9 மடங்கு எரிபொருள் செலவு மிச்சம் - கோவையில் நடப்பாண்டில் 4,253 எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை...!

எரிபொருள் விலை உயர்வு மற்றும் குறைவான பராமரிப்பு செலவு போன்ற காரணங்களினால் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர் என்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கே எதிர்கால மார்கெட்டில் டிமாண்ட் என்று சந்தை ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



கோவை: போக்குவரத்துக்கு பெரும்பாலானோர் பயன்படுத்தப்படும் வாகன வசதிகளில் பைக் மற்றும் காருக்கும் என்றுமே தனி இடம் உண்டு. டக்கென்று ஒரு இடத்துக்கு செல்ல பைக் உதவுவது போல வேறு எந்த வாகனமும் உதவாது என்பதே வாகன ஓட்டிகளின் ஒருமித்த கருத்தாகும். 

பெட்ரோல் மூலமாக இயங்கும் பைக் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் விற்பனை ஒருபுறம் நடந்துவரும் நிலையில், மறுபுறம் மின்சாரத்தால் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 

முதலில், அங்கொன்றும் இங்கொன்றுமாக அபூர்வமாக பொதுவெளியில் எலக்டிரிக் வாகனங்கள் கண்ணில் பட்ட நிலையில், தற்போது குறைந்தபட்சம் சிக்னலுக்கு ஒரு எலக்டிரிக் வாகனத்தையாவது பார்க்க முடிகிறது. 

மார்க்கெட்டில் எலக்ட்ரிக் வாகனங்கள் மவுசு அதிகரிப்பு. 

முந்தைய ஆண்டுகளை விட எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை இந்தாண்டு குறிப்பிடும் படியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் 1,390 எலக்ட்ரிக் வாகனங்கள் விற்கப்பட்டது. இதே, 2021 ஆம் ஆண்டு 2328 எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அதாவது, எலக்ட்ரிக் வாகன விற்பனை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 

11 மாதத்தில் 4523 எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை. 

கோவையில் நடப்பாண்டில் நவம்பர் இரண்டாவது வார வர்த்தகத்தின் அடிப்படையில் 3884 எல்க்டிரிக் ஸ்குட்டர்கள் மற்றும் 369 எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தமாக 4253 எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

இதில், கோவை நகர்புறத்தில் மட்டும் 2980 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களும், 278 நான்கு சக்கர வாகனங்களும் விற்பனையாகியுள்ளது. மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மொத்தமாக 904 இருசக்கர வாகனங்களும் 91 நான்கு சக்கர வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருவதனால், இதுகுறித்து எலெக்ட்ரிக் வாகனத்தை பயன்படுத்துவோரின் அனுபவத்தை அறிய சிம்பிளிசிட்டி செய்தி குழு வாடிக்கையாளர்கள் மற்றும் சந்தை ஆராய்ச்சியாளர்களிடம் பேசிய போது பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன.

பராமரிப்பு, எரிபொருள் செலவு குறைவு - எலக்ட்ரிக் வாகனங்கள் தான் வருங்காலத்தின் சிறந்த சாய்ஸ். 

எலக்ட்ரிக் பைக் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று தெரிவித்த பால் விநியோகம் செய்யும் மாலதி என்ற பெண்ணிடம் நாம் பேசினோம். 



வழக்கமாக, பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்றால் 100 கிலோ மீட்டருக்கு எரிபொருள் தேவைக்காக 200 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருக்கின்றது. 

ஆனால், எலக்ட்ரிக் வாகனத்தில் செல்லும் போது அதிக பட்சம் 3 யூனிட் மின்சாரம் போதுமானதாக இருக்கின்றது. அதன் மொத்த எரிபொருள் செலவு 15 ரூபாய்க்குள் அடங்கும். அதுமட்டுமின்றி, ஆயில் மாற்றுதல் போன்ற இதர பராமரிப்பு செலவுகளும் இல்லை. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை தாமதமின்றி சர்வீஸ் செய்து விட்டால் வாகன பழுது ஏற்படாது.

சிலர் வண்டி பற்றி எரிகின்றது, வெடித்து விடுகின்றது என்று சொல்வது குறித்து கேட்ட போது, வண்டிக்கு தேவையான மின்சாரம் பேட்டரியில் போடும் போது அது 6 மணி நேரம் வரை சார்ஜ் போட வேண்டும். அந்த நேரத்தை கடந்து சார்ஜில் விடுவது போன்ற செயல்களினால், பேட்டரி வீக் ஆகி விபத்து ஏற்படலாம். ஆனால் முறையாக பயன்படுத்தினால் எந்த பயமும் இல்லை.

பயணத்தின் போது பரிந்துரை செய்யப்பட்ட எடையை காட்டிலும் கூடுதல் எடையை ஏற்றினால், கூடுதலாக மின்சாரம் செலவு செய்ய வேண்டியிருக்கின்றது. 



ஆனால், ஒட்டுமொத்தமாக பார்க்கையில், எல்கட்ரிக் வண்டிகள் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 70 கிலோ மீட்டர் வரை தாராளமாக இயக்கலாம். இதனால், எல்க்ட்ரிக் வாகனங்கள் பயனுள்ளதாகவே பார்க்கப்படுவதாக, தெரிவித்தார் மாலதி. 

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கே எதிர்கால மார்க்கெட்டில் டிமாண்ட் - சந்தை ஆராய்ச்சியாளர் குணா







எலெக்ட்ரிக் வாகனங்களுக்கே எதிர்கால மார்கெட்டில் டிமாண்ட் இருக்கும். அக்ரஸிவ் டிமாண்ட் என்று சொல்லும் அளவுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றன. நாளுக்கு நாள் உயரும் பெட்ரோல், டீசல் விலையால், பொதுமக்களின் மாத பட்ஜெட் பெருமளவு பாதிக்கப்படுகின்றது.

இதுவே, எலெக்ட்ரிக் வாகனம் என்றால் அதன் எரிபொருள் செலவும் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட பன்மடங்கு குறைவு. இதனால், நடுத்தர ஏழை மக்களின் பட்ஜெட்டுக்கு பாதகம் இல்லாமல் இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் பார்த்துக்கொள்கின்றன. இதனால், எல்க்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகின்றது. 

எலெக்ட்ரிக் வாகனம் விலை சற்று அதிகம் தான், ஆனால் 9 மடங்கு எரிபொருள் செலவு மிச்சம். 

வழக்கமான வாகனங்களை காட்டிலும், எலக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று கூடுதல் தான். ஆனால், அந்த கூடுதல் வித்தியாசத்தை ஒரு முதலீடாகவே பார்க்கின்றனர் வாடிக்கையாளர்கள். அதாவது, ஒரு பெட்ரோல் டீசல் வாகனத்தை வாங்கி பயன்படுத்தும் போது எரிபொருளுக்கு ஏற்படும் செலவை மாத தவணையாக (இன்ஸ்டால்மெண்ட்) கட்டி வாகனத்தை வாங்கிவிடலாம் என்கின்றனர் வாடிக்கையாளர்கள். 

வழக்கமாக வாகனங்களை வாங்குவோர் பெரும்பாலும் மாத தவணை முறையில் லோன் கட்டும்படி தான் வாங்குகின்றனர். ஒரு உதாரணத்துக்கு, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் இன்ஸ்டால்மெண்ட் தொகை கட்டுவதாக வைத்துக்கொள்ளலாம். தோராயமாக, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கு மாதம் ஐந்தாயிரம் செலவு ஆகும் எனும் பட்சத்தில், லோன் தொகையுடன் சேர்த்து ஒட்டுமொத்த செலவு 10 ஆயிரம் ரூபாயாகும். 

இப்போது, இதே எலக்ட்ரிக் வாகன செலவினங்களுக்கு வருவோம். பெட்ரோல், டீசல் மூலம் ஐந்தாயிரம் ரூபாய் எரிபொருளுக்காக செலவிட்டு பயணிக்கும் தூரத்தை, 450 முதல் 500 ரூபாய் வரையிலான மின்சாரத்தை பயன்படுத்தி எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக பயணித்து விட முடியும். இதனால், 9 மடங்கு எரிபொருள் செலவு மிச்சம் செய்யலாம். 

மிச்சமாகும், அந்த தொகை மட்டுமின்றி முன்னதாக திட்டமிட்ட இன்ஸ்டால்மென்ட் தொகை என இரண்டையும் சேர்த்தால் குறைந்த காலத்தில் (18-24) இன்ஸ்டால்மெண்ட் கட்டி வாகனங்களை வாடிக்கையாளர்கள் தன்னுடமையாக்கி கொள்ளலாம்.

நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் பொதுமக்கள் மெல்ல மெல்ல எலக்ட்ரிக் வாகனத்தின் பக்கம் திருப்புகின்றனர். 

ஒரு புறம், பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு, மறுபுறம் சோலார் மூலம் தன்னிச்சையாக மின்சார தயாரிப்பு உள்ளிட்டவற்றினால் எரிபொருள் செலவினங்கள் பெருமளவில் குறையும். எனவே, மாஸ் புரடக்ஸனில் கம்பெனிகள் ஈடுபடுகின்ற நிலை ஏற்பட்டால், எலக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும், என சந்தை ஆராய்ச்சியாளர் குணா நம்மிடம் தெரிவித்தார். 

கூடுதல் சார்ஜிங் ஸ்டேஷன் வேண்டும் - EV தான் future. 







எலக்ட்ரிக் கார்கள் தான் வருங்காலம். அதில், மாற்றுக்கருத்து இல்லை. இப்போது தான் எலக்ட்ரிக் கார்களின் ட்ரெண்ட் பிக்கப் ஆவதால், போதுமான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை. உள்ளூரில் ஒட்டும் போது பிரச்சனை இல்லை. ஆனால், ஒரு சில வெளியூர்களுக்கு செல்லும் போது சார்ஜிங் ஸ்டேஷன்கள் இடையே அதிக தூரம் உள்ளதால் முதலில் வந்த எலக்ட்ரிக் மாடல் கார்கள் வைத்துள்ளவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது, என்று எலக்ட்ரிக் கார் பயன்படுத்தும் சத்யதேவ் என்பவர் தெரிவித்தார். 



சமீபத்தில், நெக்ஸான் எலக்ட்ரிக் கார் வாங்கியுள்ள கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த சத்யதேவ், எலக்ட்ரிக் கார்களில் வெளியூர்களுக்கு செல்லும் போது கருத்தில் கொள்ள வேண்டியவற்றை குறித்து பகிர்ந்து கொண்டார். 



அதாவது, ஃபுல் சார்ஜ் செய்தால் 300 கி. மீ ரேஞ்ஜ் கிடைக்கும் என்ற மாடலில் வெளியூர் பயணம் சற்று சவலானதாக தான் இருக்கும். ஒவ்வொரு 220 கி.மீ ஒரு முறை மீண்டும் ஃபுல் சார்ஜ் செய்ய வேண்டி வரும். ஆனால், அதே 450 கி.மீ ரேஞ்ச் உள்ள மாடல்களில் 330 - 350 கி.மீ பின்பு ஃபுல் சார்ஜ் போட்டால் போதுமானதாக இருக்கும். 

சராசரியாக, 80 சதவீதம் சார்ஜ் ஆக ஒரு மணி நேரம் ஆகும். அதுவே, 100 சதவீதம் சார்ஜ் செய்ய 120 நிமிடங்கள் வரை ஆகும். இந்த கணக்கு, பாஸ்ட் சார்ஜ் என்ற moduleகளுக்கு தான் பொருந்தும். இதே, வீட்டில் அல்லது வேறு எங்காவது பிளக் பாயிண்ட் மூலம் சார்ஜ் செய்ய வேண்டும் என்றால், ஒரு மணி நேரத்துக்கு 10 சதவீதம் சார்ஜ் தான் ஏற்ற முடியும். இதே, வீட்டில் இரவு முழுவதும் சார்ஜ் செய்தால், காலை ஃபுல் சார்ஜ்ஜில் வண்டியை எடுக்கலாம். 

அவ்வாறு, சார்ஜிங் ஸ்டேஷன்களில் 100 சதவீத சார்ஜ் செய்ய சராசரியாக 800 ரூபாய் வரை செலவு ஆகும். இதே, வீட்டில் பிளக் பாய்ன்ட் மூலம் சார்ஜ் செய்தால், 280 - 300 ரூபாய் வரை செலவாகும். 

சோ, கோவை டூ சென்னை பெட்ரோல் செலவு ரூபாய். 4000 என்றால். இதே, எலக்ட்ரிக் வாகனத்தில் அதிகப்படியாக ரூபாய். 1200 மட்டுமே ஆகும். ஆனால், பெட்ரோல் அடிக்க ஒரு 5 நிமிடம் காத்திருந்தால் போதும், ஆனால், ஒரு ஃபுல் சார்ஜ் செய்ய ஒரு மணி நேரமாவது காத்திருக்க வேண்டியது வரும். 

அதிலும், நாம் சார்ஜ் போட போகும் போது வேறு யாராவது சார்ஜ் செய்து கொண்டிருந்தால் நம்முடைய காத்திருப்பு நேரம் இன்னும் நீடிக்ககூடும். இதனால், பயண நேரமும் அதிகரிக்கக்கூடும். 



கேரளா போன்ற பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழக நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் ஸ்டேஷன் என்பது முக்கிய ஊர்களில் மட்டுமே உள்ளது. உதாரணத்துக்கு, கோவையில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் திருப்பூர், சேலம், ஈரோடு, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் தான் ஸ்டேஷன் உள்ளது.



இது ஒரு அசௌரியம் தான் என்றாலும், பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் வாகனத்துக்கு ஆகும் பொருட்செலவை ஒப்பிடுகையில், பொருளாதாரம் மற்றும் சுற்று சூழலுக்கு ஏற்ற வாகனம் எலக்ட்ரிக் வண்டிகள் தான் என்பதில்லை ஐயமில்லை. 

நான் சிபாரிசு செய்து எனது நண்பர்கள் இருவர் இப்போது எலக்ட்ரிக் கார்கள் வாங்கி ஜம்முனு ஓட்டி வருகின்றனர், என்றார் எலக்ட்ரிக் கார் உரிமையாளர் சத்யதேவ்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...