சிதிலமடைந்து வரும் 'சின்தடிக் டர்ஃப்' ஹாக்கி மைதானம்: ரூ. 3 கோடி வீண்

கோவை: கோவையில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் முடங்கியுள்ளதால், சுமார் ரூ. 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் சிதிலமடைந்து வருகின்றன.


கோவை: கோவையில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் முடங்கியுள்ளதால், சுமார் ரூ. 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் சிதிலமடைந்து வருகின்றன.



உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பெரும்பாலும் இந்தியா பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. விளையாட்டுத் துறையில் நடைபெறும் ஊழல் இதற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், விளையாட்டு வீரர்களுக்கென சரியா அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், அவர்களுக்கு சரியான பயிற்சி கிடைக்காமல் இருப்பதுவும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. 

திட்டம் 

இந்த சூழலில், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள மாநகராட்சி நிர்வாகங்களைக் காட்டிலும், விளையாட்டு தொடர்பான அடிப்படை வசதிகளை அமைத்து தருவதில் கோவை மாநகராட்சி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவிலேயே மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் முதல் சின்தடிக் ஸ்கேட்டிங் மைதானம் நமது கோவையில் தான் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோவையில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு இந்த மைதானத்திற்கான திட்டம் கோவை மாநகராட்சியால் தயாரிக்கப்பட்டு, ரூ. 4 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால், இதுவரை ரூ. 3 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 

வார்டு எண். 24-க்கு உட்பட்ட ஆரோக்கிய சாமி சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில், கடந்த 2015-ம் ஆண்டு ஹாக்கி மைதானத்திற்கான பணிகளை செய்ய பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு மற்றும் தனியார் பங்களிப்பு (Public-private partnership) திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த பணியின் முதற்கட்டமாக, அங்கிருந்த கால்பந்து மைதானத்தின் ஒரு பகுதி சமன் செய்யப்பட்டது. 

பின்னர், 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் ஹாக்கி மைதானம் உருவாக்கப்பட்டு, தார் பூசப்பட்ட தளம் அமைக்கப்பட்டது. அதோடு அந்த பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.



சின்தடிக் டர்ஃப்

ஆரம்ப கட்டப் பனிகளிலேயே திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஹாக்கி விளையாட்டு பயிற்சியாளர்கள், மைதானம் அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்கி, விரைவில் முடிக்குமாறு மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, கடந்த வருடம் மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ. 1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கியது.

சர்வதேச தரத்திலான 'சின்தடிக் ஆஸ்ட்ரோ டர்ஃப்' எனப்படும் செயற்கை புல் விரிப்புகள் வரவழைக்கப்பட்டன, ஆழ்குழாய் கிணறு அமைத்து ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டிக் கட்டப்பட்டதோடு, மைதானத்தைச் சுற்றி வடிகால் உருவாக்கப்பட்டது. மேலும், தார் பூசப்பட்ட தளத்திற்கு மேல், 13 மி.மீ தடிமன் அளவிற்கு 'ஷாக் பேடு' எனப்படும் ரப்பர் தளம் அமைப்பதற்காக கருப்பு நிற ரப்பர் துகள் மூட்டைகள் வாங்கப்பட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.



இதனைத் தொடர்ந்து, நீர் தெளிப்பான் அமைத்தல், கம்பிவேலி உருவாக்குதல், பார்வையாளர்கள் அமர கேலரி மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்குமிடம் ஆகிய வசதிகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. 

முடக்கம் 

அடிப்படை கட்டுமானங்கள் நிறைவடைந்த நிலையில், திடீரென கட்டுமானப் பணிகளை நிறுத்திய தனியார் நிறுவனம், தற்போது வரை இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.

இது குறித்து, ஹாக்கி வீரர் ஒருவர் கூறுகையில், "மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் கோவை மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். ஹாக்கி போட்டிகளில் வெற்றி பெற்று, விளையாட்டு கோட்டாவில் உயர் கல்வியும், வேலை வாய்ப்பும் கிடைத்த ஏழை மாணவர்கள் இங்கு பலர் உள்ளனர். 

இவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தின் சிறந்த ஹாக்கி பயிற்சியாளர்களும் இங்கு உள்ளனர். ஆனால், பயிற்சி செய்ய தரமான ஹாக்கி மைதானம் நம் நகரில் இல்லை. சர்வதேச தரத்தில் அமைக்கப்படுவதாகக் கூறிவரும் ஹாக்கி மைதானம் வெறும் அறிவிப்பாக மட்டுமே எஞ்சியுள்ளது. 

பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட அடிப்படை கட்டுமானங்கள், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடவும், கால்நடைகளை கட்டிப்போடவும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பாதுகாக்க அங்கு ஒரு காவலாளி கூட நியமிக்கப்படவில்லை. பல வருடங்களாக மழையிலும் வெயிலிலும் கிடந்து வரும் டர்ஃப் விரிப்புகளும், ரப்பர் ஷாக் பேடும் மீண்டும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் அதே தரத்தில் இருக்குமா? என்பதும், இவற்றுக்கு தர ஆய்வு கமிட்டி சர்வதேச தரம் வழங்குமா என்பதும் கேள்விக்குறியே." என்றார். 



விரயம் 

சுமார் இரண்டு வருடங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படாததால் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 'ரப்பர் ஷாக் பேடு' தளம் சிதிலமடைந்து வருகிறது. தண்ணீர் தொட்டி மது கூடாரமாக மாறியுள்ளது, சர்வதேச தரத்திலான 'சின்தடிக் டர்ஃப்' விரிப்புகள் பாழாகி வருகின்றன.



இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகளை பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி தனியார் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிதியாண்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஹாக்கி மைதானம் உருவாக்குவதற்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான, ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் தொடங்கப்பட்டு, ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்." என்றார்.

தொடரும் அலட்சியங்கள்

அரசு மற்றும் தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் பல்வேறு திட்டங்கள் இவ்வாறாகவே முடங்கிக் கிடக்கின்றன. ஒப்பந்த நிறுவனங்கள் பணியினை கால தாமதமாக்கும் போது, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு எந்த அதிகாரமும் இல்லை. 

இதே போல், நஞ்சுண்டாபுரம் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கென ரூ.43 கோடி ஒதுக்கியது. முன்னதாக, இந்த சுத்திகரிப்பு மையம் அமைக்கவும், இயந்திரங்கள் கொள்முதல் செய்யவும் மாநகராட்சி சார்பில் ரூ. 18 கோடி வழங்கப்பட்டது. வழக்குகளாலும், ஒப்பந்த நிறுவனத்தினர் பணிகளை மேற்கொள்வதில் காலதாமதம் செய்ததாலும், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களும், வாங்கப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு குழாய்களும் இயந்திரங்களும் செடி கொடிகள் சூழ புதர் மண்டிக் கிடக்கின்றன.

தற்போது இதே அலட்சியப் போக்கையே, ஹாக்கி மைதானம் அமைப்பதிலும் மாநகராட்சி நிர்வாகம் பின்பற்றி வருகிறது. சிதிலமடைந்து வரும் அந்த மைதானத்தை மீண்டும் முறையாக புதுப்பிக்க, தற்போது செலவு செய்துள்ள தொகையை காட்டிலும் அதிகம் செலவாகும் என்று கூறப்படுகிறது.



கோடி கோடியாக நிதி ஒதுக்குவதில் இருக்கும் அக்கறை, ஒதுக்கிய நிதியை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதிலும் இருக்க வேண்டும் என்பதே மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோவை மக்கள் உரக்கச் சொல்லும் அறிவுரை.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...