என்.டி.சி நூற்பாலைகளைத் திறக்க வேண்டும்..! - தொழிற்சங்கங்கள் கோரிக்கை

தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 23 என்டிசி நூற்பாலைகளையும் நவீனமயமாக்கி உற்பத்தியை தொடங்கினால் லாபகரமாக இயக்க முடியும். இதுகுறித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர். செயலர், என்டிசி தலைமை அலுவலக அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று தொழிற்சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.


கடந்த 1974-ம் ஆண்டு தேசிய பஞ்சாலைகழகம்(என்டிசி) அமைக்கப்பட்டு 123 மில்கள் இணைக்கப்பட்டன. லாப நோக்கமற்றதாகவும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை மட்டுமே முக்கிய நோக்கமாக செயல்பட துவங்கியது.

123 நாற்பாலைகளில் தமிழகத்தில் 15 நூற்பாலைகள் செயல்பட்டு வந்தன. நாடு முழுவதும் ரயில்வே, காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளுக்கு ஆடைகள் வினியோகம் செய்யும் பணிவாய்ப்பு கிடைத்தது. நாளடைவில் படிப்படியாக 100 நூற்பாலைகள் மூடப்பட்டன. கடந்த 15 ஆண்டுகளாக 23 நுாற்பாலைகள் மட்டுமே நாடு முழுவதும் செயல்பட்டு வந்தன.

கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட நுாற்பாலைகளில் இன்று வரை உற்பத்தி மீண்டும் தொடங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் என்டிசி மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய தொழிலாளர் சம்மேளனம்(எச்எம்எஸ்) மாநில செயலாளர் ராஜாமணி கூறுகையில்,

பஞ்சு விலையில் காணப்பட்ட நிலையற்ற தன்மையால் நூற்பாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக பஞ்சு விலை நிலையாக உள்ளதால் நூற்பாலைகள் நெருக்கடியில் இருந்து மீண்டு வர தொடங்கியுள்ளன.

சந்தை வாய்ப்பு சிறப்பாக உள்ள நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் என்டிசி நூற்பாலைகளில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரியது. கோவையில் ரங்கவிலாஸ், கமுதக்குடியில் பயனீர் யூனிட்1, காளையார் கோயில் பகுதியில் அமைந்துள்ள முருகன் நூற்பாலை உள்ளிட்டவை நவீன மயமாக்கப்பட்டுள்ளன.

நிலங்கள் மாநில அரசுகளுக்கு விற்பனை செய்தது என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் என்டிசி நூற்பாலை நிர்வாகத்துக்கு வர வேண்டிய ரூ.2,000 கோடி நிலுவை தொகை அடுத்த மாதம் ஏப்ரல் முதல் வரத்தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 23 என்டிசி நூற்பாலைகளையும் நவீனமயமாக்கி உற்பத்தியை தொடங்கினால் அனைத்தையும் லாபகரமாக இயக்க முடியும். இதுவரை மத்திய ஜவுளித்துறை அமைச்சரை இரண்டு முறையும், ஜவுளித்துறை செயலர், என்டிசி தலைமை அலுவலக அதிகாரிகள் என தொடர்ந்து பலரை சந்தித்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இருப்பினும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் வேதனைக்குரியது. தொழிலாளர்கள் நலன் காக்க எங்கள் முயற்சிகள் தொடரும், என்றார்.

‘எஐடியுசி’ தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் தங்கவேல் கூறுகையில்,

அனைத்து என்டிசி நூற்பாலைகளையும் லாபகரமானதாக இயக்க தற்போது உகந்த சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் மட்டும் 4,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் சார்பில் பல முறை கோரிக்கை விடுத்தபோதும் நடவடிக்கை எடுக்காதது மத்திய அரசின் அலட்சிய போக்கை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

என்டிசி நூற்பாலைகள் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. தனியார் நூற்பாலைகள் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய என்டிசி நூற்பாலைகளில் 2020-ம் ஆண்டு முதல் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது, என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...