திருப்பதி ஸ்ரீவாரி தோமால சேவை ஒதுக்கீட்டில் பாரபட்சம் - கோவை பக்தர்கள் புகார்

திருப்பதியில் வாரத்தில் மூன்று நாட்கள் அதிகாலையில் நடைபெறும் தோமால சேவையில் பங்கேற்க ஆந்திரா, தெலுங்கானா பக்தர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கோவையை சேர்ந்த பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை நேரத்தில் பல்வேறு சேவைகள் நடைபெறுவது வழக்கம். இதில் தோமால சேவையும் ஒன்றாகும். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சேவை அதிகாலை நேரத்தில் செய்யப்படும்.

இதில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் சேவையில் பங்கேற்க ஒதுக்கீடு பெற்றவர்கள் விபரம் வெளியிடப்படும்.

இவ்வாறு வெளியிடப்படும் பட்டியலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பக்தர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை, சத்தி ரோட்டை சேர்ந்த பழனிச்சாமி மற்றும் மகாலிங்கம் உள்ளிட்டோர் கூறியதாவது, திருமலையில் அதிகாலை நடைபெறும் தோமால சேவையில் பங்கேற்பவர்களுக்கு சுவாமியை மிக அருகில் சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மாதந்தோறும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி மதியம் 12 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். நாடு முழுவதும் பெறப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் 24-ம் தேதி மதியம் 12 மணிக்கு பின் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு வழங்கப்படும். அவ்வாறு செய்வதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு மட்டுமே அதிகம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நவம்பர் மாதத்தில் நடைபெறும் தோமால சேவைக்கு மொத்தம் 132 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா 74 பேர், தெலுங்கானா 23 பேர் தமிழகம் உள்ளிட்ட மற்ற அனைத்து மாநிலங்களும் சேர்த்து 35 பேருக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் நடைபெறும் தோமால சேவையில் பங்கேற்க மொத்தம் 70 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா 34 பேர், தெலுங்கானா 14 பேர், தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் 22 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் தோமால சேவையில் நடைபெறும் குலுக்கல் முறையில் முறைகேடு நடப்பது தெளிவாகிறது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பல முறை தொடர்பு கொண்டும் அதிகாரிகளுடன் பேச முடியவில்லை. கடவுள் முன் அனைவரும் சமம். எனவே, அவருக்கு செய்யும் சேவையில் பங்கேற்க ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவது மிகவும் தவறான செயல்.

திருமலை தேவேஸ்தான நிர்வாகம் இதுபோன்ற முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...