பல்லடம் காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச சதி திட்டம் தீட்டிய ரவுடி சகோதரர்கள் சிறையில் அடைப்பு

பல்லடம் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டம் தீட்டியதாக வெளியான வீடியோவை தொடர்ந்து, செந்தில்நகரை சேர்ந்த அன்புமணி, வீரமணி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதாப்பூர் ஊராட்சிக்குட்பட்ட செந்தில் நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஊருக்கு ஒதுக்கு புறமாக இப்பகுதி அமைந்திருப்பதால். இங்குள்ள சிலர் கஞ்சா மற்றும் மது குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே தினந்தோறும் ஏதாவது ஒரு வீட்டில் பொருட்கள் காணாமல் போவது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதனிடையே காணாமல் போன பொருட்கள் அருகில் உள்ள பழைய இரும்புக் கடையில் இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனிடையே மாதப்பூர் ஊராட்சி சார்பில் பதிக்கப்பட்டிருந்த கேபிள் வயர்கள் மற்றும் வீடு கட்டப்பட்டு வரும் இடங்களில் இருந்து கட்டுமான பொருட்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அவசர உதவி எண் 100-க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட புகார்தாரர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஆசாமி ஒருவர் செந்தில் நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் திரவியத்தை கொலை செய்தால், தனது குடும்பத்தார் வீட்டை விற்று 10 லட்சம் வரை செலவு செய்வார்கள் எனவும், ஏற்கனவே சிறையில் இருந்த போது காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டம் தீட்டியதாகவும் பேசிய பகீர் வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வீடியோவில் பேசிய நபர் செந்தில் நகரை சேர்ந்த அன்புமணி மற்றும் வீரமணி என்பது தெரியவந்தது. மேலும் காவல் ஆய்வாளர் மகன் பூபால் என்பவரிடம் வழிப்பறி செய்த வழக்கில் அன்புமணி சிறைக்கு சென்று நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி பல்லடம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பல்லடம். போலீசார் அன்புமணி மற்றும் வீரமணியை தேடி வந்தனர். இதனிடையே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கனூர் பிரிவு அருகே நின்றுகொண்டிருந்த இருவரையும் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.



பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைக்காக பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அன்புமணி மற்றும் வீரமணி ஆகியோர் மீது ஐ.பி.சி 294 பி, 506(2), 7(1) சி.எல்.ஏ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, இருவரும் மருத்துவ பரிசோதனை முடிந்து பின்னர் பல்லடம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பொதுமக்களையும் காவல்துறையையும் அச்சுறுத்தும் விதமாக பேசி வீடியோ வெளியிட்ட ரவுடி சகோதரர்களின் அட்ராசிட்டிக்கு முடிவு கட்டிய பல்லடம் துணை கண்காணிப்பாளர் சவுமியாவிற்கு அப்பகுதி மக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...