புகையிலை பொருட்களால் பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிப்பு - மாநகர காவல் ஆணையர் வேதனை!

உலக புற்றுநோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, தற்போது புகையிலை பொருட்கள் மூலம் பள்ளி மாணவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவது வேதனையளிப்பதாக தெரிவித்தார்.

கோவை: புகையிலை பொருட்களால் பள்ளி மாணவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவது வேதனை அளிப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலக புற்றுநோய் எதிர்ப்பு தினத்தை அனுசரிக்கும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புற்றுநோய் விழிப்புணர்வு தகவல் அடங்கிய டிஜிட்டல் இன்ஃபோகிராஃபிக் இணைய வழி புத்தகத்தை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் கோவை சித்தாபுதூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.



ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்திய உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்  கலந்து கொண்டு, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் முன்னிலையில் நவீன இணைய வழி புத்தகத்தை வெளியிட்டார்.



நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பி.‌ குகன் வரவேற்றார்.



இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது, புள்ளி விவரங்கள் படி புற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட புற்றுநோய் தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் புகையிலை சார்ந்த 250 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 241 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1700 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தகைய சட்ட நடவடிக்கைகளுக்கு பின்பும் புகையிலை புழக்கம் பரவலாக காணப்படுகிறது.

பள்ளி மாணவர்களிடம் புகையிலை புழக்கம் பரவலாக காணப்படுகிறது என்பது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகில் 100 மீட்டர் வரை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது என்ற நிலை இருந்தாலும் அது பெரிதாக பயன் அளிப்பதில்லை.

நடுத்தர வயதினரைக் காட்டிலும் பள்ளி மாணவர்களிடம் புகையிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியமான ஒன்று. நேற்று சுந்தராபுரம் காவல் நிலையத்தில் 450 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதில் கூல்லிப் மட்டும் 150 கிலோ. இந்த கூல்லிப் போன்ற புகையிலை பொருட்கள் பள்ளி மாணவர்கள் இடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

புகையிலை பொருட்கள் பெரும்பாலும் கர்நாடகாவில் இருந்து வரவழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 170 பெட்டிக்கடைகள் மூடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு மட்டுமே பிணையில்லா வழக்கு பதியப்படுகிறது. மற்றவர்களுக்கு சில நூறு ரூபாய்களே அபராதமாக விதிக்கப்படுகிறது.

எனவே இதில் அதிக பட்ச லாபம் கிடைப்பதால் புகையிலை விற்பனையில் ஈடுபட பலர் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழக அரசு புகையிலை பொருட்களை ஒழிப்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. புகையிலைக்கு மாற்றாக ஆரோக்கியமான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.‌ அனைவரும் ஒன்று சேர்ந்து பங்களிப்பதன் மூலம் பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த நிகழ்ச்சியின் இறுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேஷ் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...