குன்னூரில் ஆன்லைன் முதலீட்டில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 92 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூன்று பேர் கைது

குன்னூரில் வலைத்தளத்தில் லிங்க் அனுப்பி ஆன்லைன் முதலீட்டில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம், 92 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஒருவரின் இன்ஸ்டாகிராமில், அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் ஒரு வலைத்தள முகவரி லிங்க் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த லிங்கை கிளிக் செய்து, அதில் சில டாஸ்க்குகளை நிறைவேற்றி, அதன் மூலம் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதை நம்பிய தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் முதலில் 100 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அந்த பணம் இரட்டிப்பானதும் அதன் பின்னர் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். ஆயிரங்கள் பின்னர் லட்சக்கணக்கில் மாறியது.

இவர் முதலீடு செய்த பணத்திற்கான இரட்டிப்புத்தொகை நேரடியாக இவரது வங்கிக் கணக்கிற்கு கொண்டு வரப்படாமல் ஆன்லைன் மூலம் வேறு ஒரு கணக்கில் இருப்பதாகவும் அந்த கணக்கில் இருந்து தேவைப்படும் சமயத்தில் உங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோசடி பேர்வழிகள் இவரிடம் கூறியுள்ளனர்.

இதை நம்பிய அவர் தனது வங்கி கணக்கிலிருக்கு பணம் வராமலே வேறு ஒரு கணக்கில் தனக்கான தொகை இரட்டிப்பாகி வருகின்ற எண்ணத்தில் 40 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். முடிவில் பணம் அதிக அளவில் கையை விட்டு சென்றது இவருக்கு தெரிய வந்தது.

இதை தொடர்ந்து தனக்கான தொகையை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றுமாறு கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு செய்ய முடியாது என்றும், நீங்கள் கூடுதல் பணம் முதலீடு செய்தால் மொத்த தொகையையும் வங்கி கணக்குக்கு மாற்றுவதாக கூறியுள்ளனர்.

இவ்வாறு, கடந்த செப்டம்பர் ஒரு மாத காலத்தில் அவரிடம் 92 லட்சம் ரூபாய் ஏமாற்றி வாங்கியுள்ளனர். ஆனால் அவருக்கு அவருடைய பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதன் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

முடிவில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தேயிலை ஏற்றுமதி உரிமையாளர் இதுகுறித்து உதகை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.



இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நிவாஸ் தலைமையில் ஆய்வாளர் பிலிப், ஆகியோர் தனி படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் இன்ஸ்டாகிராமில் லிங்க் அனுப்பி பணம் மோசடி செய்தவர்கள் தெலுங்கானா மாநிலம் வாரங்கல், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்ததும், இவர்கள் நெட்வொர்க்காக குழு அமைத்து பணியாற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து இவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் வாரங்கல், தூத்துக்குடி, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் விசாரணை மேற் கொண்டு இந்த சம்பவங்களில் தொடர்புடைய 3 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் சேலம் இளம்பிள்ளை பெருமாள் கவுண்டன் பட்டியை சேர்ந்த எழில் ராஜா வயது 32, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தலைவன் கோட்டை பகுதியை சேர்ந்த முத்துராஜ் வயது 32, தென்காசி மாவட்டம் வெள்ளக்கல் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் வயது 27, என்பதும் தெரியவந்தது.

இதில் எழில் ராஜா கோவையிலும், பாலசுப்பிரமணியம் மற்றும் முத்துராஜ் தூத்துக்குடியிலும் வைத்து கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் இவர்கள் நீலகிரி மாவட்டம் உதகைக்கு கொண்டுவரப்பட்டனர். விசாரணைக்கு பின், குன்னூர் நீதிமன்ற நீதிபதி இசக்கி மகேஷ் குமார் முன்னிலையில் இவர்கள் 3 பேரையும் ஆஜர்ப்படுத்தி குன்னூர் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...