அரசாணைப்படி ரூ.701 சம்பளமாக வழங்குக..! - கோவையில் தூய்மை பணியாளர்கள் பிச்சை எடுத்து போராட்டம்!

கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 2017 அரசாணைப்படி ரூ.701 சம்பளமாக வழங்க வேண்டும். ஆனால் இஎஸ்ஐ, பிஎப் தொகை பிடித்தம் போக ரூ.421 மட்டுமே வழங்குவதாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் மண்டியிட்டு பிச்சை எடுத்து போராட்டம்.



கோவை: கோவை மாநகராட்சி தினக்கூலி பணியாளர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு அரசாணை படி நாள் ஒன்றுக்கு ரூபாய் 701 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதனை மாநகராட்சி நிர்வாகம் அமல்படுத்தாமல் 648 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்து அதிலும் இஎஸ்ஐ, பிஎப் தொகை பிடித்தம் செய்து 421 ரூபாய் மட்டுமே வழங்குவதாகக் கூறி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தினக்கூலி பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட தூய்மை பணியாளர்கள் உரிமை மீட்பு கூட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த பிச்சை எடுக்கும் போராட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில், கோரிக்கை பதாகைகளை ஏந்தியும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன பதாகைகளை ஏந்தியும் கையில் பாத்திரங்கள் ஏந்தியபடியும் தினக்கூலி பணியாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.



இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, மாநகராட்சியில் நிதி இல்லை என அலுவலர்கள் கூறுவதாகவும் மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அதிக சம்பளம் வழங்கப்படும் நிலையில், தினக்கூலி பணியாளர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்க மறுக்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினர். எனவே மாநகராட்சி நிர்வாகம் தின கூலிப் பணியாளர்களை வஞ்சிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.



இந்தப் போராட்டத்தில் கோவை மாவட்ட ஜீவா முனிசிபல் சுகாதாரப் பணியாளர் சங்கம், கோயமுத்தூர் லேபர் யூனியன், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளர் சங்கம், நம்மவர் தூய்மை பணியாளர் தொழிற்சங்கம், கோவை மாநகராட்சி அண்ணா சுகாதார பணியாளர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...