கோவையில் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட விவகாரம் - கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் கண்டனம்!

சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் பாலாஜியை தாக்கிய குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோவையில் கனிமவளக் கொள்ளை குறித்து வீடியோ எடுக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பாலாஜி, குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு செய்தி சேகரிக்க நியூஸ் தமிழ் என்ற செய்தித் தொலைக்காட்சி குழுவினர் அங்கு சென்றுள்ளனர். கல் குவாரி தொடர்பாக செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது ஒளிப்பதிவாளர் பாலாஜியை ஒரு சமூக விரோத கும்பல் சூழ்ந்து கொண்டு படம் பிடிப்பதைத் தடுத்துள்ளது.

மேலும், செய்தியாளர் குழுவினரை அவதூறாகப் பேசி மிரட்டியதுடன் ஒளிப்பதிவாளர் பாலாஜியை சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். அவர் வைத்திருந்த ஒளிப்பதிவு கருவியையும் பறிக்க முயன்றிருக்கின்றனர். அப்போது நடைபெற்ற நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கனிமவள கொள்ளை கும்பலின் தாக்குதலில் காயமடைந்த தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் பாலாஜி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவிக்கு பிறகு கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் பாலாஜி மீதான இந்த தாக்குதல் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இதைக் கண்டித்து பத்திரிகையாளர் அமைப்புகள் இரண்டு நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். தாக்கப்பட்ட பாலாஜிக்கு உரிய நிவாரணம் அரசுத் தரப்பில் வழங்கப்பட வேண்டும்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாரத்தில் இதுபோன்ற சட்ட விரோத கனிமவளக் கொள்ளையில் மிகப் பெரிய மாபியாக்கள் ஈடுபட்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரத்தில் உயர்மட்டக் குழு அமைத்து கனிமவளம் எடுப்பதற்கு முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? அனுமதிக்கப்பட்ட அளவில்தான் கனிமவளம் எடுக்கப்படுகின்றதா என்று விசாரிக்கப்பட வேண்டும்.

அதேநேரம், நாட்டில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சர்வாதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்களை சில கட்சித் தலைவர்களே இழிவுபடுத்தும் செயலும், அந்த அதிகார மையத்தை நோக்கிக் கேள்வி எழுப்பும் ஊடகவியலாளர்கள் வெளிப்படையாகவே மிரட்டப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு, ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. பத்திரிகையாளர்கள் என்பவர்கள் சுதந்திரமானவர்கள். தவறுகளை சுட்டிக்காட்டும் அவர்களை மிரட்டி தங்கள்வயப்படுத்தும் போக்கு நாட்டுக்கே ஆபத்தானது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு பத்திரிகையாளர்களின் பக்கம் நின்று அவர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அரசு ஊழியர்கள், மருத்துவர்களுக்கு இருப்பதைப் போன்ற பணியிட பாதுகாப்பு பத்திரிகையாளர்களுக்கும் அவசியமாகிறது. எனவே, தமிழ்நாட்டில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு வழங்க வழிவகை செய்யும் வகையில் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்ட மசோதாவை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...