முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்வி நிதியுதவி பெற விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

இறுதி ஆண்டு தோ்வுகளில் நிலுவை இருப்பின், இரண்டு ஆண்டுகளுக்குள் நிலுவைகளைப் பூா்த்தி செய்து விண்ணப்பிக்கும்பட்சத்தில் முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, முன்னாள் படைவீரா்கள், வீரமரணமடைந்த வீரா்களின் வாரிசுகள் கல்வி நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். அதன்படி முன்னாள் படைவீரா் நலத் துறை மூலமாக முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் பள்ளிக் கல்வி முதல் முனைவா் கல்வி வரையிலும் அனைத்து வகையான தொழிற்கல்வி, தொழில் சார்ந்த பட்ட, பட்டையப் படிப்புகளுக்கு கல்வியறிவு மேம்பாட்டு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கல்வி உதவித் தொகை வேண்டி விண்ணப்பிக்கும் முறை தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது. கல்விக் கட்டண ரசீது சமா்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிக் கல்வி பயிலும் மாணவா்கள் பருவத் தோ்வுகளில் நிலுவை (அரியா்ஸ்) வைத்திருந்து பட்டப் படிப்பைத் தொடரும்பட்சத்தில் அவா்களின் இறுதி ஆண்டு தவிர முந்தைய அனைத்து ஆண்டுகளுக்கும் கல்வியறிவு மேம்பாட்டு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இறுதி ஆண்டு தோ்வுகளில் நிலுவை இருப்பின், இரண்டு ஆண்டுகளுக்குள் நிலுவைகளைப் பூா்த்தி செய்து விண்ணப்பிக்கும்பட்சத்தில் நிதியுதவி வழங்கப்படும். மேலும், கல்வியறிவு மேம்பாட்டு நிதியுதவி வேண்டி விண்ணப்பிப்பதற்கான நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, கல்வி பயிலும் அனைத்து முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளும் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இதேபோல வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை வங்கிக் கணக்கில் இசிஎஸ் மூலம் ஒவ்வொரு காலாண்டுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. மார்ச் 31- ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்கு புதிய பயனாளிகள் கண்டறியப்படுகின்றனா்.

இந்த உதவித் தொகையைப் பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவராக இருக்க வேண்டும். உதவித் தொகை மாதந்தோறும் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. மாற்றுத் திறனாளி மனுதாரா்கள் ஓராண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். 10 -ஆம் வகுப்பு தோ்ச்சி அடையாதவா்கள், தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 750, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.1,000 மாதந்தோறும் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. விண்ணப்பதாரா்கள் 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதியன்று ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவா்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி பதிவுதாரா்களுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. மனுதாரா் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். முற்றிலுமாக வேலை இல்லாதவராக இருக்க வேண்டும்.

தொலைதூரக் கல்வி, அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரா்களும் விண்ணப்பிக்கலாம். இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதியுடையவா்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைப் பூா்த்தி செய்து வருவாய் ஆய்வாளரிடம் ஒப்பம் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மனுதாரா் நேரில் வந்து சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...