வண்டல் மண் பெயரில் செம்மண் கடத்தல்: கோவை ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் மனு

கோவை மாவட்டத்தில் வண்டல் மண் பெயரில் செம்மண் கடத்தப்படுவதை தடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது. விதிமுறைகளை மீறி செம்மண் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை கோரப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வண்டல் மண் என்கின்ற பெயரில் செம்மண் கடத்தப்படுவதை தடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



அவர்கள் அளித்துள்ள மனுவில், "தமிழக முதல்வர், விவசாயிகள் பயன்பெறுகின்ற வகையில் வட்டாட்சியர் மூலம் அனுமதி பெற்று டிராக்டர்களில் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் இணைய வழியில் விண்ணப்பித்து சில நிபந்தனைகளுடன் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சிலர் விவசாயிகள் என்கின்ற பெயரில் கோவையில் உள்ள சூலூர், பேரூர், அன்னூர், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, மதுக்கரை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அரசு விதிகளுக்கு புறம்பாக செம்மண்ணை அதிக அளவில் வெட்டி எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் குவிக்கப்படும் செம்மண் ராயல்டி என்ற பெயரில் லோடு ஒன்றுக்கு 2000 ரூபாய் வசூலிக்கப்பட்டு எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவதாகவும் தகவல் தெரிகிறது.

சட்டத்திற்கு புறம்பாக வண்டல் மண் என்ற பெயரில் செம்மண் விற்பனை செய்யப்படுவதை தடுத்து, கனிமவள அதிகாரிகள் மூலம் குவிக்கப்பட்ட மண், எடுக்கப்பட்ட குளம், குட்டை ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி கூறுகையில், "வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெறாமல் கடத்தல்காரர்கள் சிலர் கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் செம்மண்ணை வெட்டி எடுத்து, குவித்து, விற்பனை செய்து வருகிறார்கள். எனவே விவசாயிகள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் கடத்தல் காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டல் மண் விவசாயிகளுக்கு போய் சேர வேண்டும். அரசு உத்தரவுக்கு மாறாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...