சர்வதேச போட்டியில் பங்கேற்க தடையாக இருக்கும் நிதி வசதி : ஆதரவை எதிர்பார்த்து இருக்கும் கோவை தடகள வீரர்

கோவை : சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று இருந்தும், போதிய நிதி வசதி இல்லாததால், கோவையைச் சேர்ந்த தடகள வீரரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கோவை : சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று இருந்தும், போதிய நிதி வசதி இல்லாததால், கோவையைச் சேர்ந்த தடகள வீரரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 

வரும் ஜுலை மாதம் 3-ம் தேதியில் இருந்து 14-ம் தேதி வரை இத்தாலியில் சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் பங்கேற்க கோவையைச் சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் ஆதார்ஷ் ராம் தகுதி பெற்றுள்ளார். ஆனால், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு, இத்தாலி சென்று சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கு நிதி என்பது பெரும் தடையாக இருக்கிறது. 



காருண்யா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் 4-ம் ஆண்டு படித்து வரும் ஆதார்ஷ் ராம், தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். குறிப்பாக, தேசிய அளவிலான பல்கலைக்கழக உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இத்தனை திறமைகள் இருந்தும், அவரது சாதனை மற்றும் இலட்சியப் பயணத்திற்கு நிதி ஒரு பெரும் சவாலா இருக்கிறது. 



பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி, தடகள வீரரின் விளையாட்டிற்காக 2.3 லட்சம் அவர் பயின்று வரும் பல்கலைக்கழகம் வழங்க வேண்டும். ஆனால், இதுவரையில், ஆதார்ஷ் ராம், தான் பயின்று வரும் பல்கலைக்கழகத்திடம் இருந்து எந்தவித சலுகையோ, நிதியுதவியோ பெறவில்லை. எனவே, தனது இலட்சியத்தை அடைவதற்கு யாரேனும் உதவுவார்களா..? என அவர் பிறரது உதவியை அவர் எதிர்பார்த்துள்ளார். 

"நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வது என உயர்ந்த இலட்சியம். நான் 10-ம் வகுப்பில் எனது தடகளப் பயணத்தை தொடங்கினேன். நிறைய தோல்விகளை சந்தித்தேன். தொடர்ந்து, கடினமாக உழைத்ததன் விளைவாக நான் இந்த நிலையை எட்டியுள்ளேன். நாள்தோறும் 4 மணிநேரம் பயிற்சியில் ஈடுபடுகிறேன். தற்போது, நான் சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளேன். ஆனால், இதுவரையும் எந்தவித சலுகையும், செலவினமும் பெறவில்லை. இது எனது விளையாட்டு வாழ்க்கைக்கு தடையாக இருக்கிறது. எனவே, நிதியுதவிகள் கிடைக்கும்பட்சத்தில் எனது இலட்சியங்களை அடைய முடியும்," என்கிறார் தடகள வீரர் ஆதார்ஷ் ராம். 

சர்வதேச போட்டியில் பங்கேற்க இருக்கும் ஆதார்ஷ் ராமிற்கு உதவ நினைப்பவர்கள் கீழ்காணும் எண்களை தொடர்பு கொள்ளலாம். ஆதார்ஷ் ராம் :+917598721275, உமா மகேஷ்வரி : +919443111678.

Newsletter