கோவை மாவட்ட 3-வது டிவிசன் போட்டி : ஆர்.கே.எஸ்., ரெயின்போ அணிகள் வெற்றி

கோவை: கோவையில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான 3-வது டிவிசன் போட்டிகளில் ஆர்.கே.எஸ். ஐ.சி.சி., கல்விநிலையம் மற்றும் ரெயின்போ கே.எம்.பி., சி.சி., அணிகள் வெற்றி பெற்றன.

கோவை: கோவையில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான 3-வது டிவிசன் போட்டிகளில் ஆர்.கே.எஸ். ஐ.சி.சி., கல்விநிலையம் மற்றும் ரெயின்போ கே.எம்.பி., சி.சி., அணிகள் வெற்றி பெற்றன. 

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் கோவை மாவட்ட அளவிலான 3-வது டிவிசன் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ஆர்.கே.எஸ்., ஐ.சி.சி., கல்விநிலையம் அணியும், கோவை டஸ்கர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில், பேட் செய்த கோவை டஸ்கர் அணி, இடது கை சுழற்பந்துவீச்சாளர் எஸ். கிருஷ்ணகுமாரின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால், அந்த அணி 24.5 ஓவர்களில் 112 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஆர். ராஜ்குமார் 37 ரன்கள் எடுத்தார். ஆர்.கே.எஸ்., சார்பில் கிருஷ்ணகுமார் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆர்.கே.எஸ்., ஐ.சி.சி., கல்விநிலையம் அணி 4 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில், 23.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. அதிகபட்சமாக கே. சபரிநாத் 39 ரன் எடுத்தார். கோவை டஸ்கர்ஸ் அணி சார்பில் அஸ்வின் (4/20) சிறப்பாக பந்துவீசினார். 

மற்றொரு போட்டியில் சீஹாக்ஸ் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் ரெயின்போ கே.எம்.பி. சி.சி., அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ரெயின்போ கே.எம்.பி. சி.சி., அணி, விபின் டி குப்தாவின் சதத்தினால் (106) நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் முடிவில் 279 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய சீஹாக்ஸ் அணியால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

Newsletter