பணிக்கு சேர்ந்த ஆர்வத்துடனேயே தொடர்ந்து பணிபுரிய வேண்டும் - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுரை!

சுங்கம் போக்குவரத்து பணிமனையில் பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணைகளை வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பணிக்கு சேர்ந்த ஆர்வத்துடனேயே தொடர்ந்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தினார்.



கோவை: பணிக்கு சேர்ந்த அதே ஆர்வத்தில் தொடர்ந்து பணிபுரிய வேண்டும் என ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.



தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோவை மாவட்டம் சார்பில் சுங்கம் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையில், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி வழங்குதல், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பணிமனை அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.



இந்நிகழ்வில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு 27 பேருக்கு வாரிசு பணி ஆணை, மருதமலை, சுங்கம் 1, சுங்கம் 2 ஆகிய மூன்று கிளைகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வறை, 50க்கும் மேற்பட்ட பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.



இதில் சிறப்புரையாற்றிய அமைச்சர் சிவசங்கர், கோவையில் மட்டும் போக்குவரத்து துறையில் பாதிக்கப்பட்ட 550 பணியாளர்களின் குடும்பங்களுக்கு 145 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

இந்த ஆட்சிக்காலத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை முடிக்கப்பட்டு உள்ளது. பணியாளர்களுக்கு சம்பள உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து மிகச் சிறப்பான ஒரு திட்டம். தற்பொழுது இந்த திட்டத்திற்கு விடியல் பயணம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக இந்த ஆண்டு 2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய துறையாக போக்குவரத்து துறை உள்ளது. அனைத்து போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கும் பணியாளர்களை எடுக்கப்பட உள்ளது. அதற்கான அரசாணையை முதல்வர் அண்மையில் வெளியிட்டிருந்தார்.

புதிய பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு கூடிய விரைவில் புதிய பேருந்துகள் வரவுள்ளது. புதிய பணியாளர்களை பணிக்கு எடுக்கும் பொழுது போக்குவரத்து துறை மீண்டும் மறுமலர்ச்சி காண உள்ளது.

புதிதாக பணிக்கு வருபவர்கள் வேலைக்கு வரும்போது என்ன ஆர்வத்தில் வந்தீர்களோ அதே ஆர்வத்தில் பணிபுரிய வேண்டும். தமிழகம் சமச்சீரான வளர்ச்சியை பெற்றுள்ளது. அனைவரும் நகரத்திற்கு சென்று படிப்பை பெற்றுள்ளார்கள் என்றால் அது போக்குவரத்து துறையினால் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார் உட்பட போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்குவரத்து பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...