முதல்வர் பிறந்தநாளில் கோவையில் 70 ஜோடிகளுக்கு திருமணம்! - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவை காளப்பட்டி அருகே நடைபெற்ற மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, முதல்வர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாகவும், அண்ணாமலை இன்னும் வாட்ச் பில் தரவில்லை என்றும் தெரிவித்தார்.


கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவையில் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.



கோவை காளப்பட்டி அருகே உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் செந்தில்பாலாஜி பேசியதாவது:

ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளுடன் முதலமைச்சர் பிறந்த நாளை கொண்டாட திட்டம் உள்ளது. முதல்வரின் 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கோவை மாவட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் கொடிசியா மைதானத்தில் வரும் 5-ம் தேதி 70 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது.

அதன் பிறகு 11:30 மணிக்கு வ.உ.சி மைதானத்தில் அரசு விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பின்னர் மாலை 4.30 மணிக்கு கொடிசியா சாலையில் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட கழகத்தின் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் துவங்கி வைத்து பரிசுகளை வழங்க உள்ளார்.

இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோவை புதூர் பகுதியில் ஒருங்கிணைந்த மாவட்ட கழகத்தின் சார்பில் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறும்.

கோவை மாவட்ட மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளை அமைச்சர் உதயநிதி வழங்குகிறார். பின்னர் பேருரையாற்றுகிறார். நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

வரும் பட்ஜெட் அறிவிப்புகளை பொறுத்திருந்து பாருங்கள். அண்ணாமலையைப் பற்றி கேட்காதீர்கள். பாஜக உறுப்பினர் எண்ணிக்கை என்ன என்பதை அவரிடம் கேட்க வேண்டும். இன்னும் வாட்ச் பில் கொடுக்கவில்லை.

பரிசு பொருள் சம்பந்தமாக சொல்கிறார். அவரே அரவக்குறிச்சியில் 1000 ரூபாய் பணம் கொடுத்தார். ஆனால் தோற்றார். மொடக்குறிச்சியில் எப்படி வந்தார்கள் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். அரவக்குறிச்சியில் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தீர்களா என்று கேட்டால் அவரிடம் பதில் வராது. பொதுவெளியில் கருத்து சொல்லும் பொழுது நாம் எப்படி இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கோடை காலத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு என்ன தேவையோ அதை கணக்கிட்டு டெண்டர் போட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கோடை வெயிலை முன்னிட்டு மின்சாரத் துறை சார்பில் அடுத்த வாரம் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

4,200 மெகாவாட் கூடுதாலக தேவைப்படுகிறது. 2 கோடி 67 லட்சம் பேர் மின் எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நிலையில் இருந்தனர். இன்று வரை 2 கோடி 66 லட்சம் பேர் இணைத்து விட்டனர். 99 அரை சதவீதம் ஆதார் இணைப்பு நடைபெற்றுள்ளது. மீதம் உள்ளவர்களும் இணைக்கப்படுவார்கள்.

அண்ணாமலை சம்பந்தமான கேள்விகளை தவிர்க்க வேண்டும். தகுதி இல்லாத அக்கறையில்லாத மக்களுக்கான பணி செய்யாத சமூக வலைத்தளத்தில் இருப்பைக் காட்டும் நபரைப் பற்றி கேள்வி கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

எம்பி வெங்கடேசன் மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் அரசியல் உள்ளது என்ற கேள்விக்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சொல்லும் கருத்தை முதல்வரின் ஆலோசனைப்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

ரயில்வே திட்டத்திற்கும் உரிய நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு செவி சாய்க்கவே இல்லை. வரக்கூடிய காலம் நல்ல தீர்வை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...