'2025-க்குள் காசநோய் இல்லா தமிழ்நாடு என்பதுதான் இலக்கு..!' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

கோவை மாநகராட்சி- 64, பொள்ளாச்சி- 2, மேட்டுப்பாளையம், வால்பாறை, கூடலூர், கவுண்டம்பாளையம், கருமத்தம்பட்டி நகராட்சிகளில் தலா ஒரு மருத்துவமனை என கோவை மாவட்டத்தில் 72 மருத்துவமனைகள் அமைய உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.



கோவை: கோவையில் ஏற்கனவே இருக்கின்ற மருத்துவமனைகளுடன் 72 நகர்ப்புற நகரவாழ்வு மையங்களுக்கான அனுமதியை முதல்வர் அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.



கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்து மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



கோவையைப் பொறுத்தவரை முதலமைச்சர் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்குத் தொடர்ச்சியாகப் பலகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனடிப்படையில், கோவையில் ஏற்கனவே இருக்கின்ற மருத்துவமனைகளுடன் 72 நகர்ப்புற நகரவாழ்வு மையங்களுக்கான அனுமதியை முதல்வர் அளித்துள்ளார்.

இந்த 72 இடங்களிலும் ஒரு மருத்துவர் ஒரு மருந்தாளுநர், ஒரு உதவி சுகாதார ஆய்வாளர், ஒரு உதவியாளர் என்கின்ற அடிப்படையில் நான்கு பணியாளர்களுடன் மருத்துவமனைகள் இயங்க உள்ளன. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த மருத்துவமனைகள் செயல்படும்.

தமிழ்நாடு முழுவதும் இது போன்ற 708 மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 72 மருத்துவமனைகள் கோவை மாவட்டத்தில் அமைய உள்ளன. அதில் கோவை மாநகராட்சிக்கு 64 பொள்ளாச்சிக்கு 2, மேட்டுப்பாளையத்திற்கு 1, வால்பாறைக்கு 1, கூடலூர் கவுண்டம்பாளையத்திற்கு 1, கருமத்தம் பட்டி நகராட்சிக்கு 1 என அந்த மருத்துவமனைகள் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இந்த பணிகளை விரைந்து முடித்து ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். மேலும் ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்று மணியக்காரன் பாளையம் பகுதியில் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்று அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

ESI-க்கு மேலும் சிறப்புத் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் முதலாம் ஆண்டுக்கான கல்வி நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் இந்த மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் பணியாற்றியுள்ளார்கள். இப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பாராட்டுகின்ற வகையில் வருகின்ற ஐந்தாம் தேதி சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.



இந்த மருத்துவர்களும் பங்கேற்பார்கள். வருகின்ற மூன்றாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் இத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், DMEல் இருந்த 85 காலி பணியிடங்களும், DMSல் இருந்த 92 பணியிடங்களும், Dark Room Assistant-ல் 177 ஆகிய பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

உணவு பாதுகாப்புத் துறையில் 19 பணி நியமனங்களையும் வழங்க உள்ளார். பொதுச் சுகாதார அமைப்பில் 16 பணி நியமனங்களைக் கருணை அடிப்படையில் வழங்க உள்ளார். DMA-ல் 5 மற்றும் ஒப்பந்தப் பணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் என மொத்தம் 787 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

தேவைப்பட்டால் கூடுதல் பணி நியமனங்களும் பல்வேறு துறைகளில் கருத்துக்களைக் கேட்டு நடைபெறும். கடைகளில் குட்கா பொருட்களை விற்கக் கூடாது என முதலமைச்சர் என்பதில் உறுதியாக உள்ளார்.

இதில் சட்டப்பூர்வமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு அளிக்க உள்ளோம். 2013இல் இருந்து இது நீண்டு வருவதால் தேவைப்பட்டால் சட்டத்தையும் கூட திருத்தும் நடவடிக்கைகளை வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் எடுப்போம்.

காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பண உதவி மட்டும் அல்லாமல் தேவையான உணவுப் பொருட்களை NGO மூலம் வழங்கி வருகிறோம். காசநோயைக் கண்டறியும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2025-க்குள் காசநோய் இல்லா தமிழகம் என்பதுதான் மக்கள் நல்வாழ்வுத்துறை இலக்காகவும் உள்ளது. கூடிய விரைவில் தொழுநோய் இல்லாத நிலையும் தமிழ்நாட்டில் உருவாகும். குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில்தான் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள். அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...