கோவை கொடீசியாவில் சைமா சார்பில் வரும் 21ம் தேதி டெக்ஸ்ஃபேர் 2024 கண்காட்சி தொடக்கம்

கண்காட்சி ஜூன் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கோவை கொடீசியா கண்காட்சி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இதில், பல்வேறு நாடுகளில் இருந்து ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்கள், உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குவோர் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.



கோவை: 1933ம் ஆண்டு இந்தியாவின் முதல் நிதியமைச்சர், சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியால், கோவையில் துவங்கப்பட்ட தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா), அனைத்து ஜவுளி பிரிவுகளையும் உள்ளடக்கி செயல்படுகிறது. சைமா கடந்த 2001ஆம் ஆண்டு முதல் “டெக்ஸ்ஃபேர்” என்ற பெயரில் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் சர்வதேச கண்காட்சியை நடத்திவருகின்றது.

ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அதன் உபயோகிப்பாளர்களான ஜவுளி ஆலைகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பரஸ்பரம் பயன் அடைய செய்வதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும். இதற்கு முன்பு நடைபெற்ற “டெக்ஸ்ஃபேர்” கண்காட்சிகளில் பங்கேற்றவர்கள் பயன் அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பதினான்காவது கண்காட்சி வருகின்ற ஜூன் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கோவை கொடீசியா கண்காட்சி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கண்காட்சி காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும். உலகில் நடத்தப்படும் பல்வேறு ஜவுளி இயந்திரங்களின் கண்காட்சிகளில் “டெக்ஸ்ஃபேர்” கண்காட்சி தரம் வாய்ந்ததாக மதிப்பிடப்படுகிறது.

மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்கள், உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குவோர் ஆகியோர் கண்காட்சியில் பங்கேற்கிறார்கள். உலகளவில் கோவை ஜவுளித் தொழில் உற்பத்தி மையமாக திகழ்வதால், “டெக்ஸ்ஃபேர்” கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு நல்ல வியாபாரம் கிடைக்கும்.

இது குறித்து இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சைமாவின் தலைவர், டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் மற்றும் துணை தலைவர், எஸ்.கிருஷ்ணகுமார் ஆகியோர் இந்த நிகழ்வுகள் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கினர். அவர்கள் குறிப்பிடும் போது 240 ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் 260 ஸ்டால்களில் தங்கள் பொருட்களை கண்காட்சியில் வைக்க உள்ளனர் என்று கூறினர்.

தமிழகத்தைத் தவிர, குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மற்றும் டாமன் ரூ டையூ மற்றும் தாத்ரா நகர் ஹாவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களை சேர்ந்த ஜவுளி இயந்திர, உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் தங்கள் பொருட்களை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளனர்.

இது தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமான சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளையும் மற்றும் ஜப்பான், சீன நாடுகளையும் சேர்ந்த ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கு பெற உள்ளனர்.

சைமா தலைவர்கள் மேலும் கூறுகையில், ஜவுளி ஆலைகள் ஒவ்வொரு வருடமும் ஆண்டு மொத்த விற்பனையில் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை உதிரிபாகங்கள் வாங்குவதற்கும், நான்கு சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை ஜவுளி இயந்திரங்களை புதுப்பிப்பதற்கும் செலவிடுகிறார்கள்.

அவ்வாறு வாங்கும் பொருட்களை தீர்மானிப்பதற்கும், புது இயந்திரங்கள் வாங்க முடிவு செய்வதற்கும் இந்த கண்காட்சி சரியான இடமாக அமையும் என்றும் அவர்கள் கூறினர். இறக்குமதி பொருட்களுக்கு மாற்றாக உள்நாட்டிலேயே குறைந்த விலையில் இயந்திரங்களையும் உதிரிபாகங்களையும் உற்பத்தி செய்வோரை ஊக்குவிப்பதும், இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். ஜவுளித்துறை சம்மந்தப்பட்ட அனைவரும், இந்த கண்காட்சியில் கூடுவதால் ஜவுளித்தொழிலின் பல்வேறு பிரிவகளின் உரிமையாளர்களும் பணியாளர்களும் இந்த கண்காட்சிக்கு விஜயம் செய்து பயனடைய சைமா தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

நாடு முழுவதுமிருந்து ஒரு இலட்சம் பேர் இந்த கண்காட்சியை பார்வையிடுவர் என்று எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், அவர்கள் கூறுகையில், இந்த கண்காட்சியின் மூலம் ரூ.1,500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும், சைமா தலைவர்கள் தெரிவிக்கையில், கண்காட்சியின் துவக்க விழா வருகின்ற ஜூன் 21ஆம் தேதி கோவை கொடீசியா கண்காட்சி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாகவும், அது சமயம், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கண்காட்சியை திறந்து வைக்கிறார். சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர், டாக்டர் கே.வி.ஸ்ரீனிவாசன் தலைமை தாங்குகிறார். இந்திய ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் மெஹ்ரா கௌரவ விருந்தினராக பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளார். 

மேலும், நிகழ்ச்சியில் ஜவுளித் தொழில் சார்ந்த பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கவுள்ளனர். கண்காட்சியில் பங்கேற்போருக்கும் கண்காட்சியினை பார்வையிட வருகை தருவோருக்கும் பயனடையும் வகையில் சைமாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (www.simatexfair.org) சென்று விவரங்களை அறிந்து கொள்ளலாம். கண்காட்சியை விஜயம் செய்ய நுழைவு கட்டணம், பதிவு கட்டணம் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...