கோவை மாவட்டத்தில் சுற்றுலா மற்றும் வனப்பகுதிகளில் ரோந்து பணி தீவிரம் - மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் தொடர் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, சுற்றுலா மற்றும் வனப்பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். மேலும், மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலக எல்.இ.டி நடமாடும் வாகனத்தில் ஒளி பரப்பப்படுவதை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாவட்டத்தில் ஜூலை 30 ஆம் தேதி முதல் மழை பெய்து வருவதாகவும், வால்பாறை மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக மழை பெய்து வருவதாகவும் தெரிவித்தார். கோடைகாலத்தில் குளங்கள் தூர்வாரப்பட்டதால் மழைக்காலத்தில் பெரிதளவு பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.



வால்பாறையில் மண் சரிவால் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், மழை தொடர்பாக தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். வால்பாறையில் மேற்கொண்ட ஆய்வில், மண் சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு முறையான ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். மாநில அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழு வயநாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறையில் இக்குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாவட்ட கண்காணிப்பாளராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மழை தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். அபாயகரமான வீடுகளில் தங்க வேண்டாம் என்றும், சுற்றுலா பயணிகள் நீர்நிலைகள் அதிகமாக உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா இடங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு காவல்துறையினரும் வனத்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும், எந்த நேரத்திலும் மக்கள் தொடர்பு கொண்டால் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உறுதியளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...