கூடலூரில் வீட்டின் சுவரை இடித்து தள்ளிய காட்டு யானை - மூதாட்டி பலியான சோகம்

நீலகிரி கூடலூர் அருகே வீட்டின் சுவரை காட்டு யானை சேதப்படுத்தியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, காட்டு யானையை உடனடியாக பிடிக்க கோரி பொதுமக்கள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவாலா, நாடு காணி, புளியம்பரை போன்ற பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. நாள்தோறும் ஊருக்குள் வரும் காட்டு யானைகள் வீடுகளை உடைத்து வீட்டில் உள்ள அரிசி போன்ற உணவு பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்றிரவு வாழவயல் பகுதியில் பாப்பாத்தி என்பவரது வீட்டின் சுவரை மக்னா யானை இடித்து தள்ளியது.



இதில் வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்த மூதாட்டி பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அவரது உறவினர்களான ராமலிங்கம்(68), சுந்தரம்பாள்(60) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். சுவர் இடிந்த சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், யானையை விரட்டிவிட்டு படுகாயமடைந்த இருவரையும் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் இறந்த பாப்பாத்தியின் உடலை எடுக்கவிடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன் உள்ளிட்டோர் அந்த மக்னா யானை தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் உடனடியாக பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் உடலை எடுக்க அனுமதித்தனர்.

இதனிடையே வீட்டை சேதப்படுத்திய யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



யானை ஒன்று வீட்டின் சுவரை இடித்த தள்ளியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...