ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது ஜனநாயக படுகொலை..! - கோவையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தமிழ்நாட்டில் இதுவரை நடந்த எந்த இடைத்தேர்தலிலும் இதுபோன்ற விதிமீறல்கள் நடக்கவில்லை. அது போன்ற வரலாறும் கிடையாது. வாக்காளர்களை ஆடுகளைப் பட்டியில் அடைப்பது போல் அடைத்து பணமும், அசைவ உணவும், பரிசுப் பொருட்களும் கொடுத்து தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.



கோவை: மக்களின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி திமுக வென்றுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.



கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை ஜனநாயகமா? பணநாயகமா? என்று பார்க்கின்ற பொழுது பணநாயகம் தான் வெற்றி பெற்றுள்ளது.

அங்குத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடக்கும் நாள் வரை வாக்காளர்களுக்குத் தினம் தோறும் திமுகவினர் பணமழை பொழிந்தனர். 30 அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு 22 மாதம் ஆட்சியில் சம்பாதித்த பணத்தை தண்ணீர் போல் வாரி இறைத்து ஜனநாயக படுகொலை செய்து அவர்களது வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள்.

அங்குத் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து வாக்காளர்களை 120 இடங்களில் டெண்ட் போட்டு ஆடுகளைப் பட்டியில் அடைப்பது போல் வாக்காளர்களை அடைத்து வைத்து அசைவ உணவு கொடுத்து தினம் தோறும் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து,பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கியும், ஒவ்வொரு இல்லத்திற்கும் இரண்டு கிலோ கோழிக்கறிகளை கொடுத்தும் தேர்தல் முடிவுக்கு பின் 5000 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் காண டோக்கன் வழங்கி தான் பொதுமக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்துத் தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் கொடுத்தோம். தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் புகார் அளித்தோம். ஆனால் தேர்தல் அதிகாரிகள் விதிமீறல்களில் ஈடுபட்ட திமுகவினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நன்மைகள் செய்ததை சுட்டிக்காட்டி வாக்குகளை சேகரித்தோம், ஆனால் திமுக 22 மாத காலத்தில் சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு முதலீடு செய்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றிருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் பல இடைத்தேர்தல்கள் நடைபெற்று உள்ளது. எந்த இடைத் தேர்தலிலும் இதுபோன்ற விதிமீறல்கள் நடைபெறவில்லை. அது போன்ற வரலாறும் கிடையாது.

ஆனால் திமுக கட்சியை சேர்ந்தவர்கள்,அமைச்சர்கள் அவர்களது அதிகாரத்தை வைத்துக்கொண்டு தேர்தல் விதிமுறைகளை மீறி வெற்றி பெற்றுள்ளனர். திமுக கட்சி ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் டெபாசிட் இழந்தது, அதிமுக கட்சி அம்மா(ஜெயலலிதா) இருக்கின்ற போது விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது. எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் திமுக இவ்வளவு பெரிய விதிமீறல்கள் ஈடுபட்ட போதிலும் ஊடக நண்பர்களும், பத்திரிக்கை நண்பர்களும் வெளிச்சம் போட்டுக் காட்டாதது வருத்தம் அளிக்கிறது.

அதனை ஊடகம் மக்களுக்கு காட்டி இருந்தால் இது போன்ற வெற்றியை திமுக பெற்றிருக்காது. முழுக்க, முழுக்க ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகமான அளவில் விதிமீறல்களைச் செய்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி,தோல்வி என்பது அவ்வப்போது வந்து செல்வது தான், 2019இல் அதிமுக ஒரே இடத்தில் தான் வெற்றி பெற்றது.

2021 இல் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 75 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தற்பொழுது நடைபெற்ற இந்த தேர்தலை வைத்து திமுக மிகப்பெரிய வெற்றி அடைந்து விட்டதாகக் கொண்டாடுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அடுத்து வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக பெறும்.

இந்த இடைத்தேர்தல் முடிவுகளைத் தேர்தல் ஆணையத்தின் தோல்வியாகத் தான் பார்க்கிறோம். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், திமுக வெற்றி பெற்றிருக்காது. தினம்தோறும் திமுகவினர் வாக்காளர்களை அழைத்துச் சென்று விடுகின்றனர். எங்களுடைய கட்சி நிர்வாகிகள் வாக்காளர்களைக் கூட பார்க்க முடியவில்லை. உள்ளூர் நிர்வாகிகள், வாக்காளர்களையும் பார்க்க முடியவில்லை.

அதிமுக ஒன்று சேராதது தான் அதிமுக தோல்விக்குக் காரணம் என அண்ணாமலை கூறியதாகக் கேள்வி எழுப்பியதற்கு, அண்ணாமலை அதுபோல் கூறவில்லை எனவும் அது தவறான கருத்து எனவும் பதில் அளித்தார்.

பரிசுப் பொருட்களை வழங்கியதாக நாம் தமிழர் கட்சியினரும், அதிமுக மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு? பரிசுப் பொருட்களைக் கொடுத்திருந்தால் அதிமுகவும் வெற்றி பெற்றிருக்கும் என்றார். ஊடகங்களில் வெளியான பல்வேறு விதிமீறல்கள் வீடியோ பதிவுகளைக் கொண்டும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தோம்.

இருப்பினும் தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் இருக்கின்றதா? இல்லையா என்ற சந்தேகமும் எழுகிறது. தேர்தல் முடிவுகளை அடுத்து அத்தொகுதி மக்களின் நிலைமை பரிதாபமான நிலையாகத் தான் பார்க்கிறேன். மக்களின் வருமானம் இல்லாத எளிமையான சூழ்நிலையைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஆசை காட்டி அவர்களது மனதை மாற்றி வெற்றி பெற்றுள்ளார்களே? தவிர மக்கள் சுயமாக வாக்களிக்கவில்லை.

இந்த இடைத்தேர்தல் என்பது ஜனநாயக படுகொலை. இது போன்ற தேர்தலால் ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...