உடுமலையில் தக்காளிகளை சாலையில் வீசிச்சென்ற விவசாயிகள் - உரிய விலை கிடைக்காததால் ஆத்திரம்!

உடுமலை சுற்றுவட்டார பகுதியில் 30,000 ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர் விலை சரிவு காரணமாக உரிய விலை கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளிகளை சாலையில் வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் வேதனையடைந்த விவசாயிகள் தக்காளிகளை சாலையில் வீசிச் சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில், தோட்ட கலை பயிர்களில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஆண்டு முழுவதும், அனைத்து பருவங்களிலும், ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் விளைவிக்கப்படும் தக்காளி, கேரளா மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. கடந்த சில மாதங்களாகவே தொடர் விலை சரிவு உள்ளிட்ட காரணங்களினால், நடப்பு பருவத்தில் தக்காளி நடவு செய்த விவசாயிகள், கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கும், 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி, தற்போது 70 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருவதால், பறிப்பு கூலி, போக்குவரத்து கட்டணம் கூட கட்டுபடியாகாததால், பெரும்பாலான பகுதிகளில், தக்காளி செடிகளை விவசாயிகள் அழித்து வருகின்றனர்.

மேலும் ஒரு சில விவசாயிகள் தக்காளி பழங்களை சாலை ஓரம் விசி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தக்காளி சாகுபடிக்கு, உழவு, நாற்று, அடியுரம், களைகொல்லி, இரு முறை உரம் வைத்தல், 10 நாட்களுக்கு ஒரு முறை மருந்து அடித்தல் என, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கிறது.

நடவு செய்த, 60 நாட்களில், காய்ப்புக்கு வந்து, 30 நாட்கள் வரை அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு சராசரியாக, 1,500 முதல் 2 ஆயிரம் பெட்டிகள் மகசூல் கிடைக்கும். அறுவடை துவங்கி வரத்து அதிகரித்த நிலையில், விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

மேலும் ஒரு மாதமாக இதே நிலை நீடித்து வருவதால், பெரும்பாலான பகுதியில் அறுவடை செய்யாமல், வயல்களில் உழவு ஓட்டியும், செடிகளை பிடுங்கி வெளியில் வீசி காட்டை காலி செய்ய வேண்டியுள்ளது. இதனால், ஒவ்வொரு விவசாயிக்கும், ஏக்கருக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தக்காளிக்கு ஆதார விலையாக கிலோ 25 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும், விற்பனை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். வரத்து அதிகரிக்கும் போது, விலை கிடைக்கும் வரை இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில், குளிர் பதன கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.

உடுமலை பகுதிகளில் தக்காளி சாஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகளும், அரசும் கண்டு கொள்ளாததால், விளைவித்த தக்காளி முழுவதும் வீணாவதோடு, விவசாயிகளும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

எனவே, தமிழக அரசு உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடிக்கு ஏற்ப, விரிவான ஆய்வு செய்து, சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...