கோவையில் இந்தியா கூட்டணி பிரமாண்ட பொதுக்கூட்டம்:  பாசிச ஆட்சியை ஒன்றாக சேர்ந்து வீழ்த்துவோம் -  முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி சூளுரை..!

ஒரு லட்சம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் எம்.பி ராகுல் காந்தி, கோவை, பொள்ளாச்சி, கரூர் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



கோவை: கோவை செட்டிபாளையம் அருகே, எல்என்டி பைபாஸ் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் எம்.பி ராகுல் காந்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

அப்போது, கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் கே. ஈஸ்வரசாமி, கரூர்காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து இருவரும் ஒரே மேடையில் ஆதரவு கோரி உரையாற்றினார்கள்.



கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கோவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், இந்த மண்ணின் மைந்தர். கோவை மாநகராட்சி மேயராக தேர்வுபசெய்யப்பட்டு, மக்களுக்காக பணியாற்றியவர். அதற்கு முன்பு 15 ஆண்டு காலம் இதே மாநகராட்சியில் கவுன்சிலராகவும் இருந்தவர். ஆங்கில இலக்கியம் படித்தவர். பத்திரிகை துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். கோவை மக்கள் விரும்பும் அமைதியான குணம் படைத்தவர். 



பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, கல்வி பணியிலும், சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று, மக்கள் பணியாற்றி வருகிறார். 

எனவே, கோவை மற்றும் பொள்ளாச்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். 

அதேபோல, கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சகோதரி ஜோதிமணிக்கு, கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். 

நான், கடந்த மார்ச் 22 ஆம் தேதி எனது பிரசாரத்தை திருச்சியில் இருந்து துவக்கினேன். ஒவ்வொரு தேர்தல் பிரசார கூட்டமும் மாநாடு போல் நடக்கிறது. அந்த வரிசையில், கோவை, பொள்ளாச்சி கூட்டத்தையும் வெற்றிவிழா மாநாடு போல் நடத்தியுள்ளார்கள். இதற்காக, உழைத்த அமைச்சர்கள் சு.முத்துசாமி, டி.ஆர்.பி.ராஜா, சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன் ஆகியோரை பாராட்டுகிறேன். கரூர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கும் எனது பாராட்டுக்கள்.

நம் வெற்றிக்கு மகுடம் வைத்தது போல் இந்தியாவின் இளம்தலைவர் ராகுல்காந்தி இங்கு வருகை தந்துள்ளார். நாடு சந்திக்கக்கூடிய இரண்டாம் விடுதலை போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கைகளை வலுப்படுத்த திமுக தோளோடு தோள் நிற்கிறது. திமுக எப்போதும், சோதனை காலத்திலும், காங்கிரஸ் கட்சியுடன் இருக்கும் கூட்டணி கட்சி. எப்போதும் வெல்லும் கூட்டணி, நமது கூட்டணி. 

அன்னை சோனியாகாந்தி மீதும், இளம் தலைவர் ராகுல்காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் அனிதா அன்பும், பாசமும் கொண்டவர்கள். நான், இந்த கூட்டத்தின் வாயிலாக அழைப்பு விடுக்கிறேன். ''ராகுல் அவர்களே வருக, புதிய இந்தியாவுக்கு விடியல் தருக''.

இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து உங்களை வரவேற்கிறேன்.

ராகுல்காந்தியின் நடைபயணத்தை, நான் தான் கன்னியாகுமரியில் இருந்து துவங்கி வைத்தன். மும்பையில் நடந்த நிறைவு விழாவிலும் நான் கலந்து கொண்டேன். 



''மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக்கொள்...'' என அண்ணா கூறிய வழியில் ராகுல்காந்தி நடை பயணத்தை துவக்கினார். மக்களோடு மக்களாக இருந்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளார். இந்த தேர்தலின் ஹீரோ, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான். திமுக தொடர்ந்து வலியுறுத்தும் சமூக நீதி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக, ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம், ஒன்றிய அரசு பணியில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, நீட் தேர்வு விலக்கு, நாடு முழுவதும் சாதி வாரியாக கணக்கெடுப்பு, எஸ்.சி.-எஸ்.டி. மாணவர்களின் கல்வி உதவி தொகை இருமடங்கு உயர்வு, ஜி.எஸ்.டி சட்டத்தை ரத்து செய்துவிட்டு, புதிய சட்டம் அமல், வேளாண் இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி ரத்து, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட அங்கீகாரம் என பல்வேறு அம்சங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த வாக்குறுதிகளை ராகுல்காந்தி நிறைவேற்றுவார்.

நமது பிரதமர் மோடி எப்போதும் வெளிநாட்டில் தான் இருப்பார். ஆனால், இப்போது தேர்தல் வந்துவிட்டதால், அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். அப்படி வருகிற இடத்தில், எங்காவது தனது 10 ஆண்டுகால சாதனை பற்றி பேசுகிறாரா? இந்தியா கூட்டணி கட்சிகளையும், அதன் தலைவர்களையும் வசைபாடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். 

எங்கு பார்த்தாலும் ஒரே பல்லவியை பாடி வருகிறார். குடும்ப கட்சி, ஊழல் என இந்த இரண்டையும் பற்றியே பேசுகிறார். இதற்கு நான், பலமுறை பதில் சொல்லி இருக்கிறேன். யாரும், வாரிசு அடிப்படையில் பதவிக்கு வந்துவிட முடியாது. தேர்தலில் நின்று, மக்களை சந்தித்து, மக்கள் வாக்களித்தால் தான் பதவிக்கு வர முடியும். மோடி, குடும்ப அரசியல் என்று சொல்லி, எங்களை மட்டும் அவமதிக்கவில்லை. எங்களை தேர்வு செய்த கோடிக்கணக்கான மக்களையும் அவமதிக்கிறார்.

ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் கட்டினால், அதற்கு வேந்தராக இருக்கக்கூடிய முழு தகுதிகளும் பிரதமர் மோடிக்கு உள்ளது.

தேர்தல் பத்திரம் என ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவந்து, ஊழலை சட்டப்பூர்வமாக மாற்றியது யார்? ஈடி, ஐடி, சிபிஐ  மூலமாக ரெய்டு விட்டு, மிரட்டி, தேர்தல் பத்திரம் பறித்து பா.ஜ.க.வுக்கு பணம் சேர்த்து கொடுத்துள்ளார். பா.ஜ.க.வுக்கு பணம் கொடுத்த கம்பெனிகள் மீது எப்போது ரெய்டு விட்டீர்கள்? இப்படி வசூல் செய்த பணத்தை பற்றி கேட்டால், அது தனி அறக்கட்டளை, என்கிறார். அப்படியானால், பல கோடி ரூபாய் பணம் பெற்றதற்கான கணக்கு எங்கே?

ஒன்றிய பா.ஜ அரசின் ஊழல் பற்றி சிஏஜி அறிக்கை வெளியிட்டது. உடனே, இதை வெளியிட்ட தணிக்கை துறை அதிகாரிகள் 3 பேரை மாற்றுகிறார்கள். அடுத்து, ரபேல் போர் விமான ஊழல். ஒரு விமானத்தை ரூ.526-க்கு வாங்க முந்தைய காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் போட்டது. ஆனால், ஒரு விமானத்தை ரூ.1,676 கோடிக்கு மோடி வாங்கியது ஏன்? இதனால் பயன் அடைந்தவர்கள் யார்? இதுபற்றி காங்கிரஸ் கேட்ட கேள்விக்கு, இதுவரை மோடியிடம் இருந்து பதில் வரவில்லை. 

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தது யார்? கார்ப்பரேட் முதலாளிகளுக்காக ஆட்சி நடத்துவது யார்? என ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கும் இதுவரை பதில் வரவில்லை. அதற்கு பதிலாக, ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்தார்கள். இப்போது ஊழல் கறை படிந்தவர்களை சுத்தப்படுத்துகிறோம் என்கிறார்கள்.

யார் ஊழல்வாதி? கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்... ''யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை...'' என சொல்வதுபோல் உங்கள் கதை உள்ளது. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், தமிழ்நாட்டுக்கு என்னென்ன சிறப்பு திட்டம் கொண்டு வந்தீர்கள்? என உங்களால் எதையும் சொல்ல முடியவில்லை. 

இன்னொரு பக்கம் 10 ஆண்டாக, தமிழகத்தை சீரழித்த பழனிசாமி. நாங்கள், இந்தியா கூட்டணி தான் நாட்டை ஆளவேண்டும் என்கிறோம். ஆனால், யார் ஆள வேண்டும்? என அதிமுகவினரால் சொல்ல முடியவில்லை. யார் ஆளக்கூடாது என்றும் அவர்களால் சொல்ல முடியவில்லை. கள்ளக் கூட்டணிக்கு ஆதாயம் தேடி தரும் களத்துக்கு வந்துள்ளார் பழனிசாமி. தன்னை சுற்றியுள்ள அத்தனை பேர் முதுகில் குத்தினார் பழனிசாமி. பா.ஜ.வை எதிர்த்து பேச பழனிசாமியால் முடியாது. ஏன்? என கேட்டால், அது, கூட்டணி தர்மம் என்கிறார். 

ஒரு வார்த்தையில் இவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், "இது, சிம்பிளி வேஸ்ட்".

நாம் மூன்றே ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகள் செய்துளோம். அதைத்தான் அடையாளமாக காட்டி, வாக்கு கேட்கிறோம். ஒவ்வொரு கூட்டத்திலும் நமது சாதனையால் பயன் அடைந்தவர்கள் பற்றி பேசுகிறோம். நமது திட்டத்தால் பயன் பெறாத ஒரு பெண், நானும் ஸ்டாலினுக்குத்தான் ஒட்டு போடுவேன் என்கிறார். நீங்கள் தான் மகளிர் உரிமை திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறவில்லையே? பிறகு ஏன் ஸ்டாலினுக்கு ஓட்டு போடுவேன் என்கிறீர்கள்? என கேட்டபோது, எனக்குத் தான் ஆயிரம் ரூபாய் கிடைக்வில்லை, என்னைப்போல் எத்தனையோ பேர் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். நிறைய பேருக்கு ஸ்டாலின் உதவுகிறார், அவருக்குத்தான் நான் ஓட்டு போடுவேன் என்கிறார் அந்த பெண்மணி.

தமிழ்நாட்டில், ஒரு கோடியே 15 லட்சம் சகோதரிகள், எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கிற ஆயிரம் ரூபாய், தாய் வீட்டு சீதனம் என்கிறார்கள். மகளிர் இலவச பேருந்து பயண திட்டமும் அப்படித்தான். 

கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து இன்று நான் அடிக்கடி சொல்வேன். ஒரு பெண் குழந்தை படித்தால், ஒரு தலைமுறையே படித்ததற்கு சமம். அதனால்தான், உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். இதேபோல், மாணவர்களுக்கு தவப் புதல்வன் திட்டம் விரைவில் வர உள்ளது. அவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்குவோம்.

தமிழ்நாட்டில், 16 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு சுவையான காலை உணவு திட்டம் கொண்டு வந்துள்ளோம். இந்த திட்டம், கனடா நாட்டிலும் எதிரொலித்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்பு வழங்க நான் முதல்வன் திட்டம் கொண்டு வந்துள்ளோம். நாம் ஆட்சிக்கு வந்த பிறகு 78 லட்சத்து 77 ஆயிரம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வழங்கி உள்ளோம். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் ஒரு கோடி பேருக்கு மேல் பயன் அடைந்துள்ளனர். 

நாங்கள், சொல்லாததையும் செய்வோம் என இப்படி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு பிறந்த இந்த கோவை மண்ணில், உலக தரத்தில் பிரம்மாண்ட நூலகம் அமைக்க உள்ளோம். இப்படி தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் பயன் அடைய வேண்டும் என பார்த்து, பார்த்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். கடுமையான நிதி நெருக்கடியிலும் இவ்வளவு திட்டங்களை தருகிறோம்.

மத்தியில், இந்தியா கூட்டணி அரசு அமைந்தால் இன்னும் பல திட்டங்களை தர முடியும். தொழில்வளம் நிறைந்த கோவை மாவட்டத்தை ஒன்றிய பா.ஜ அரசு நசுக்கி விட்டது. இரண்டு தாக்குதல் நடத்தி நசுக்கி விட்டது. ஒன்று - கருப்பு பணம் ஒழிப்பு என்கிற பெயரில், ஏழைகளில் சுருக்கு பையில் இருந்து பணத்தை எடுத்து விட்டார்கள். அடுத்து - ஜி.எஸ்.டி சட்டத்தை கொண்டு வந்து கோவை முதலாளிகளை, கடனாளிகளாக மாற்றி விட்டனர். 

அண்டை நாடான வங்கதேசத்துடன், ஒன்றிய  பாஜக அரசு போட்ட ஒப்பந்தம் காரணமாக, நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நூல்கள் முடங்கி கிடக்கிறது. அத்துடன், 35 சதவீத டெக்ஸ்டைல் மில்கள் முடங்கி கிடக்கிறது. இப்படி தொழில்களை முடக்கிவிட்டு, கொங்கு பகுதி எனக்கு நெருக்கமான பகுதி என பிரதமர் மோடி கோவை வந்தபோது வடிகட்டிய பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெரிய தொழில் நிறுவனம், பல பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.6,500 கோடியில் கோவையில் ஆலை துவங்க திட்டமிட்டது. இதற்காக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. இந்த ஆலை வந்தால், இங்குள்ள பல பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும். ஆனால், அவர்களை மிரட்டி, அந்த தொழிற்சாலையை குஜராத்துக்கு கொண்டு சென்றுவிட்டார் பிரதமர் மோடி. இதுதான் பா.ஜ.வின் போலி பாசம். 

அந்த செமி கண்டக்டர் தயாரிப்பு ஆலையை மிரட்டி, குஜராத்துக்கு மாற்றியது யார்? கோவை இளைஞர்களுக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விடக்கூடாது என தடுத்தது யார்? பிரதமர் மோடிக்கு, கோவை மக்கள் மீது ஏன் இந்த வன்மம். அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும். பா.ஜ க போன்ற கலவர கட்சிகளை உள்ளே விட்டால் அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சியும் போய்விடும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது யார்? என்று மக்களுக்கு தெரியும். இட்லி, பொங்கல் பிடிக்கும், தமிழ் பிடிக்கும் என ஏமாற்றுகிறவர்களையும் தமிழ்மக்களுக்கு தெரியும். இதன்மூலம், பிரதமர் மோடியின் முகமூடி மொத்தமாக கிழிந்து தொங்கிவிட்டது. 

கோவை வேண்டாம், தமிழ்நாடு வேண்டாம் என புறக்கணித்த மோடிக்கு நாம் இப்போது பதில் சொல்வோம். ''வேண்டாம் மோடி... வேண்டாம் மோடி....'' என ஓங்கி ஒலிப்போம். தெற்கில் இருந்து வரும் இந்த குரல், இந்தியா முழுவதும் கேட்கட்டும். தமிழ்நாட்டை புறக்கணித்தால், தமிழ்மொழியை புறக்கணித்தால், தமிழர் மீதும், தமிழ் பண்பாட்டு மீதும் தாக்குதல் நடத்தினால் நமது பதிலடி எப்படி இருக்கும் என்பதை ஏப்ரல் 19ம் தேதி காண்பிக்க வேண்டும். 

நமக்கு எதிராக அணி வகுத்துள்ள பா.ஜ.வையும், அதிமுக.வையும் ஒருசேர வீழ்த்துவோம். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க, உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன், வாருங்கள். நாற்பதும் நமதே, நாடும் நமதே, என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் மோடியை கடுமையாக விமர்சித்தார். அப்போது, 'வேண்டாம் மோடி' என முதல்வர் கோஷம் போட, கூட்டத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் 'வேண்டாம் மோடி' என திரும்ப கோஷம் எழுப்பினர். 

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசும்போது, தமிழ்நாட்டிற்கு வருவதை நான் எப்போதும் விரும்புகிறேன். தமிழ்நாட்டு மக்களை நேசிக்கிறேன். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம், வரலாறு எனக்கு பிடிக்கும். இதனால் இங்கு வந்து உங்களுடன் பேசுவதை விரும்புகிறேன். இன்று தத்துவ போராட்டம் நடந்து வருகிறது. நரேந்திர மோடியின் அரசு வெளியில் செல்லும் நேரம் இது. மோடியின் அரசு அல்ல, அதானியின் அரசு என தான் கூற வேண்டும். மோடி எல்லாவற்றையும் அதானிக்காகத் தான் செய்கிறார். உள்கட்டமைப்பு வசதி, தேசிய நெடுஞ்சாலை, துறைமுகம் என எதுவாக இருந்தாலும் மோடி அதானிக்கு தந்து விடுவார். 

இப்படி தான், மும்மை விமான இணையத்தில் உரிமை ஒருவரிடம் இருந்தது. அதனை அதானி விரும்பியதால், அதை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதானி அதனை பெற்றுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் அதானிக்கு எப்படி சலுகை அளிக்கப்படுகிறது என நான் பேசினேன். இதனால், என் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனது எம்.பி. பதவியை சில வாரங்களில் பறிக்கப்பட்டு என்னை வெளியேற்றினர். அதானி பிரச்னை குறித்து பேசியதற்கு எனது எம்.பி. பொறுப்பு மட்டும் அல்ல வீட்டையும் பிடிங்கினர். அந்த வீட்டைவிட்டு கொடுத்து விட்டேன். ஏன் என்றால் எனக்கு இந்தியாவில், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான வீடுகள் உள்ளது. 

உங்களின் இதயத்தில் நான் இருக்கிறேன். எனக்கும் உங்களுக்கும் அரசியல் ரீதியான உறவு இல்லை. குடும்ப ரீதியான உறவு உள்ளது. நீங்கள் புத்திசாலிகள், உங்களின் நாகரீகம் தொன்மையானது, ஒருவரை எப்படி மதிக்க வேண்டும் என உங்களுக்கு தெரியும். உங்களுக்கு என தனி வரலாறு உள்ளது. உங்களின் வரலாறு என் கண்முன் தெரிகிறது.

பெரியார், அண்ணா, காமராஜ், கலைஞர் என அறிவாற்றல் மிகுந்த இவர்கள்,  தமிழ்நாட்டிற்கு பல நன்மைகளை செய்துள்ளனர். அவர்கள் உண்மையான தலைவர்கள். அவர்கள் பேசியதை உலகம் கேட்டது. அவர்கள் தங்களின் உள்ளத்தில் இருந்து தமிழக மக்களுக்காக பேசினார்கள். 

இப்போது, தமிழ் மக்கள் தங்களின் குரலில் எளிமையான கேள்வியை எழுப்ப வேண்டும். மோடி, அதானி, ஆர்எஸ்எஸ் பற்றி கேள்வி கேட்க வேண்டும். ஏன் எங்களின் மொழி, வரலாறு, பாரம்பரியத்தை அவதூறாக பேசுகீறிர்கள்? என கேட்க வேண்டும்.

மோடி தமிழ்நாடு வந்தால் தோசை பிடிக்கும் என கூறுவார். டெல்லி சென்றால் ஒரே நாடு, ஒரே மொழி என பேசுவார். நீங்கள் இங்கு வந்து தோசை பிடிக்கும் என கூறி தமிழ்நாட்டு மக்களை கேவலப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறீர்கள். உங்களுக்கு தோசை இல்லை வடை கூட பிடிக்கலாம். அது எங்களின் பிரச்னை இல்லை. தமிழ் மொழி பிடிக்குமா? என்பதுதான் பிரச்னை. 

இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். சிறு, குறு தொழில் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டது. நாங்கள் தமிழ் வரலாற்றை மதிக்கிறோம். இவரை நான்

‘பிரதர்' ஸ்டாலின் என்று தான் அழைப்பேன், அரசியலில் நான் யாரையும் இப்படி பிரதர் என கூறியது இல்லை. ஆனால், ஸ்டாலினை கூறுகிறேன். 

அவர் தேர்தல் பத்திரம் ஊழல் குறித்து பேசினார். பாஜக, வாஷிங் மிஷின் வைத்துள்ளது என தெரிவித்தார். அந்த வாஷிங் மிஷின் என்ன சிஸ்டம் என்றால், முதலில் மோடி அரசியலை சுத்தம் செய்வதாக கூறினார். பின்னர், தேர்தல் பத்திரம் என்ற திட்டம் கொண்டு வந்தார். இதன் மூலம், யார் பாஜவுக்கு பணம் கொடுத்தாலும், அது யார், எவ்வளவு பணம் என்பது குறித்த விவரம் தெரியாது. 

சில வருடங்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் தேர்தல் திட்டம் சட்ட விரோதம் என கூறி, அந்த பணம் அளித்தவர்களில் பாஜக விவரம் தெரிவிக்க ஆணையிட்டது. ஆனால், பெயர் விவரம் வெளியிடவில்லை.

பின்னர், நீதிமன்றம் தலையீடுக்கு பின், ஆயிரம் கோடி ரூபாய் பாஜக கணக்கிற்கு சென்றது தெரியவந்தது. 

அந்த பத்திரம் மூலம் நிதி அளித்தவரின் பெயர், தேதி, நேரம், எவ்வளவு பணம் என அனைத்தும் வெளியானது. இதன் மூலம் மோடியின் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும், எந்த கம்பெனியின் மீது சிபிஐ, இ.டி, வருமான வரித்துறை ரெய்டுகள் நடந்ததோ, அந்த ரெய்டுகளுக்கு பிறகு அந்த கம்பெனிகள் பாஜவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணம் அளித்ததும் தெரியவந்தது. 

பின்னர், பணம் அளித்த கம்பெனிகள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்பட்டது. இது ஒரு சமூக அவலம். இப்படி பணத்தை மிரட்டி வாங்கியுள்ளனர். சுரங்கம், சாலைகள் போன்றவைக்கு ஒப்பந்தங்களை வாரி வழங்கியுள்ளனர். 

இந்த ஊழல் பாஜகவின் சிறு பகுதிதான். ஆனால், மோடி தன்னை நல்லவர் என கூறி வருகிறார்.அதனைத் தான் பிரதர் (மு.க ஸ்டாலின்) வாஷிங்மிஷின் என கூறுகிறார். 

கடந்த 10 ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 83 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியை விட மோசமான நிலையில் உள்ளது. மோடி 16 லட்சம் கோடியை 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் வாரி வழங்கினார். மோடி, அதானிக்கு எதிராக இந்தியா கூட்டணி என்ன செய்ய போகிறது என்றால், முதலில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்படும். 30 லட்சம் காலிப்பணியிடம் உள்ளது. இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.

தனியார் நிறுவனங்கள் மூலம் இளைஞர்கள் பயிற்சி அளித்து, அதற்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.  இளைஞர்களுக்காக அப்ரண்டீஸ் சட்டம், வேலைவாய்ப்பு உறுதி சட்டம் கொண்டுவரப்படும். அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கும் வகையில் வேலை வழங்கப்படும். 

நீட் தேர்வினால் தமிழக இளைஞர்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையா என்பதை நாங்கள் தமிழ்நாட்டின் வசமே விட்டுவிடுவோம். 

தமிழ்நாட்டு விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடியதை நான் பார்த்தேன். அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்களிடம் நான் சென்று பேசினேன். விவசாயிகளுக்கு அவர்களின் விளைவித்த பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அளிப்போம் என உறுதியளிக்கிறேன். மோடி 16 லட்சம் கோடியை வங்கிகள் மூலம் பெரும் முதலாளிக்கு வழங்கியுள்ளார். ஆனால், நாங்கள் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம். 

அடுத்த தலைமுறை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பின் புதிய சட்டங்கள், திட்டம் கொண்டு வரப்படும்.

மோடி, அதானி கூட்டணி இந்தியாவில் இரண்டு பிரிவுகளை உருவாக்கி உள்ளது. ஒன்று கோடீஸ்வரர்கள், மற்றொன்று ஏழைகள். இதனால், நாங்கள் வறுமையை ஒழிக்க முயற்சிகளை எடுக்க உள்ளோம். இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்தை சேர்ந்த பெண்ணிற்கு ஒரு லட்சம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அவர்களுக்கு மாதம் ரூ.8,500 வழங்கப்படும். இந்த தொகை வறுமை நீங்கும் வரை அளிக்கப்படும். ஆஷா அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் இரட்டிப்பு அளிக்கப்படும். 

சமூகநீதியை பொறுத்தவரை ஸ்டாலின் தெளிவாக கூறியுள்ளார். 50 சதவீத விழுக்காடு உச்சவரம்பு என்பது நீக்கப்படும். இந்தியாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். சமூகநீதி நிலைநாட்டப்படும் என உத்தரவாதம் அளிக்கிறேன். எங்களின் மிக சில கொள்கைகளை தான் கூறியுள்ளேன். 

தமிழ்நாட்டு மக்களின் வரலாறு, மொழி, உரிமைகள், அரசியல் சட்டம் அடிப்படையின் மூலம் பாதுகாக்கப்படும். அரசியல் சட்டம் என்பது ஒரு புத்தகம் இல்லை. நாட்டு மக்களின் ஆத்மா. அந்த ஆத்மாவை ஆர்எஸ்எஸ், மோடி தாக்கி வருகின்றனர். இந்தியா மக்களுக்கான நாடு. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சொந்தமானது இல்லை. இன்றைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆர்எஸ்எஸ் தத்துவம் அடிப்படையில் கல்வி குறித்து பேசுகின்றனர். கல்வி நிறுவனம், தேர்தல் ஆணையத்தில் ஆர்எஸ்எஸ் தாக்கம் உள்ளது. இது நாட்டின் கோட்பாட்டை தாக்குகிறது.

பாஜக அரசியல் சட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றி உள்ளது. அவர்கள் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறையை வைத்து தாக்குதல் செய்கின்றனர். இந்த நாடு பிரதமரின் சொத்து இல்லை. இந்த நாடு இங்குள்ள மக்களுக்கு சொந்தமானது. இதனை பிரதமர், அமைச்சர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள். 

அரசியல் சட்டம், ஜனநாயகத்தை நாங்கள் பாதுகாக்க முயற்சி எடுத்துள்ளோம். இந்தியா கூட்டணி நிச்சயமாக இத்தேர்தலில் வெற்றி பெறும். திமுக, காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் பேசினார். 

Newsletter

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...

Man Severely Beaten by Public Over Alleged Chain-Snatching Attempt Near Pappampatti

A video showing members of the public assaulting a man allegedly caught after attempting to snatch a gold chain from a w...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு ந...