கோவையில் ரூ.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் - பீகார் இளைஞர் கைது

கோவை நீலாம்பூர் அருகே இருசக்கர வாகன சென்றவரை வழிமறித்து சோதனை செய்தபோது, ரூ.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 27 ஆயிரம் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் தகவல்.


கோவை: கோவையில் கஞ்சா சக்லேட் புழக்கம் அதிகரித்து வருவதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கடந்த சில வாரங்களாக அதிரடியாக சோதனை நடத்தி கஞ்சா கும்பலை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் டிஎஸ்பி வெற்றிச்செல்வன் மேற்பார்வையில், போலீசார் இன்று காலை நீலாம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்குப் பின், முரணாக பதிலளித்தை தொடர்ந்து அவர் வைத்திருந்த மூட்டையைப் பரிசோதித்த போது அதில் கஞ்சா சாக்லேட்டுகள் பீகார் மாநிலத்திலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. பிடிபட்ட நபர் பீகார் மாநிலம், ஜமூய் மாவட்டம், அசல் மாநகரைச் சேர்ந்த திலீப் குமார்(38)எனவும், இவர் 22 ஆண்டுகளாக கோவை அருகே தெக்கலூரில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது.

இவர் இரண்டு நாட்களுக்கு முன்னதாக தான் பீகாரிலிருந்து இந்த சாக்லேட்டுகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளார். ஒரு சாக்லேட் 40 ரூபாய் என விற்கத் திட்டமிட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே குட்கா விற்பனை செய்ததாகக் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மூன்று வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் கோவை எஸ்.பி பத்ரி நாராயணன், கோவில்பாளையத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு வந்து குற்றவாளியை விசாரித்தார். பிடிபட்ட சாக்லேட்டுகளை பார்வையிட்டார்.

பின்னர் எஸ்.பி பத்ரி நாராயணன் கூறுகையில், கடந்த சில மாதங்களாகக் கஞ்சா கும்பல் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே மாதத்தில் 210 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. மேலும், பத்து லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள, 157 கிலோ எடையுள்ள 27 ஆயிரம் சாக்லேட்டுகள் பிடிபட்டன. கடந்த இரண்டு நாட்களுக்குள் 26 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது.

இந்த கஞ்சாவை இவருக்கு சப்ளை செய்தது யார்? இவர் யாருக்கு சப்ளை செய்கிறார். எனத் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

இவர் சிறு கும்பல்களுக்கு இந்த கஞ்சா சாக்லேட்டை விற்கத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இந்த கஞ்சா சாக்லேட்டை மொத்தமாக விற்பனை செய்யும் கும்பலையும் விரைவில் பிடிப்போம், என்றார்.

பின்னர் கஞ்சா சாக்லேட் குற்றவாளியைப் பிடித்த எஸ்ஐ 2, தலைமைக் காவலர் ஆகிய நான்கு பேருக்கும் ரொக்க பரிசு கொடுத்துப் பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...