கோவையில் பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு: முதன் முதலாக மேக்குலட் லான்சர் என்ற அரிய வகை பட்டாம்பூச்சி தென்பட்டுள்ளது

கோவை வன பகுதிகளில் பட்டாம்பூச்சி வாழ்வியலின் தற்போதைய நிலை குறித்து வனத்துறை உதவியுடன் கோவையை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.



கோவை: சிறகடித்து பறக்கும் பட்டாம் பூச்சியை பார்க்கும் யாவருக்கும் தனக்கே சிறகு முளைத்ததாக ஒரு உணர்வு வரும். ஒரு கணம் இங்கே, மறு கணம் அங்கே என்று அங்கும் இங்குமாய் சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சிகளை பிடிக்காதவர் எவரேனும் உண்டா.

அப்படிப்பட்ட பட்டாம் பூச்சியை பார்ப்பது மட்டும் அல்ல பாதுகாப்பதும் நம் கடமை. சொல்லப்போனால், பட்டாம்பூச்சிகளை பாதுகாப்பது நம்மை நாமே பாதுகாப்பதுக்கு சமம் என்கின்றனர் வன உயிர் ஆர்வலர்கள்.



இதோ இந்த பிரத்யேக செய்தி தொகுப்பில் சிம்பிளிசிட்டி செய்திக்குழு பார்வையாளர்களை பட்டாம் பூச்சி உலகத்துக்குள் அழைத்து செல்ல உள்ளோம்.

இயற்கை அன்னையின் செல்ல பிள்ளை பட்டாம்பூச்சி.

இயற்கை என்பது இந்த பூலோகத்தின் பாதுகாப்பு அரண். அப்படி பாதுகாப்பு அரணாக விளங்குவது கம்பீரமான காடுகளே.அப்படிப்பட்ட காடுகளை கட்டமைத்த பெருமை யானை முதல் புழு பூச்சி வரை அனைத்து வன உயிர்களையும் சென்று சேரும். விதை பரவல் முதல் தாவர வளர்ச்சி வரை இந்த பல்லுயிரினங்கள் ஆற்றும் சேவை அளப்பறியது.



அப்படிப்பட்ட உயிரினங்களில் தனித்துவமான இடத்தை தன்னகத்தே கொண்டது இயற்கை அன்னையின் அன்பு பிள்ளைகள் பட்டாம்பூச்சிகள் என்றால் அது மிகையாகாது,

மகரந்த சேர்க்கை எனும் ஒப்பிலா பணியை செய்யும் பட்டாம் பூச்சிகள் உணவு தேடல் மூலமாக தாவர வளர்ச்சி மற்றும் தாவர விரிவாக்கத்துக்கு உறுதுணையாக இருக்கின்றன.



கோவை பட்டாம்பூச்சிகளின் கோட்டை; கணக்கெடுப்பில் மீண்டும் நிரூபணம்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பெல்லாம் நமக்கு எளிதாக தென்பட்ட பட்டாம்பூச்சிகள், நாளடைவில் அரிதாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் நடந்த பட்டாம்பூச்சி கணக்கெடுப்பில் இதுநாள் வரை 328 பட்டாம்பூச்சிகள் ஆவணப்படுத்த பட்டிருக்கின்றன. இதில், 275 பட்டாம்பூச்சிகள் கோவை வனப்பகுதியில் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில், கோவை வன பகுதிகளில் பட்டாம்பூச்சி வாழ்வியலின் தற்போதைய நிலை குறித்து வனத்துறை உதவியுடன் கோவையை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மொத்தம் 16 குழுக்கள் 7 டிவிசன்களில் நடந்த இரண்டு நாட்கள் பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், அரிய வகை பட்டாம்பூச்சிகள் உட்பட 170 பட்டாம்பூச்சிகள் கண்கள் மற்றும் புகைப்பட கருவிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றன.

முதன் முதலாக கண்களுக்கு விருந்தான மேக்குலட் லான்சர் என்ற அரிய வகை பட்டாம் பூச்சிகள் வனத்தில் வலம்.

சிறுவாணி டிவிசனில் போளுவாம்பட்டியில் முதன் முதலாக "மேக்குலட் லேன்சர்" என்ற அரிய வகை பட்டாம் பூச்சி தென்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த பட்டாம்பூச்சி வகையை கோவை டிவிசனில் பார்த்தில்லை என்றனர் கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்கள்.

இதே போன்று மலபார், ஸ்கிப்பர், வைட் பார் புஸ்புரவுன் , பிலிப்பைன் ஸ்விஃப்ட், நீல்கிரி கிஸீஸ் யெல்லோ, மேடஸ் பிரவுன், தமிழ் யோமன், ஆங்க்ல்டு ஃப்ளாட், பிரோட், டின்னி கிராஸ் புளூ, பியோனீர், சாக்லெட் அல்பேட்ரோ, டார்க் செரூலின், இண்டியன் சன்பீம், காமன் அக்கேசியா புளூ, காமன் வாண்டேரர், காமன் ஜெசிபுள், கிரிம்சன் உள்ளிட்ட 170 பட்டாம்பூச்சிகள் சமீபத்திய கணக்கெடுப்பின் போது ஆவணப்படுத்தபப்ட்டன.



சிறுவாணி, கல்லாறு பட்டாம்பூச்சிகளின் ஹாட் ஸ்பாட்..!

நவம்பர் இரண்டாம் வாரம் நடந்த பட்டாம் பூச்சி கணக்கெடுப்பில் பெறும்பாலான பட்டாம்பூச்சிகள் சிறுவாணி மற்றும் கல்லார் என இந்த இரண்டு டிவிசன்களில் தான் அதிகம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

பறந்து விரிந்து பசுமை போர்த்திய வனப்பரப்பான சிறுவாணி, கல்லாறு போன்ற பகுதிகளில் அதிக அளவில் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பின் போது தென்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவாணி டிவிசனில் 240 பட்டாம் பூச்சிகளும், கல்லாறு டிசிசனில் 210 பட்டாம் பூச்சிகள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறுவாணி, கல்லாறு டிவிசன்களை பட்டாம்பூச்சிகளின் ஹாட்ஸ் ஸ்பாட் என்று சொல்லும் அளவிற்கு பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே, இந்த இரு பகுதிகளை பாதுகாக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பட்டாம் பூச்சி வாழ்வியலை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பட்டாம் பூச்சியை பாருங்க, ரசிங்க... ஆனால் தொடாதீங்க...!

பட்டாம் பூச்சியை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள் அதனை தொடக்கூடாது. அவ்வாறு தொட்டால் பட்டாம் பூச்சின் இறகில் இருக்கின்ற பவுடர் போன்ற துகல்கள் கைகளில் ஒட்டிக்கொள்ளும். அவ்வாறு பட்டாம் பூச்சிகள் இறக்கையில் இருக்கின்ற அந்த துகல்களை இழந்தால் தன் இயல்பான இன குணத்தை இழக்கின்றன.

இதன்பின், அந்த பட்டாம் பூச்சிக்கு இணை பட்டாம் பூச்சி கிடைக்காது. அந்த பட்டாம் பூச்சி சக பட்டாம் பூச்சி இனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எனவே, மென்மையான பட்டாம் பூச்சியின் தன்மையை உணர்ந்து அவற்றை கண்களால் ரசிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், நம் கைகளை அவற்றை தொட முற்படக்கூடாது என்று அறிவுறுத்துகின்றனர் வன ஆர்வலர்கள். 

பட்டாம் பூச்சியை துன்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இது - அதாவது பட்டாம் பூச்சிகளை துன்புறுத்துவது சட்டப்படி குற்றம் என்று. யானை, புலியை போன்று பட்டியலிடப்பட்ட ஸ்கெடியூல்டு (scheduled) பிரிவின் கீழ் தான் பட்டாம் பூச்சிகளும் வருகின்றது. எனவே, அவற்றை துன்புறுத்தினால், கொன்றால் சிறை தண்டனை விதிக்க வன சட்டத்தில் இடமுண்டு. 

அதாவது கிரிமிஸன் ரோஸ் போன்ற பட்டாம் பூச்சிகள் ஸ்கெடியூல்டு பட்டாம்பூச்சிகள். இதனை துன்புறுத்துவது வன சட்டப்படி குற்றமாகும். 

நாம பட்டாம் பூச்சியை பாதுகாக்கல. அது தான் நம்மை பாதுகாக்குது..!

பட்டாம் பூச்சி வசிக்கும் இடம் இயற்கை இடையூறின்றி இருப்பதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. மாறாக, பட்டாம்பூச்சி இல்லாத பகுதிகள் இயற்கைக்கு முரணான பகுதி என்றே கருதப்படுகிறது. எனவே, பட்டாம்பூச்சி இந்த உயிர் கோலத்தை பாதுகாக்கும் பல்லுயிர்களில் முதன்மையான உயிர் என்பதனை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்து.

சொல்லப்போனால், நாம் பட்டாம்பூச்சிகளை பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், எண்ணிலடங்கா விதங்களில் பட்டாம்பூச்சிகள் தான் நம்மை பாதுகாத்து வருகிறது என்பதே உண்மை.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...