தீபாவளி: பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் 750 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - கோவை மாநகர் காவல் ஆணையாளர்

தீபாவளி பண்டிகையை ஒட்டி கடைவீதி பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருவதால், அங்கு செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு ஏற்பாடுகளை கோவை மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: இன்னும் தீபாவளிக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், கடைவீதி பகுதிகளில் துணி மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நாட்களில், குற்ற சம்பவங்களை தடுக்க, கோவை மாநகர பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதி, காந்திபுரம் போன்ற இடங்களில் 750 போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், என்று கோவை காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.



இன்று காலை முதலே கோவையின் முக்கிய ஷாப்பிங் பகுதிகளான ஒப்பணக்கார விதி மற்றும் கடை வீதிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தபடி இருந்தனர்.



பண்டிகை காலங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கண்காணிப்பு பணிகள் மட்டும் கூட்ட நெரிசல் எவ்வாறு சீர் செய்யப்பட்டு வருகிறது என்பதை நேரில் கண்காணிக்க, இன்று மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஒப்பணக்கார வீதியில் ஆய்வு மேற்கொண்டார்.



ஆய்வின் போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளான கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்களை பார்வையிட்டார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையாளர்: தீபாவளிக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல பல்வேறு வசதிகளை செய்துள்ளோம். ஒப்பணக்கார வீதி, 100 அடி சாலை, கிராஸ் கட் சாலை, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பகுதிகளுக்கு வந்து சென்றுள்ளனர். செயின் வழிப்பறி திருடர்களிடம் இருந்து பொதுமக்களை காக்க, கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளோம். அதேபோல, கண்காணிப்பு கோபுரங்களையும் அமைத்துள்ளோம். தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதால், கோவை மாநகரில் பண்டிகை காலத்தில் குற்றங்கள் ஏதும் பெரிய அளவில் நடைபெறவில்லை.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், இரண்டு துணை ஆணையாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல, கூட்ட நெரிசலை குறைக்க இரவு நேரங்களில் கடைகள் செயல்படும் நேரத்தை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறோம். அதேபோல, அசம்பாவிதங்களை கையாள தீயணைப்பு, மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது.

கடைவீதி, காந்திபுரம் போன்ற பகுதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்து வருவதால், அப்பகுதிகளில் கூடுதல் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கடைவீதி பகுதிகளில் பேருந்துகள் வராமல் மாற்றுப்பாதையில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். மக்கள் அதிகம் வரும் பகுதிகளில் 14 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது,

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் தங்களது வீட்டை பூட்டி செல்லும்பொழுது, அவரவர் பகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும் போது, அந்த தெருக்களில் இரவு ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை போலீசார் அதிகப்படுத்துவர்.

கூட்ட நெரிசலை தவிர்த்து, பேருந்துகளில் வெளியூர்களுக்கு செல்பவர்கள் வரிசையில் நின்று பொறுமையாக பேருந்துகளில் ஏற காவல்துறையினர் உதவியாக இருப்பார்கள்.

பண்டிகை நாட்களில் பொதுமக்கள் அவரவர் ஊருக்கு செல்ல முனைப்பு காட்டுவார்கள் என்பதை பயன்படுத்திக் கொண்டு, ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்தால் வழக்குபதிவு செய்யப்படும். அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை தயங்காது.

அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூலித்தால், பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு காவல் ஆணையாளர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...