சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்கு கோவை டென்னிஸ் வீரர் தேர்வு

கோவை : சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய பல்கலைக்கழக டென்னிஸ் அணியில் கோவையைச் சேர்ந்த வீரர் இடம்பிடித்துள்ளார்.


கோவை : சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய பல்கலைக்கழக டென்னிஸ் அணியில் கோவையைச் சேர்ந்த வீரர் இடம்பிடித்துள்ளார். 

இத்தாலியில் ஜுலை மாதம் 3-ம் தேதியில் இருந்து 14-ம் தேதி வரை நடைபெறும் சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்கான வீரர்களின் தேர்வுக்கான போட்டி, சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 8 - 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வரும் ஆர். ராமகிருஷ்ணன் (21) கலந்து கொண்டார். சிறப்பாக விளையாடிய ராமகிருஷ்ணன் மற்றும் இரு வீராங்கனைகள் உள்பட 4 பேர் இந்திய பல்கலைக்கழக டென்னிஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். 



சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் முதுகலை படிப்பை கோவையில் பயின்று வருகிறார். சென்னை எஸ்.ஆர்.எம்.பல்கலை.,யில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான டென்னிஸ் போட்டியில், பாரதியார் பல்கலைக்கழக அணிக்காக பங்கேற்று, 4-வது இடத்தை பிடித்தார். மேலும், ஏ.ஐ.டி.ஏ., தேசியதர சாம்பியன் போட்டியில் 3 முறையும், இரட்டையர் பிரிவில் 5 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

"இது எனக்கு முதல் சர்வதேச பல்கலைக்கழக போட்டியாகும். இந்தப் போட்டி தொடரில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது பயிற்சியாளர் முகமது ஃபரீஸ், உடற்பயிற்சியாளர் ஹரீஸ் உபேந்திரன், நான் பயிலும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் நவநீதன் மற்றும் எனது பெற்றோருக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 



எனது டென்னிஸ் வாழ்க்கைக்கு அடித்தளமான இருந்தது நான் பயின்ற கோல்டன் கேட்ஸ் பள்ளிதான். 5 வயதில் டென்னிஸ் விளையாட்டை தேர்வு செய்து விளையாடும் போது ஆர்வமில்லாமல் இருந்தேன். ஆனால், விளையாட்டின் தன்மை குறித்து எனது 10 வயதில் உணர்ந்து கொண்டேன். இதைத் தொடர்ந்து, பெங்களூரில் தனது முதல் பயிற்சியை தொடங்கினேன். ஆரம்பகட்டத்தில் பல்வேறு வெற்றி, தோல்விகளை சந்தித்த நான், தற்போது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வெல்ல வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக நாள்தோறும் 8 மணிநேரம் பயிற்சி செய்கிறேன்," என்றார் டென்னிஸ் வீரர் ஆர். ராமகிருஷ்ணன்.

Newsletter