என் பெயருக்கு பிறகு எம்பி, எம்.எல்.ஏ போடுவதற்காக அரசியலுக்கு வரவில்லை..! - கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு

இன்னும் ஆறு மாதத்தில் பெரிய பெரிய தலைகள் செல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பெரிய பெரிய தலைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அரசியல் கட்சி என்பது அப்படி தான் இருக்கும் என்று கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை சிட்ரா கலையரங்கில் சாதனை மகளிர் சங்கமம் என்ற அமைப்பின் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.



இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் 12 பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள், உங்களால் தான் நாங்கள் இருக்கின்றோம். இந்த நாடு இருக்கிறது. என்னுடைய பெயருக்கு பிறகு எம்பி, எம்.எல்.ஏ என்று போடுவதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. பாஜக வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு.

அதற்கான முயற்சி தான் தன்னிடம் உள்ளது. இன்னொரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளரக் கூடாது அவ்வாறு வளர்ந்தாலும் கூட அது தொடர் வளர்ச்சியாக இருக்காது. பாஜக தமிழகத்தில் தனக்குரிய இடத்தை கண்டுபிடித்து தமிழக மக்களின் அன்பைப் பெற்று அது வளர வேண்டும். எங்களுடைய பாதை தனியாகத்தான் இருக்கும். எனவே இதை யாருடனும் ஒப்பிட வேண்டாம்.

பாஜகவை அதிமுகவுடன் ஒப்பிடாதீர்கள், கூட்டணிக் கட்சிகளுடன் ஒப்பிடாதீர்கள். ஆளும் கட்சியுடன் ஒப்பிடாதீர்கள். பல்வேறு கட்சிகளில் இருக்கக்கூடிய தலைவர்கள் அந்த கட்சி வளர்ந்த பிறகு தான் அதில் இணைந்துள்ளார்கள். ஆனால் பாஜக தொண்டர்கள் அவ்வாறு இல்லை. எப்போது பாஜக ஆட்சிக்கு வரும் எனக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவில் இருக்கக்கூடிய தலைவர்கள் அதிமுகவை பாஜகவுடன் ஒப்பிட்டால் அது சரியான ஒப்பிடல் இல்லை.

அதேபோல் மற்றொரு கட்சித் தலைவர்கள் ஒப்பிட்டாலும் அதுவும் சரியான ஒப்பிடல் இல்லை. எங்களுடைய பாதை தனித்தன்மையான பாதை. நான் இதற்கு மாற மாட்டேன். நான் இவ்வாறு தான் இருப்பேன். என்னுடைய தலைமையில் கட்சி இவ்வாறு தான் இருக்கும். இந்தக் கட்சியில் பல்வேறு விஷயங்கள் மாற்றங்கள் செய்யப்படத் தான் வேண்டும்.

ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அதற்கான முயற்சியை முன்னெடுக்கத் தான் வேண்டும். ரத்தம் வரத்தான் செய்யும், அவ சொற்களை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். அவமானங்களைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். அனைவரின் விமர்சனங்களையும் கடந்து தான் செல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் வளர்ந்த விதம் வேறு. பாஜக வளர்ந்து வரும் விதம் வேறு.

சில கட்சிகளில் மேனேஜர்கள் உள்ளார்கள்.சில கட்சிகளில் தலைவர்கள் இருக்கிறார்கள். தலைவர்கள் ஒரு முடிவை எடுக்கும்போது துணிந்து எடுக்க வேண்டும். அதில் தவறு நடந்தாலும் எதிர்த்து நிற்க வேண்டும். ஜெயலலிதா அம்மையாருக்கு டெபாசிட் போன பிறகும் துணிந்து நின்று வென்றார். ஒரு தலைவர் என்பவர் இவ்வாறு தான் நிற்பார்கள், நானும் அப்படிப்பட்ட பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். பாரதிய ஜனதா கட்சியின் காலம் வந்து விட்டதாக கருதுகிறேன். மக்கள் அதற்காகத் தயாராக இருப்பதாக நான் பார்க்கிறேன். பாஜக அதிமுக கூட்டணியின் மகிமை என்னவென்றால் நாங்கள் அனைவரும் எங்களது சொந்த கருத்துக்களைப் பேசுகிறோம். அண்ணாமலை சொல்வதற்காக அதிமுக கருத்துச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல் அதிமுக சொல்வதற்காக பாஜக எதிர் கருத்துச் சொல்ல அவசியம் இல்லை.

ராகுல் காந்தியை விட ஸ்டாலின் சிறந்தவர் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுவது போல நாங்கள் பேசமாட்டோம். தமிழ்நாட்டில் அவதூறு நோட்டீஸ் போடாமல் அரசியல் செய்கின்ற ஒரே ஆள் நான்தான். என்னைப் பற்றி பல்வேறு ஊடகங்களில் எவ்வாறு எழுதினாலும் சரி, அது குறித்து அவதூறு நோட்டீஸ் தரமாட்டேன். அதை மக்கள் மன்றத்தில் விட்டு விட வேண்டும். ஆன்லைன் ரம்மியை பாஜக எதிர்க்கிறது என நான் ஆளுநரை சந்தித்தபோது கூறினேன்.

யாரோ ஒருவருக்காக தவறான சட்டத்தைக் கொண்டு வந்து ஆளுநரிடம் கையெழுத்திட வேண்டும் என நிர்ப்பந்திக்கக் கூடாது. எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் மறுபடியும் ஆராய்ந்து அந்த சட்டத்தைச் சரி செய்ய வேண்டும். அதேபோல் ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை அப்படியே மக்களிடம் தெரிவிக்க வேண்டும். அதனை அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்.

கட்சியில் இணைவது போவது எல்லாம் சகஜம். பாஜகவில் இரண்டாம் மூன்றாம் நான்காம் கட்டத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் செல்வது பெரிய செய்தியாக வருகிறது என்றால் உண்மையாகவே பாஜகவை சீரியசாக எடுத்திருக்கிறார்கள் என்று தான் அர்த்தம். தற்போது திமுகவில் இருக்கக்கூடிய பாதி அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து வந்தவர்கள்.

நான் கூறிக் கொள்வது எல்லாம் அனைவரும் நன்றாக இருங்கள். போகின்ற இடத்தில் விசுவாசமாக இருங்கள். அரசியலில் என்ன சாதிக்க விரும்பினீர்களோ அதனை அந்த கட்சியிலிருந்து சாதியுங்கள். மக்களுக்கு நல்லது நடக்கட்டும்.

பாஜகவின் ஐடி விங் என்பது உணர்வுப்பூர்வமாகச் செயல்படக்கூடிய ஒன்று. உங்களுக்கு ஒரு ரகசியத்தை கூறுகிறேன். பாஜகவில் தொண்டனாக இல்லாத ஒருவர் தான் பாதி ஜிடி விங் வேலையைச் செய்வார். உறுப்பினர் அட்டை இல்லாதவர் தான் நல்ல நாடு அமைய வேண்டும் என அதனைச் செய்து கொண்டே இருப்பார். இன்னும் ஆறு மாதத்தில் பெரிய பெரிய தலைகள் செல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பெரிய பெரிய தலைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அரசியல் கட்சி என்பது அப்படி தான் இருக்கும்.

ஆயிரம் பேர் வருவார்கள். நூறு பேர் செல்வார்கள். தொடர்ந்து இவ்வாறு நடந்து கொண்டுதான் இருக்கும். ஒரு அகில இந்தியக் கட்சிக்குப் ஆள் சேர்ப்பது என்பது பெரிய விஷயம் அல்ல. அதனால் தமிழகத்திற்கு என்ன நடக்க வேண்டும் என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. அதனை நடத்தி காட்ட வேண்டும் என்றால் அதற்கும் தயாராக இருக்கின்றோம். 

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...