாடு நான்காவது இடத்திலும் வந்துவிடும்.

பத்து ஆண்டுகளில் இதே நிலை தொடர்ந்தால் பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் இருந்து யாரும் தொழில் செய்ய தமிழகம் வர மாட்டார்கள் எனவும் அப்போதே இங்குள்ள வேலைகளை யார் பார்ப்பார்கள் என பத்து நாட்களுக்கு முன்பே நான் கேள்வி எழுப்பி உள்ளேன். எனவே இங்கு வருபவர்களை வைத்து யாரேனும் அரசியல் செய்யலாம் என நினைத்தால் அது தவறானது.

கர்நாடகாவில் காவிரி பிரச்சனை வரும் பொழுது தமிழர்கள் வெளியேற வேண்டும் என அங்கு யாரேனும் கூறினால் எந்த கட்சி அங்கு இருந்தாலும் முதல் போராட்டத்தை பாஜக செய்யும். தமிழ் நாடு மக்களும் பல்வேறு மாநிலங்களில் பணி செய்து வருகிறார்கள். அவர்களை இங்கேயே வரும்படி யாரேனும் கூறுவார்களா. அதேசமயம் பிற மாநில அரசுகள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து தங்களது மக்கள் தான் இதை செய்ய வேண்டும் என தமிழர்களை வெளியேறும்படி கூறினால் தமிழக மக்கள் எங்கு செல்வார்கள் என நினைத்து பார்க்க வேண்டும்.

இதனை ஆந்திரா கர்நாடகா போன்ற அரசுகள் செய்ய ஆரம்பித்தால் லட்சக்கணக்கான தமிழர்கள் திரும்ப வர வேண்டி இருக்கும். இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை என நாமே சொல்ல போகிறோம். அரசியல்வாதிகளும் சொல்லப் போகிறார்கள். தங்களுக்கும் முதல்வருக்கும் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் கூட அவர் எங்களுடைய முதலமைச்சர் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் என்பதில் பாஜக எப்போதும் விட்டுக் கொடுக்காது.

அதேபோல ஆளுநரையும் நம்முடைய ஆளுநர் என்பதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இடையில் இருப்பவர்கள் தான் இதில் அரசியல் செய்கிறார்கள்.

இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...