சவாலான சைபர் கிரைம் குற்றங்களை சாதுரியமாக கையாளும் கோவை சிட்டி சைபர் கிரைம் போலீசார்...!

சைபர் கிரைம் குற்றங்களுக்கு எல்லையே இல்லை என்ற அளவிற்கு ஒவ்வொரு நாளும் நூதன முறையில் குற்றங்கள் அரங்கேறி வந்தாலும், கல்லூரிகளில் சைபர் கிளப் போன்ற முயற்சி மூலம் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என்று சிட்டி சைபர் கிரைம் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



கோவை: நீரின்றி அமையாது உலகு என்று சொல்வது போல நவீன தொழில்நுட்பம் இன்றி அமையாது மனிதனின் வாழ்க்கை என்று சொல்லும் அளவிற்கு, மனித வாழ்க்கையில் நவீன தொழில்நுட்பம் நகையும் சதையுமாக பின்னிப் பிணைந்திருக்கின்றன.

இன்று நம் உடலில் உள்ள உறுப்புகளில் புதிதாக இணைந்த உறுப்பு செல்ஃபோன் என்றால் அது மிகையல்ல. உறங்கும் நேரத்தை தவிர்த்து மீதம் உள்ள நேரத்தில், அலைபேசியுடன் தான் பயணிக்கிறது நம் வாழ்க்கை. செல்ஃபோனை வைத்திருப்பவர்கள் உலகத்தையே தன்னுள் வைத்திருப்பதாக உணர்கின்றனர்.

பால்காரருக்கான கட்டண பரிமாற்றத்தில் ஆரம்பித்து, கரண்டு பில், மொபைல் ரீசார்ஜ் தொடங்கி டீக்கடையில் டீ சாப்பிட்டுவிட்டு, கூகுல் பே மூலம் பண பரிவர்த்தனை என சகலமும் ஆன்லைனிலேயே நடக்கின்றன.

அப்படிப்பட்ட நவீனம் நம் நேரத்தை சேமிப்பதில் துவங்கி பல்வேறு விதங்களில் நமக்கு உதவியாக இருந்தாலும், சிறிய அஜாக்கிரதை கூட பெரிய அளவில் பண இழப்பை நமக்கு ஏற்படுத்தும் என்பதையும் மறந்து விட முடியாது. தொழில்நுட்பத்தை துஷ்பிரயோகம் செய்து பண மோசடியில் ஈடுபட்டு வரும் குற்றங்களை சைபர் குற்றங்கள் என்கிறோம்.

ஒவ்வொரு நாளும் புதுப்புது நவீன யுக்திகளை கையாண்டு குற்றங்களில் ஈடுபட்டு வரும் சைபர் கிரிமினல்களை போலீசார் கைது செய்து வந்தாலும், இவர்களுக்கு, இரையாகும் அப்பாவி மக்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றனர்.

இன்றைய சிறப்பு தொகுப்பில் சைபர் கிரைம் குற்றங்கள் பற்றியும் காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும் பார்ப்போம்.

பெருகிக்கொண்டே போகும் சைபர் குற்றங்கள் குறித்து காருண்யா பல்கலை கழக சைபர் கிரைம் துறை தலைவர் முனைவர் ரஞ்சித்திடம் பேசினோம். அப்போது அவர், பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டார்.

லிங்க்கை கிளிக் செய்வது தான் முதல்படி

அலைபேசிக்கு எதாவது பிரபல நிறுவனத்தின் பெயரில் லிங் அனுப்புவது, அதனை கிளிக் செய்தவுடன் அலைபேசியை ஹேக் செய்து மோசடிகளை ஆரம்பிப்பது தான் சைபர் கிரைமின் முதல்படி நிலை. ஹேக் செய்யப்படும் அலைபேசியின் கேமரா முதல் கேலரி வரை அனைத்துமே மானிடரிங் செய்து டேட்டாக்களை திருடுவது, அடுத்த கட்டம்.

இந்த டேட்டா திருட்டு அலைபேசியை பயன்படுத்தும் நபருக்கே தெரியாமலே நடக்கின்றன. அதன் பின்னரே மோசடிகள் வெளிப்படையாக அரங்கேற ஆரம்பிக்கும். திருடப்பட்ட டேட்டாக்களை கொண்டு மிரட்டுவது, புகைப்படத்தை மாஃப் செய்து ஆபாசமாக சித்தரித்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்புவதாக சொல்லி பணம் பறிப்பது (குறிப்பாக பெண்களை), மொபைலை ஹேக் செய்து ஓ டி பி திருடி கிரிடிட் கார்டுகளில் பணம் பறிப்பது, லோன் ஆப் மூலம் ஆவணம் இன்றி இன்ஸ்டண்ட் கடன் தந்து அதிக வட்டி கேட்டு டார்ச்சர் செய்து மிரட்டி அதிக பணம் பறிப்பது என்று ஆன்லைன் ஆசாமிகள் அரங்கேற்றும் குற்றங்கள் வகை வகையாக அளவின்றி நடந்துவருகின்றன.

ஒரு ஆண்டில் 54,000 சைபர் குற்றங்கள் பதிவு

சமீப காலத்தில் மளமளவென்று அதிகரித்த இந்த சைபர் கிரைம் குற்றங்கள், வருடந்தோறும் உயர்ந்துகொண்டே இருக்கின்றன. முந்தைய ஆண்டுகளை விட நடப்பாண்டில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளவில் நடந்திருக்கின்றன. ஒரு புள்ளி விவரத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் 2020 - 2021-ல் மட்டும் 54 ஆயிரம் சைபர் கிரைம் குற்றங்கள் நடந்ததாக தெரிவிக்கின்றன.

இதில், தமிழ்நாட்டில் மட்டுமே 12 ஆயிரம் சைபர் குற்றங்கள் நடந்திருக்கின்றன என்று தெரிவித்தார்.

மிரளவைக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து என்ன சொல்கிறார்கள் காவல்துறையினர்..?

மாநகர காவல் ஆணையளர் பாலகிருஷ்ணன் மற்றும் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண் என இருவரிடம் நாம் பேசிய போது அவர்கள் நம்மிடம் முதலில் சொன்னது, சைபர் கிரிமினல் குற்றவாளிகளுக்கு எல்லையே இல்லை. அதாவது சைபர் (சுழியம் - பூஜ்ஜியம்) நெம்பருக்கு எப்படி தொடக்கமோ, முடிவோ இல்லாமல் இருக்கின்றதோ அப்படித்தான் சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு எல்லை இல்லை, என்றனர்.

எல்லை கடந்து அரங்கேறும் சைபர் குற்றங்கள்

சைபர் கிரைம் மோசடி பேர்வழிகள் உங்கள் பக்கத்து வீட்டிலிருந்து, அலுவலங்களில் இருந்து, வெளி நாடுகள் இருந்து என இங்கிருந்து வேண்டுமானாலும் குற்றங்களை அரங்கேற்றலாம். அவர்களுக்கு உங்களை தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. நூற்றுக்கணக்கான நபர்களுக்கு அவர்கள் வலை வீசுவார்கள். 

சைபர் குற்றங்களுக்கும், குற்றவாளிகளுக்கும் எல்லையே இல்லை என்பதை அறிந்து அவர்கள் அரங்கேற்றும் நூதன மோசடிகளை சல்லடை போட்டு கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் கோவை மாநகர சைபர் போலீசார்.



அதனடிப்படையில் கோவையை பொறுத்தவரையில் மாநகர காவல் ஆணையளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் சிட்டி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் குற்றவாளிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் குற்றங்களே நடக்காமல் இருக்க போதிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு தேவை என்பதனால் பொதுவெளியிலும் கல்லூரி மாணவர்களிடமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியே கல்லூரிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள "சைபர் கிளப்" முயற்சி. 

"சைபர் கிளப்" என்ற புதிய முயற்சி



ஒவ்வொரு கல்லூரிகளிலும் சைபர் கிரைம் துறையில் ஆர்வம் காட்டுகின்ற மாணவர்களை ஒன்றிணைத்து சைபர் கிளப்புகளை உருவாக்கி வருகின்றனர். ஆர்வம் காட்டும் மாணவர்கள் மத்தியில் சைபர் கிரைம் இன்ஸ்பெட்கர் அருண் தொடர்ந்து செமினார் நடத்தி வருகின்றார். 

இதன் மூலம், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை எடுத்துச் செல்ல முடியும் என திட்டமிட்டுள்ள போலீசார் இனி சைபர் குற்றங்களை படிப்படியாக குறைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், யாரேனும் ஏமாறும் பட்சத்தில் 1930 என்ற எண்ணுக்கு உடனடியாக அழைக்கவும் அல்லது சைபர் கிரைம் இணையதள முகவரியில் புகாரை தெரிவிக்கவும் அறிவுறுத்தி வருகின்றனர். அவ்வாறு புகார் தரும் பட்சத்தில் உடனடியாக இழந்த பணத்தை மீட்கவும் முடியும் என்கின்றனர். 

வட இந்தியா, சீனாவிலிருந்து இயங்கும் சைபர் கிரைம் நெட்வர்க். ஒரே வருடத்தில் 500 கோடி ஹவாலா பரிவர்தனை. 



சைபர் குற்றங்கள் நடத்துவோரின் பின்னணி மற்றும் பரிவர்தனை குறித்து சைபர் கிரைம் கன்சல்டண்ட் சங்கர் ராஜ் சுப்ரமணியனிடம் நாம் பேசினோம். அப்போது நமக்கு பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.

நம் நாட்டில் நடக்கின்ற சைபர் கிரைம்கள் இந்தியாவில் பெரும்பாலும் வட மாநிலங்கள், சீனாவிலிருந்து இயங்கும் நெட்வொர்க்குகள் குற்றங்களை அரங்கேற்றுகின்றனர். போலி டொமைன் முலமாக சர்வரை மெயிண்டன் செய்து டேட்டாக்களை திருடும் ஆன்லைன் ஆசாமிகள் சைபர் கிரைமுகளில் ஈடுபடுகின்றனர். 

ஒரே வருடத்தில் ஆன்லைன் வழிப்பறியில் மட்டும் 500 கோடி ஹவாலா பரிமாற்றம் நடந்திருகின்றன. இவர்களின் சர்வரும் டொமைனும் போலியாக கள்ளச் சந்தையில் வாங்கப்பட்டு பயன்படுத்துவதனால் அவர்களை பிடித்து அடையாளம் கண்டு கைது செய்வதில் சிரமம் உள்ளது. 

எனவே, சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர். 

அலர்ட் மக்களே! 

நூதன கொள்ளையில் ஈடுபடுகின்ற ஆன்லைன் ஆசாமிகளிக்கு அதிகம் இல்லத்தரசிகளும், பெண்களே இலக்காக உள்ளனர். இந்த நிலையில், ஆன்லைன் பித்தலாட்ட பேர்வழிகளிடமிருந்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். 

எனவே பொதுமக்கள் அலைபேசியில் தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யாமல், கிஃப்ட் லிங்குகளை கிளிக் செய்யாமல் அலைபேசியில் தெரிவிக்கும் கன்டிசன்களை படித்து பயன்படுத்த வேண்டும். தற்போதைய காலத்தில் அலைபேசி பயன்பாட்டை தவிற்க முடியாது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனாலும், பாதுகாப்புடன் பயன்படுத்துவதே ஆன்லைன் ஆசாமிகளிடமிருந்து தப்பிக்க ஒரே வழி. 

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...