கோவையில் நடைபெற்ற காவலர் பயிற்சி நிறைவு விழா - பயிற்சியை நிறைவு செய்த 184 பெண் காவலர்கள்..!

கோவை பி.ஆர்.எஸ்., காவலர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பயிற்சியை நிறைவு செய்த 184 பெண் காவலர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார்.



கோவை: கோவை பி.ஆர்.எஸ்., பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற 184 பெண் காவலர்களின் பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு காவலர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.



இதனை தொடர்ந்து, பயிற்சியில் சிறப்பிடம் பெற்ற காவலர்களுக்கு பதக்கம், மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.



இதனையடுத்து, பயிற்சியை நிறைவு செய்த பெண் காவலர்கள் இடையே மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, பயிற்சி பெற்ற 184 காவலர்களில், 20 சதவீதம் மட்டும் தான் பள்ளிப்படிப்போடு நிறுத்தியவர்கள்.

முதுகலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் பட்டதாரிகள், இளநிலை பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். போலீஸ் துறை எந்தளவு திறமை வாய்ந்தவர்களையும், மிகுந்த கல்வித்தகுதி கொண்டவர்களையும் ஈர்த்துள்ளது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

இந்த கல்வித்தகுதி வெறும் காகிதத்தில் மட்டும் இருந்து விடக்கூடாது. அதை முழுமையாக தமிழக காவல் துறைக்கும், மக்கள் சேவைக்கும் பயன்படுத்த வேண்டும்.

இந்த பயிற்சிப்பள்ளி, 1912ல் தொடங்கப்பட்டது. இத்தனை பழம் பெருமை வாய்ந்த பள்ளியில் பயிற்சி முடித்த காவலர்கள் அனைவரும், கோவை போலீஸ் பயிற்சிப்பள்ளியின் பெயரையும் புகழையும் காப்பாற்ற வேண்டும்.



பயிற்சி நிறைவு பெற்ற காவலர்களுக்கு துப்பாக்கி பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மிக அவசியமானது. ஆனால் அதை விட முக்கியமானது இன்றைக்கு நாம் இருக்கும் சமூக வலைதள உலகம்.

நாம் பணி செய்யும் ஒவ்வொரு கணமும் நமது செயல் அனைத்தையும் யாரோ கண்காணித்து கொண்டு இருக்கின்றனர்; யாரோ பதிவு செய்து கொண்டே இருக்கின்றனர் என்ற கவனத்துடன் பணிபுரிய வேண்டும்.

துப்பாக்கி பயிற்சி ஒரு பக்கம் இருந்தாலும் இந்த பயிற்சி முக்கியம். துப்பாக்கியை விட வலிமையானவை கேமராக்கள். மொபைல் போன் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு செய்தியாளராக இருக்கின்றனர்.

நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் கண்காணிக்கப்படுகிறது என்பதை மறந்து விடக்கூடாது. கேமராவுக்காக எதையும் செய்ய தேவையில்லை.

உளப்பூர்வமாக, மனப்பூர்வமாக பயிற்சி பெற்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் நேர்மையாக, சட்டத்தை மட்டும் செயல்படுத்த கூடியவர்களாக செயல்பட வேண்டும்.

உங்கள் கல்வித்தகுதி அடிப்படையில் போலீஸ் துறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் பணி இருக்க வேண்டும். ஏதோ பணியில் சேர்ந்து விட்டோம் என்று எண்ணி இராமல், நமது சேவையின் மூலம் என்ன செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...