கோவைக்கு என்ன தேவை..? - சாலை உட்கட்டமைப்பு பற்றி சிம்ப்ளிசிட்டியின் சிறப்பு தொகுப்பு!

பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினர் முன்வைக்கும் தேவைகளை ஆராய்ந்து சிம்ப்ளிசிட்டி முன்வைக்கும் கோரிக்கைகள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் தொகுப்பு!!



கோவை: கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தடுக்கவும் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கவும், சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

அவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அவை,

1) கோவையில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், விபத்துக்களை தவிர்க்கும் விதமாக மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவை, திருச்சி சாலையில் சிங்காநல்லூர் மற்றும் சிந்தாமணி புதூர் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். இதேபோல், பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் மற்றும் மலுமிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்.

மேலும், சத்தியமங்கலம் சாலையில் சரவணம்பட்டி பகுதியிலும், மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் மற்றும் சாய்பாபா கோவில் ஆகிய இடங்களிலும், ஆனைக்கட்டி சாலையில் லாலி சாலை சந்திப்பு மற்றும் இடையர்பாளையம் ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2) சத்தியமங்கலம் சாலையில் கணபதியிலிருந்து சரவணம்பட்டி வரை உயர்மட்ட நெடுஞ்சாலையும் அதற்குமேல் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் தண்டவாளமும் அமைக்கப்பட வேண்டும்.

கணபதி - சரவணம்பட்டி இடையேயான சாலையின் இருபுறமும் இடமில்லாததால், டெக்ஸ்டூல் முதல் சூர்யா மருத்துவமனை சந்திப்பு வரை நிலம் கையகப்படுத்தும் பணிகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

3) அவிநாசி சாலையில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை கிழக்கில் நீலாம்பூர் வரை நீட்டிக்க வேண்டும்.

4) உப்பிலிபாளையம் மேம்பாலம் தற்போதைய மற்றும் எதிர்கால போக்குவரத்து நெரிசலுக்கு ஈடுகொடுக்கும் வகையில், மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும்.

5) மதுக்கரையிலிருந்து நரசிம்ம நாயக்கன்பாளையம் வரையிலான மாநில நெடுஞ்சாலை துறையால் கட்டப்பட்டு வரும் மேற்கு புறவழிச்சாலையான சிறுவாணி சாலை, தொண்டாமுத்தூர் சாலை, மருதமலை சாலை மற்றும் ஆனைக்கட்டி சாலை ஆகிய இடங்களில் உள்ள 4 மேம்பாலங்களை கூடிய விரைவில் முடிக்கப்பட வேண்டும்.

6) கோவையில் இருந்து கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், 260 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆறு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட வேண்டும். தற்போதுள்ள செங்கப்பள்ளி வரையிலான 60 கிலோமீட்டர் விரைவுச் சாலையை சேலம் வழியாக கிருஷ்ணகிரி வரை 200 கிலோ மீட்டர் கூடுதலாக நீட்டிக்கப்பட வேண்டும்.

7) கோவையில் இருந்து கரூர் வரையிலான 120 கிலோமீட்டர் நீளமுள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும். இந்த சாலையானது பல்லடம், பொங்கலூர், அவினாசி பாளையம், காங்கேயம், வெள்ளக்கோவில் மற்றும் பரமத்தி ஆகிய ஆறு நகரங்களை கடந்து செல்லும் வகையில், மேம்பாலங்கள் உடனான புறவழி சாலையாக விரிவுபடுத்த வேண்டும்.

8) கோவையில் இருந்து அன்னூர், பி.புளியம்பட்டி, சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி வரை செல்லும் 70 கி.மீ.க்கு இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும். இந்த நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் குறுக்கே சாம்ராஜ் நகருக்குச் செல்ல மேம்பாலங்களுடன் சுரங்கப்பாதையும் அமைக்கலாம்.

9) கோயம்புத்தூர் வழியாக செல்லும் ஆறு தேசிய நெடுஞ்சாலை சாலைகள் மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டபடி நகரின் கிழக்கில் ஒரு பைபாஸ் சாலை அமைக்கப்பட்டால் மிகவும் உதவியாக இருக்கும்.

10) நீலாம்பூரிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் மதுக்கரை வரையிலான அதிவிரைவுச் சாலைக்கு இடையே உள்ள 26.5 கிலோமீட்டர் தூர சாலை மிகவும் ஆபத்தான வகையில் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

இதேபோல், L&T பைபாஸ் சாலை, NH 544 வழக்கின் கீழ் உள்ளதால், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தனது சொந்த நிதியைப் பயன்படுத்தி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இருவழிச் சாலையை மேம்பாலங்களுடன் கூடிய நான்கு வழி நெடுஞ்சாலையாக மேம்படுத்த வேண்டும்.

இந்த திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு புதிய தேவைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

11) மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் (MMLP)என்பது குறிப்பிட்ட நகரத்தின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட வேண்டிய ஒரு முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது.

12) கோவையில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவை, சிறுவாணி சாலையில் செல்வபுரம் முதல் இருட்டுபள்ளம் வரையிலான சாலை, காந்திபார்க் முதல் தொண்டாமுத்தூர் வரை SH81 சாலை ஆகியவற்றை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.

இதேபோல், மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைக் கழகத்துக்கு சென்ட்ரல் தியேட்டர் சந்திப்பு வரையிலான சாலை, ஆனைக்கட்டி சாலையில் காந்தி பூங்கா முதல் மாங்கரை வரையிலான சாலை, வடவள்ளியில் இருந்து கவுண்டம்பாளையம் வரையிலான சாலையையும் நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.

கணுவாயில் இருந்து துடியலூர் வழியாக சரவணம்பட்டி செல்லும் சாலை, சரவணம்பட்டியில் இருந்து காளப்பட்டி வழியாக நீலம்பூர் செல்லும் சாலை, பல்லடம் முதல் பிச்சனூர் வரையிலான கொச்சி எல்லைச் சாலை, போத்தனூர் சாலையில் நஞ்சுண்டாபுரம் முதல் வெள்ளலூர் வரையிலான சாலை மற்றும், சத்தியமங்கலம் சாலையில் கரட்டு மேடு முதல் பல்லடம் கள்ளபாளையம் வரை கொச்சி எல்லைச் சாலை ஆகியவற்றை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும்.

13) லங்கா கார்னர் - திருச்சி இடையிலான சாலை, கிகானி உயர்நிலை பள்ளி - சாஸ்திரி சாலை, சிவானந்தா காலனி சாலை, சங்கனூர் சாலை, துடியலூர் ஆகிய நகரின் முக்கிய சந்திப்புகளில் ரயில் மேல் பாலம் அமைக்க வேண்டும்.

14) மேட்டுப்பாளையத்திற்கான பைபாஸ் சாலையான காரமடை புறவழிச்சாலை 19(3) அறிவிப்புக்கு பிறகும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ள நிலையில், அதனை விரைந்து முடிக்க வேண்டும்.

15) நகருக்குள் காணாமல் போன இணைப்புச் சாலைகள், ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்டு, முக்கிய சாலைகளின் நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகள் கோவை மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளாக உள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...