மார்ச்.14 பட்டாம்பூச்சிகள் தினம் - பட்டாம் பூச்சியின் அற்புதமும்..அவசியமும்...!

உலக பட்டாம்பூச்சி தினமாக மார்ச்.14 கடைபிடிக்கப்பட்டுவரும் நிலையில், உயிர்கோளத்தின் நாடித்துடிப்பாக இருந்துவரும் பட்டாம்பூச்சி இனங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.



கோவை: உலகில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களில் சில கண்ணுக்குத் தெரிந்தவை.. பல கண்ணுக்குத் தெரியாதவை.. அப்படிப்பட்ட உயிர்கள், இந்த பூமியின்உயிர்ச்சூழலை நம்பியே வாழ்கின்றன.

ஆனால், இந்த ஒட்டுமொத்த உயிர்ச்சூழலும்ஒரு உயிரினத்தை நம்பி நகர்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த உலகின் உயிர் சூழலை தன்னுள் வைத்திருக்கும் உயிரினம்தான் வண்ணத்துப்பூச்சிகள் என்றழைக்கப்படும் பட்டாம்பூச்சிகள். இவை எப்படி உலகின் நாடித்துடிப்பாக இருக்கிறது? என்ற கேள்விக்கான பதில் இதோ...

உலகில் அண்டார்டிகா தவிர, அனைத்து கண்டங்களிலும் பட்டாம்பூச்சிகள் வசிக்கின்றன. உலக அளவில் 18 ஆயிரம் பட்டாம் பூச்சி இனங்கள் வாழ்கின்றன. இந்திய அளவில் 1500 பட்டாம் பூச்சி இனங்கள் வாழ்ந்து வருகின்றன. தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட பட்டாம் பூச்சி இனங்கள் உள்ளன. இதில் வலசை அரியவகை பட்டாம்பூச்சிகளும் அடங்கும்.



பட்டாம்பூச்சிகள் என்பது பார்ப்பதற்கு எந்த அளவுக்கு அழகோ, அதனைவிட அதன் வாழ்வியல் முறைகளும், செயல்பாடுகளும் பேரழகானவை. சிறு முட்டையில் தொடங்கி, புழுவாகி, பின் வண்ண சிறகுடன் பட்டாம் பூச்சியாக வளரும் இந்த உயிரின், ஒவ்வொரு வாழ்வியல் நகர்வும் போற்றுதலுக்குரியது.

உதாரணத்திற்கு... பட்டாம்பூச்சிகள் தங்களின் உணவுக்காகவே ஒரு மலரில் அமர்ந்து, அதன் தேனை உறிஞ்சும். ஆனால், அது ஒரு தாவர மலரிலிருந்து, மற்றொரு தாவரத்துக்கு மீண்டும் உணவுக்காக செல்லும்போது, மகரந்த சேர்க்கை நடக்கிறது. அதனடிப்படையிலே இந்த உலகில் பசுமையான தாவர கட்டமைப்புகள் உருவாகின்றன.



அதுமட்டுமின்றி, சில தாவரங்களின் மகரந்த சேர்கையானது பட்டாம்பூச்சியால் மட்டுமே நடந்தேறிவருகிறது. அதனடிப்படையிலேயே, இந்த இயற்கையின் பசுமையான சூழல் பாதுகாக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இயற்கையோடு ஒன்றிய விவசாயத்தில், வெள்ளை பூச்சிகள் ஏதேனும் பயிர்களில் தென்பட்டால், அதனை உட்கொள்ளும் பட்டாம்பூச்சிகள், விவசாயிகளின் தோழனாக செயலாற்றுகின்றன. இதன்மூலம் ரசாயன மருந்து பயன்பாடுகள் இல்லாமல், இயற்கையுடன் ஒன்றிய காய்கறிகள் உள்ளிட்டவற்றை விளைவிக்க முடியும் என்பதே நிதர்சனம்.

உன்னதமான உயிர் சூழலுக்கு உறுதுணையாக பட்டாம் பூச்சி வாழ்விடம் இருக்கும் என்பதே இதன் பொருள். அதனடிப்படையில் பட்டாம் பூச்சிகள் இல்லாத இடம், உயிர் கோளத்தில் வாழ தகுதியற்ற இடம் என்றே கூறலாம்.ஏனென்றால், பட்டாம் பூச்சி நல்ல உயிர் உள்ள இடங்களில் மட்டுமே வாழும். அப்படிப்பட்ட பட்டாம்பூச்சிகளின்இனம் இன்று ஆபத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது.

மாறிவரும் சுற்றுச்சூழல், நவீனமயமாதல் உள்ளிட்டவற்றால் பட்டாம்பூச்சிகள் நெருக்கடியில் வாழ்கின்றன. 20 வருடங்களுக்கு முன்பு எளிதாக நமது வீட்டின் அருகே தென்பட்டபட்டாம்பூச்சிகள், நவீன உலக நகர்வினால் இன்று அரிதாகவே தென்படுகிறது. பட்டாம் பூச்சிகள் நம்மை விட்டு விலகுவது, நாம் வாழ தகுதியற்ற சூழலில் வாழ்வதனை சுட்டிக்காட்டுகிறது.

இந்த நிலப்பரப்பில் பட்டாம் பூச்சிக்கான உயிர்ச்சூழல் பெரிய அளவில் ஆபத்தினை சந்திக்கவில்லை என்றாலும், வண்ணத்துப்பூச்சிகளான பட்டாம் பூச்சிகள் மனித வாழ்விடத்தைவிட்டு சற்று விலகியே இருக்கின்றன என்பதுதான் உண்மை.மானிட வாழ்வியல் மேம்பட வேண்டுமெனில் பட்டாம் பூச்சிகளின் பாதுகாப்பு அவசியம் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என பட்டாம் பூச்சி ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...