கனிம வளங்கள் கடத்தல் விவகாரம் - கோவை மாவட்ட ஆட்சியர் விளக்க அறிக்கை

கோவையில் கனிமவளக் கொள்ளை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதற்கு எதிராக மாவட்ட நிர்வாகம் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆட்சியர் கிராந்திகுமார் பாடி விளக்கமளித்துள்ளார்.


கோவை: கனிமவளக் கொள்ளை விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோவை மாவட்டத்தில் இருந்து கனிமங்கள் கேரளாவிற்கு உரிய நடைச் சீட்டு இன்றி கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில எல்லை சோதனை சாவடிகளிலும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து தணிக்கை செய்ய அறிவுரை வழங்கப்பட்டது.

அனுமதி வழங்கப்பட்ட கனிம இருப்பு கிடங்குகளில் இருந்து, கேரள மாநிலத்திற்கு கனிமங்கள் எடுத்துச் செல்ல புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் மூலம் உரிய தொகை, கனிம அறக்கட்டளை நிதி மற்றும் பசுமை வரி ஆகியவற்றை செலுத்த வேண்டும். அதன்பிறகு 4 யூனிட், 6 யூனிட் அளவுகளில் போக்குவரத்து நடைச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நடைச் சீட்டில் நாள், நேரம் போன்ற விபரம் விடுபட்டிருந்தாலோ அல்லது பிழை திருத்தங்கள் செய்யப்பட்டு இருந்தாலோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக கனிமங்கள் ஏற்றிச் செல்லப்பட்டாலோ கனிம வளத் துறை, வருவாய்த் துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் கடந்த மாதம் 24 - ந் தேதி முதல் இதுவரை 1,254 வாகனங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல் இதுவரையில் உரிய அனுமதியின்றி கனிமம் கடத்தி சென்ற 54 வாகனங்கள் கனிம வளத்துறை மற்றும் வருவாய் அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கனிமங்களை அதிகளவில் ஏற்றி சென்ற 94 வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுலர்களால் அபராதம் விதிக்கப்பட்டது. குத்தகை காலம் முடிவுற்ற குவாரிகள் தொடர்ந்து செயல்படாமல் கண்காணித்திட, மாவட்ட அளவிலான சிறப்பு பணிப் பிரிவு குழு கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் குவாரிகளை கண்டறியும் பொருட்டு இதுவரை 5-க்கும் மேற்பட்ட குவாரிகள் சர்வே செய்யப்பட்டது. இதில் 2 குவாரிகளில் விதி மீறல்கள் கண்டறியப்பட்டு உரிய அபராத நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மீதமுள்ள குவாரிகளில் விதிமீறல்களை கண்டறியும் பணி நடை பெற்று வருகிறது. குவாரி குத்தகை வழங்கப்படும் நேரங்களில் அனுமதி கோரும் இடத்தை அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தினரால் ஜி.பி.எஸ். ஆய்வு செய்யப்பட்டு எல்லைத் தூண்கள் நடப்பட வேண்டும் என அனைத்து குத்தகைதாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...