கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க கோரிக்கை

குளக்கரையில் உள்ள மரங்கள் பல விதமான பறவைகளுக்கு இரவு நேர இருப்பிடமாக விளங்குகிறது. இந்தச் சூழலில் ட்ரோன்கள் பறக்க விடப்படுவதும், காதைக் கிழிக்கும் ஒலி, கண்ணைப் பறிக்கும் ஒளியை எழுப்புவதும் பறவைகள் என்ற எளிய உயிர்களைத் துன்புறுத்தும் செயலாகும். எனவே, புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓசை இயற்கைக்கான குரல் அமைப்பினர் கேட்டுக்கொண்டனர்.


கோவை: ஓசை இயற்கைக்கான குரல் அமைப்பு சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், எதிர்வரும் புத்தாண்டை ஒட்டி டிசம்பர் 31 இரவு கோவை, வாலாங்குளத்தில் பெரும் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. அதில் 300 ட்ரோன்கள் பறக்க விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20,000 எல்.இ.டி விளக்குகளுடன் ஒலி ஒளி காட்சிகளும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

குளம் என்பது நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடம் என்பதை அறிவீர்கள். குறிப்பாகப் பறவைகளின் இருப்பிடம். பல்வேறு இடையூறுகள் இருந்தாலும் நமது வாலாங்குளம் பல அரிய பறவைகளின் வாழ்விடமாக விளங்குகிறது. இக்குளத்தை, கூழைக்கடா (Pelican), குளத்து நாரை (Pond heron ), நத்தை கொத்தி (Asian spoon bill), உப்புக் கொத்தி (Little ringed plover), உள்ளான்(Little stint ), சீழ்க்கைச் சிறகி (Lesser whistling duck), தட்டைவாயன் (Northern shoveler), இராக் கொக்கு (Night heron), வண்ண நாரை (Painted stork), பாம்பு தாரா (Darter), நீர்க் காக்கை (Cormorant) உள்ளிட்ட சுமார் 100 வகையான பறவைகள் பயன்படுத்துவதாகப் பறவை ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

மேலும் இங்கு உப்புக் கொத்தி, நீல வால் பஞ்சுருட்டான் (Blue-tailed bee eater) ஆகிய பறவைகள் தொலைதூர நாடுகளில் இருந்து குறிப்பிட்ட காலங்களில் இங்கு வலசை வருகின்றன. அவ்வகையில் எண்ணிறந்த வகைப் பறவைகள் வலசை வரும் காலம் இது.

உலக அளவில் 49 விழுக்காடு பறவை வகைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றில் ஆழமற்ற பகுதிகளிலும் கரைகளிலும் வாழும் பறவைகள் (Waders) வலசை பறவைகள் (Migratory birds) வேட்டையாடும் பறவைகள் (Raptors) ஆகியவை பெருமளவில் குறைந்து வருவதாக அறியப்படுகிறது.

இவ்வகைப் பறவைகளில் பலவும் வாலாங்குளத்தை வாழ்விடமாகக் கொண்டுள்ளன. குளக்கரையில் உள்ள மரங்கள் பல விதமான பறவைகளுக்கு இரவு நேர இருப்பிடமாக விளங்குகிறது.

இந்தச் சூழலில் ட்ரோன்கள் பறக்க விடப்படுவதும், காதைக் கிழிக்கும் ஒலி கண்ணைப் பறிக்கும் ஒளியை எழுப்புவதும் பறவைகள் என்ற எளிய உயிர்களைத் துன்புறுத்தும் செயலாகும். எனவே, புத்தாண்டுக் கொண்டாட்டம் என்கிற பெயரில் நடத்தப்படவுள்ள மேற்கண்ட செயல்களை நமது குளக்கரைகளில் அனுமதிக்காமல் தடை விதிக்க வேண்டும் என்று கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், நமது சூழலியல் செல்வமான நீர் நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கோடு 11 இடங்களைப் புதிய ராம்சர் பகுதிகள் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இரண்டு புதிய உருவாக்கப்பட்டுள்ளன. பறவைகள் சரணாலயங்கள் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கெனத் தனியான அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இத்தகைய முரண் செயல்பாடுகள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால் இதனைத் தடுத்து நிறுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று ஓசை இயற்கைக்கான குரல் என்ற அமைப்பின் செயலாளர் அவை நாயகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...