மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் பிரதமர் மோடியின் வரலாற்று சாதனை - வானதி சீனிவாசன் பெருமிதம்

மகளிர் இட இதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ள மோடி அரசின் பெருமையை சகித்து கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் குறை கூறுவதாகவும் வானதி சீனி வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.



கோவை: பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறியுள்ளார்.

மக்களவையில் மட்டும், அசாதுதின் ஓவைசி தலைமையிலான, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் இரண்டு எம்.பி.க்கள் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து வாக்களித்ததை அவர் சுட்டி காட்டியுள்ளார்.

மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் மற்றுமொரு மகத்தான சாதனை வரலாற்று சீர்திருத்தம் என்றே குறிப்பிட வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இப்படி அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், ஒருமனதாக மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற முடியும் என்பதை யாரும் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற விடாமல் சில அரசியல் கட்சிகள் தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டே இருந்த தாக கூறியுள்ள அவர், அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, அரசியலில் மகளிருக்கு உரிமை என்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்த நடவடிக்கையை சாத்தியமாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால், மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள மகளிரின் மனங்களில் பிரதமர் நீங்கா இடம் பிடித்துள்ளார் . இதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 2029-ம் ஆண்டில்தான் மகளிர் இட ஒதுக்கீடு அமலாகும் என்பதை குறைகூறி பேசி வருவதையும் சுட்டிகாட்டியுள்ளார்.

கொரோனா பேரிடர் காரணமாக 2021-ல் வழக்கமாக நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கவில்லை. நீண்ட காலமாக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவில்லை. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, தொகுதி மறுவரையறை மேற்கொள்ளும் மகளிருக்கான தொகுதிகளை இறுதி செய்வதே பொருத்தமானதாக இருக்கும் என்பதால், 2029-ல் மகளிர் இட ஒதுக்கீடு அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வானதி சீனிவாசன் நினைவு கூர்ந்துள்ளார்.

எந்தவொரு செயலையும் சரியான தருணத்தில் செய்தால் அது முழு பலனையும் கொடுக்கும். தேர்தல் ஆதாயத்திற்காக அவசர அவசரமாக செய்தால் மகளிருக்கு முழுமையான பலன்கள் கிடைக்காது என்பதால்தான், மகளிர் இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு அடியையையும் பிரதமர் மோடி அரசு கவனமாக எடுத்து வைத்து வருகிறது.

ஏனெனில் 1996ல் தேவகவுடா பிரதமராக இருந்தபோதும், 1999, 2002, 2003ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் நிறைவேற்ற முடியவில்லை. 2010ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, மாநிலங்களவையில் மட்டும் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடிந்தது. அப்போதுஙபாஜக ஆதரவளித்ததால் இது சாத்தியமானது. இப்போது இண்டியா கூட்டணியில் உள்ள லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது இந்திய வரலாற்றில் சுதந்திர நாள், குடியரசு நாள் போல மிகமிக முக்கியமானது. ஏனெனில் மகளிருக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க, இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை, விடுதலைக்கு முன்பிருந்தே எழுந்தது. 1931-ல் சரோஜினி நாயுடு போன்ற பெண் தலைவர்கள், பெண்களுக்கு அரசியல் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்தி அன்றைய இங்கிலாந்து பிரதமருக்கு கடிதம் எழுதினர்.

1950-ல் நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு பிரச்சினையும் வந்தது. ஆனால், இது பற்றிய விவாதம் தேவையற்றது என்று தவிர்க்கப்பட்டது. விடுதலைக்கு பிந்தைய கடந்த 76 ஆண்டுகளில் மகளிர் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், பிரதமர் மோடி தான் அதனை சாத்தியமாக்கியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தின்படி. நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் முடிவு செய்யப்படும். மூன்று பொதுத் தேர்தல்களுக்கு ஒருமுறை பெண்களுக்கான தொகுதிகள் மாற்றியமைக்கப்படும்.

1952ல் அமைந்த முதல் மக்களவையில் 24 பெண் எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். தற்போது 17-வது மக்களவையில் 14 சதவீதம் அதாவது 78 பெண் எம்பிக்கள் உள்ளனர். மாநிலங்களவையில் 5 சதவீதம் அதாவது 11 பெண் எம்பிக்கள் உள்ளனர். மக்களவையில் பெண் எம்பிக்களின் எண்ணிக்கை 14 சதவீதத்திற்கு மேல் சென்றதில்லை எனவும் வானதி சீனிவாசன் பட்டியலிட்டுள்ளார்.

மோடி அரசின் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்தால், மக்களவையில் 179 பெண்களும், மாநிலங்களவையில் 81 பெண்களும் எம்பிக்களாக இருப்பார்கள் எனவும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் அதற்கேற்ப பெண் எம்பிக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் வானதி சீனிவாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இப்படி பெண் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஆண்களுக்கு நிகராக உள்ள பெண்களுக்கான திட்டங்களை அவர்களே கொண்டு வர முடியும். பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்த அரசை வலியுறுத்த முடியும். அதாவது இதுவரை வாங்கும் இடத்தில் இருந்த பெண்கள், தங்களுக்கு தேவையான தாங்களே எடுத்துக் கொள்ளும் இடத்திற்கும், ஆண்களுக்கும் கொடுக்கும் இடத்திற்கு அதாவது அரசியல் அதிகாரத்தைப் பெறப் போகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவைப் பொறுத்தவரை பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. ராஜமாதா விஜயராஜே சிந்தியா, சுஷ்மா ஸ்வராஜ், உமாபாரதி போன்ற முக்கிய தலைவர்கள் பாஜகவை வழிநடத்தியுள்ளனர். இப்போதும் 140 கோடி மக்களுக்கான நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இருந்து வருகிறார். நாட்டின் குடியரசுத் தலைவராக பழங்குடியினத்தைச் சேர்ந்த திருமதி திரவுபதி முர்முவை பாஜக கொண்டு வந்துள்ளது.

இட ஒதுக்கீடு இல்லாதபோதும் மற்ற கட்சிகளை காட்டிலும் அதிக அளவு பெண்களுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே பாஜக கட்சி நிர்வாகிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பாஜகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்திற்கு பெண்கள் வர முடிந்தது. மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள பெண்கள், ஆண்களுக்கு நிகராக முன்னேறினால்தான் அது முழுமையான வளர்ச்சி என்பதுதான் பாஜகவின் கொள்கை. அதுதான் இப்போது மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக நிறைவேற்றியுள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு பாஜக மகளிரணி தேசியத் தலைவர் என்ற முறையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...