'ரவுடித்தனம் செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..!' - ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

கோவையில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூர கொலை சம்பவங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட அதிரடி வேட்டையில் 2 நாட்களில் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவையில் கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் அடுத்தடுத்த இரண்டு கொலைகள் கொடூரமான முறையில் நடைபெற்றது. பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சத்திய பாண்டியன் என்ற ரவுடி கட்டப்பஞ்சாயத்து காரணமாக சஞ்சய் தலைமையிலான ரவுடி கும்பலால் நடுத்தெருவில் விரட்டி விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார்.



அதற்கு அடுத்த நாள் காலை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்புறம், குற்ற வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த கோகுல் என்ற ரவுடியை ஜோஸ்வா, கெளதம் உள்ளடக்கிய ரவுடி கும்பல், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அரிவாளால் ஓட ஓட வெட்டி கொன்றது.



இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை, தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் இரு கொலைகளும் பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் அரங்கேறியிருப்பது தெரியவந்தது.

இந்த நிலையிலே ரவுடிகளின் அட்டூழியத்தை அடக்க கோவை மாநகர காவல் ஆனையாளர் பாலகிருஷ்ணன், ரவுடி கும்பல்களை கைது செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில், கோவை மாநகர் முழுவதும் வாகன தணிக்கை செய்து சந்தேகத்திற்கிடமானோர் வீடுகளில் தணிக்கையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, கோவையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள ரவுடிகளின் பட்டியலையும் தயார் செய்த காவல்துறை, மொத்தமாக 64 வீடுகளில் சோதனை செய்து 11 வழக்குகளை பதிவு செய்து 33 ரவுடி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதில் 3 ரவுடிகளிடம் நன்னடத்தை பத்திரமெழுதி கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

தனிப்படையின் இந்த அதிரடி சோதனையில், கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் வகையில் ரவுடித்தனம் செய்யும் ரவுடிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கபடும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...