கும்கி யானை சின்னதம்பிக்கும், மக்னா யானைக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதியில் முகாமிட்டுள்ள தருமபுரி மக்னா யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து பிடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அதனை பிடிக்க உதவி வரும் சின்னதம்பி யானைக்கும், மக்னா யானைக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக வனத்துறை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை சுற்றுவட்டார பகுதியில் முகாமிட்டுள்ள தருமபுரி மக்னா யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி வனப்பகுதியில் உலா வந்த மக்னா யானைக்கு தற்பொழுது 42-45 வயதுக்கு மேல் இருக்கும் என்று கணிக்கின்றனர். 10 வருடங்களுக்கு மேலாக வனத்தை விட்டு வெளியேறி விவசாய விளை நிலங்களுக்குள்ளும், கிராம பகுதிகளுக்குள்ளும் அவ்வப்போது உலா வந்த இந்த யானை, அங்குள்ள தொட்டி தண்ணீரை பருகியும், தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பசுமையான விளை பயிர்களை பசுமையான உணவாக உட்கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறது.

வழக்கமாக ஒரு யானை மனிதர்கள் வாசம் நிறைந்த பகுதிகளுக்கு வந்தால் மோதல்கள் நடக்கும். ஆனால் இந்த மக்னா யானை 10 வருடங்களுக்கு மேல் ஊர் பகுதிகளில் உலா வந்தாலும், ஒருநாளும் ஒருவரையும் சீண்டியதாக வரலாரே இல்லை. அப்படிப்பட்ட யானை, அதிக விளை பயிர்களை உட்கொண்டு, விவசாய அறுவடையில் நட்டத்தை ஏற்படுத்தியதாலே இடம் மாற்ற முடிவு செய்யபட்டது.

அதனடிப்படையில் தர்மபுரி மக்னா யானையை இடம் மாற்றும் பணி நடந்தது. பிரபல யானையான தடாகம் சின்னத்தம்பி யானையால் பிடிக்கப்பட்டு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தருமபுரி மக்னா யானை கடந்த ஐந்தாம் தேதி பிடிபட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது.

மனித வாசம் பழக்கப்பட்ட தருமபுரி மக்னா யானை, அங்கிருந்து வெளியேறி, அதன் முந்தைய பூர்வீக இருப்பிடமான தர்மபுரி, கிருஷ்ணகிரி வனப்பகுதியை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. டாப்சிலிப்பில் இருந்து வடக்கு நோக்கி இறங்க ஆரம்பித்த இந்த யானை, பொள்ளாச்சி, மதுக்கரை, போளுவாம்பட்டி மார்கமாக நகர ஆரம்பித்து, தற்போது பேரூரில் இருக்கின்றது.

ஆனால் இந்த யானையை, தொடர்ந்து அதன் போக்கில் கண்காணிப்பதனை காட்டிலும், மீண்டும் கும்கி யானையை வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருக்கின்றனர். அதனடிப்படையில் தர்மபுரி மக்னா யானை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

மயக்க ஊசி செலுத்தி, சின்னத்தம்பி கும்கி உதவியுடன், காட்டு யானையின் வாழ்விடத்தை மாற்ற வனத்துறை முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு யானையை பிடித்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டாலும், அந்த யானை மீண்டும் வனத்தை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.



பத்து வருடங்களுக்கு மேலாக விளை நிலங்களில், பசுமையான தாவரங்களை உட்கொண்டும், தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பருகியும் பழக்கப்பட்ட இந்த யானை, முதிர்ந்து வரும் நிலையில் இனி அடர் வனம் செல்ல விரும்பாது. முந்தைய நிலையை நோக்கியே நகரும் என்று வன உயிரியல் ஆர்வலர்கள், இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தர்மபுரி மக்னா யானைக்கும், கோவை தடாகம் சின்னத்தம்பி யானைக்கும் பல்வேறு ஒற்றுமைகளை காண முடிகிறது. சின்னத்தம்பி யானை தடாகம் பகுதியில் உலா வந்தபோது யாரையையும் தொந்தரவு செய்யவில்லை. அதேபோன்று தருமபுரி மக்னா யானையும் யாரையும் தொந்தரவு செய்யவில்லை.



மனிதர்களை சீண்டி மனித உயிர் கொலைகளை இரு யானைகளும் நிகழ்த்தவே இல்லை. சின்னத்தம்பி யானை ஊருக்குள் உலா வந்தபோது அது பொதுமக்களை தவிர்த்து ஒதுங்கி செல்லும் யானையாக இருந்தது. தருமபுரி மக்னா யானையும் ஊருக்குள் வந்து பொதுமக்களை தவிர்த்து சாலைகளில் நடந்து செல்லும். சின்னத்தம்பி யானை பிடிபட்ட போது தன் சொந்த மண்ணிலிருந்து வெளியேறாமல் அடம் பிடித்தது.

மக்னா யானையும் தன் மண்ணிலிருந்து வெளியேற விருப்பமின்றி டாப்சிலிப்புக்கு மாற்றப்பட்டது. சின்னத்தம்பி யானையும் டாப்சிலிப்புக்கு தடாகத்திலிருந்து வாழ்விடம் மாற்றப்பட்டது. அந்த வகையில் தருமபுரி மக்னா யானை, தருமபுரியின் சின்னத்தம்பி என்று அழைக்கலாம்.



தடாகத்தில் பிடிபட்டு கும்கியாக மாற்றப்பட்ட அதே சின்னதம்பி, தருமபுரி வனப்பகுதிக்கு சென்று தருமபுரி மக்னா யானையை பிடிக்க உதவியது.



இன்று இரண்டாவது முறையாக மீண்டும் மாற்ற சின்னத்தம்பி கும்கி யானை டாப் சிலிப்பிலிருந்து வரவழைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், சொந்த மண்ணை மறவாத அதன் மீது பெருமளவில் ஈர்க்கப்பட்ட தருமபுரி மக்னா யானை, அதன் பூர்வீக இடத்தை நோக்கி பயணித்து வருகின்றன. இன்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட இருக்கின்ற தருமபுரி மக்னா யானை எங்கு விட்டாலும் அதன் பூர்வீக நிலப்பரப்பையே நாட இருப்பது அதன் செயல்பாடுகளே நமக்கு உணர்த்துகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...