கோவையில் 1045 பேர் சாலை விபத்துகளில் பலி - தமிழக போக்குவரத்துத்துறை அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 12ஆயிரத்து 32 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துத்துறையின் புள்ளிவிவர அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. கோவையில் மட்டும் 1045 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழக எல்லைக்குள் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் போக்குவரத்து துறை கடந்த 2022-ம் ஆண்டு பதிவாகிய விபத்து தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் நடந்த 17 ஆயிரம் கோர விபத்துகளில் 12 ஆயிரத்து 32 பேர் மரணம் அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 4 ஆயிரத்து 893 பேரும், மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலையில் 952 பேரும், மாநில நெடுஞ்சாலையில் 6 ஆயிரத்து 187 பேரும் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.



கடந்த ஆண்டு தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 1,045 பேர் விபத்தில் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டில் 929 பேரும், திருப்பூரில் 877 பேரும், சேலத்தில் 827 பேரும், மதுரையில் 788 பேரும் பலியாகியுள்ளனர்.



இரு சக்கர வாகனங்களால் 7 ஆயிரத்து 392, கார், ஜீப் மற்றும் இலகு ரக வாகனங்களால் 2 ஆயிரத்து 927, லாரிகளால் 2 ஆயிரத்து 210, வேன், டெம்போக்களால் 1,424, அரசு பஸ்களால் 853, தனியார் பஸ்களால் 545, ஆட்டோக்களால் 403 மற்றும் பிற வாகனங்களால் 1,719 விபத்துகளும் நடந்துள்ளன. இவற்றில் சுமார் 42 சதவீத விபத்துகள் இரு சக்கர வாகனங்களால் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



விபத்துகள் அதிகரிப்பதற்கு, குண்டும், குழியுமான சாலை, மோசமான வடிவமைப்பு மற்றும் சாலையை முறையாக பராமரிப்பு செய்யப்படாதது ஆகியவைதான் முதன்மையான காரணமாக கூறப்படுகிறது. சாலைகளில் சாகசம் செய்யும் முனைப்பில் அதிக வேகமாக ஓட்டுவதால், சாலைகளில் விழுந்து மற்றும் தடுப்பு சுவரில் மோதி என இளைஞர்கள் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதேபோல, விபத்துகளால் படுகாயம் அடைந்தவர்கள் உடல் உறுப்புகளை இழந்தும் இருக்கிறார்கள். சிலர் காயம் அடைந்து, குணமாகியிருக்கிறார்கள். அடிக்கடி விபத்து நடப்பதாக கண்டறியப்பட்டுள்ள, கருப்பு பட்டியலில் இடம்பெற்ற இடங்களில், விபத்தை நிரந்தரமாக தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.



விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு நீண்ட கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கவும், மோட்டார் சைக்கிள்களுக்காக நெடுஞ்சாலைகளின் வடிவமைப்பில் திருத்தம் கொண்டு வரவும் மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் செயல்படும் மாநில சாலை போக்குவரத்து கவுன்சில் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவேற்ற, மாநில சாலை போக்குவரத்து கவுன்சில் உத்தரவிட்டு இருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழகத்தில் நடந்த 15 ஆயிரத்து 384 சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 373 ஆக இருக்கிறது.

விபத்து தரவுகளை மறுஆய்வு செய்யும்போது சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையில் மாறுபாடு ஏற்படும். அந்தவகையில், கடந்த 2017 மற்றும் 2020-ம் ஆண்டுக்கு இடையே விபத்து தொடர்பான தரவுகளை மறு ஆய்வு செய்தபின்னர் 22 ஆயிரம் உயிரிழப்புகள் கூடுதலாக சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தமிழக போக்குவரத்துத்துறையின் புள்ளிவிவர குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...