வீட்டு உபயோக பொருளாக மாறும் சிகரெட் துண்டுகள் - டாக்டர் கலாம் பவுண்டேசனின் புதிய முன்னெடுப்பு!

உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு சீர்கேட்டை ஏற்படுத்தும் சிகரெட் துண்டுகளில் உள்ள வடிகட்டியை மறுசுழற்சி செய்து அரசு மருத்துவமனைகளுக்கு மெத்தை, தலையணை ஆகியவற்றை உருவாக்கும் Green Buds என்ற புதிய முன்னெடுப்பை டாக்டர் கலாம் பவுண்டேசன் மேற்கொண்டுள்ளது.



கோவை: உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டாக்டர் கலாம் பவுண்டேசன் சார்பில் சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்து வீட்டு உபயோக பொருட்களை உருவாக்கும் புதிய முன்னெடுப்பை மேற்கொண்டு வருகிறது.



உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மையமாக கொண்டு இயங்கி வரும் டாக்டர் கலாம் பவுண்டேசன் சார்பில் சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் முன்னெடுப்பான 'GREEN BUDS' அறிமுக நிகழ்ச்சி கோவை வாலங்குளம் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள வளாகத்தில் நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக டாக்டர் கலாம் பவுண்டேசன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியனுக்கும் அதிகமான சிகரெட் துண்டுகள் இந்தியாவின் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்பட்டு வருகின்றன. சிகரெட் வடிகட்டி செல்லுலோஸ் அசிடேட்டால் ஆனது, இது ஒரு வகையான மக்காத பிளாஸ்டிக் கொண்டு உருவாக்கப்படுகிறது. 

இந்த மூலப்பொருள் முழுவதுமாக சிதைவதற்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகும் என்பது அதிகம் அறியப்படாத உண்மை. எனவே, சிகரெட் கழிவுகள் சுகாதார கேடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பான WHO இன் கூற்றுப்படி, புகையிலை பொருட்களின் கழிவுகளில் 7,000 நச்சுத்தன்மை உள்ளது. சிகரெட் துண்டுகளின் முக்கிய அங்கமான செல்லுலோஸ் அசிடேட், காகிதம் மற்றும் ரேயான் ஆகியவற்றுடன் சேர்ந்து நிலத்தையும் நீரையும் மாசுபடுத்துகிறது.

ஒரு சிகரெட் துண்டில் இருந்து வெளியேறும் ரசாயன பொருளானது 96 மணி நேரத்திற்கு வெளிப்படும் மற்றும் இது 50 சதவீதம் உப்பு நீர் மற்றும் நன்னீர் மீன்களை அழிக்க போதுமான நச்சுகளை வெளியிடும் என்று அமெரிக்காவை தளமாக கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான Truth Initiative இன் அறிக்கை கூறுகிறது.



இந்த சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் மென்மையான பொம்மைகள், தலையணைகள், மெத்தை, பாய்கள், போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தனியார் சிஎஸ்ஆர் நடவடிக்கைகள் மூலம் தலையணைகள் மற்றும் மெத்தை போன்ற பொருட்கள் இதன் மூலம் விநியோகிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...