தமிழக பட்ஜெட் 2023-24 - கோவை தொழில் துறையினர் கருத்து…!

கோவை அவிநாசி சாலை முதல் சத்தியமங்கலம் வரை ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் சேவை திட்டம், எழில்மிகு கோவை, மாமதுரை பெயர்களில் இரு நகரங்களையும் மேம்படுத்தும் திட்டம், மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் எஸ்சி மாணவர்களுக்கு விடுதிகள் உள்ளிட்ட கோவை மாவட்டத்திற்கும் பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.


கோவை அவிநாசி சாலை முதல் சத்தியமங்கலம் வரை ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்படும். எழில்மிகு கோவை, மாமதுரை பெயர்களில் இந்த இரு நகரங்களையும் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும் உள்ளிட்ட கோவை மாவட்டத்திற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் 2023-24 குறித்து தொழில் துறையினர் கருத்துகள் இங்கே..

சுருளிவேல், தலைவர், ரயில்வே சப்ளையர் அசோசியேஷன்:



சென்னை கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில் உள்ள தமிழ்நாடு டெக் சிட்டி, கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில், சிறப்புத் திட்டத்தின் மூலம் தொழில் 4.0க்கு 2877 கோடி ஒதுக்கீடு, தொழில் நகரங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மொபைல் உதவி மையம், கூடுதலாக 20 மைக்ரோ/மினி கிளஸ்டர்கள் வர உள்ளன, மூலதன மானியம் 300 கோடி மற்றும் கடன் உத்தரவாதம் 100 கோடி ஒதுக்கீடு,

கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள், வளர்ந்து வரும் துறை விதை நிதி 50 கோடி ஒதுக்கீடு, எம்எஸ்எம்இ அமைச்சகத்திற்கான மொத்த ஒதுக்கீடு 911.50 கோடி ஆகிய அறிவிப்புகளை வரவேற்கலாம்.

அதே நேரத்தில்,எம்எஸ்எம்இ துறைக்கு 1500 கோடி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் ஒதுக்கீடு குறைவாக உள்ளது. ஏற்கனவே கோயம்புத்தூரில் ஒரு தொழிலாளர் தங்கும் விடுதி வரவிருக்கிறது, மற்ற மாவட்டங்களிலும் நாங்கள் கோரிக்கை விடுத்தோம் ஆனால் இது பற்றிய அறிவிப்பு இல்லை. TIIC கட்டணங்கள் குறைக்கப்படவில்லை. வட்டி விகிதத்தை 6 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரி தொடர்பான வழக்குகளுக்கு பொது மன்னிப்புத் திட்டத்தைக் கோரினோம், அது அறிவிக்கப்படவில்லை.

பிரபு தாமோதரன், கன்வீனர், ஐடிஎப்:



நிதி பற்றாக்குறையை தொடர்ச்சியாக குறைத்து வருவது மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கு மிகவும் நல்லது. சேலத்தில் ஜவுளி பூங்கா அமைப்பது, மேற்கு மண்டலத்தின் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தி துறைக்கும் பயனுள்ளதாகவும், உயர்தர தொழில்நுட்பத்துடன் ஜவுளி பூங்கா அமையும் பட்சத்தில், தமிழக ஜவுளி துறையின் போட்டித் திறன் உயரும். நிதி அமைச்சரின் தொடர், சீரிய முயற்சிகள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளன.

அருள்மொழி, தலைவர், தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கம் (ஓஸ்மா)



கோயம்புத்தூருக்கு டெக் சிட்டி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. மின் திட்டத்திற்கு 77000 கோடி ஒதுக்கீடு என்பது வரும் ஆண்டுகளில் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும். பத்திரப்பதிவு கட்டணம் 2 சதவீதமாக குறைத்தது நல்ல அறிவிப்பு. கோவையில் மெட்ரோ ரயில் திட்டம், எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு பயனுள்ளதாக இருக்கும். மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசின் பட்ஜெட்டை OSMA வரவேற்கிறது.

ஜேம்ஸ், தலைவர், டாக்ட்:



கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 9 ஆயிரம் கோடி, செம்மொழி பூங்காவிற்கு 172 கோடி ஒதுக்கீடும், பெண் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்த தனி திட்டம் அறிவிப்பும், எழில்மிகும் கோவை திட்ட அறிவிப்பும், சிறு குறு தொழில் வளர்ச்சிக்கான 1509 கோடி நிதி ஒதுக்கீடு, புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கு நேரடி மருத்துவ உதவி, பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்சாலையில் பயிற்சி போன்ற அறிவிப்புகளை வரவேற்கலாம். கோவையில் குறுந்தொழில் பேட்டை அறிவிப்பு இல்லாதது, மின்கட்டணத்தில் உயர்த்திய கிலோவாட்க்கான கட்டணத்தை திரும்ப பெற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...