ஆளுநர்கள் அரசுக்கு துணையாக இருக்கவே ஆசைப்படுகிறோம் - கோவையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

கோவை காளப்பட்டி அருகே கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தாமதம் குறித்து அவர் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.



கோவை: கோவை மாவட்டம் காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தெலங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

இந்த பட்டமளிப்பு விழாவை தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, நமது நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. ஜி20க்கு நாம் தலைமை தாங்க போகிறோம், உலகத்திற்கே குருவாக பாரதம் இருக்க வேண்டும் என்ற விவேகானந்தர் கனவு நிறைவேற போகிறது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தாமதம் குறித்து, தமிழக ஆளுநர் தான் பதில் கூற வேண்டும். ஆன்லைன் ரம்மி கூடாது என்பதில் எல்லோருக்கும் ஒற்றை கருத்து உள்ளது. ஆனால் இந்த ஒப்புதல் விவகாரத்தில் டெக்னிக்கல் காரணம் இருக்கலாம் எனவே அவர் தான் பதில் சொல்ல வேண்டும்.

தெலங்கானாவில் அரசாங்கம் தான் முரண்பாடாக உள்ளது, ஆளுநர் முரண்பாடாக இல்லை. என்னிடமும் சில சட்ட ஒப்புதல் உள்ளது. அதை தாமதிக்க வேண்டும் என தாமதம் செய்யவில்லை. அதற்கு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேலை வாய்ப்பு குறித்தான சட்ட ஒப்புதல் வந்துள்ளது.

இது குறித்து நான் ஏற்கனவே வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளது என கூறிக்கொண்டிருந்தேன். தெலங்கானவில் உள்ள பழைய நடைமுறைக்கு முற்றிலும், வேறு மாற்றத்துடன் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் இது மக்களுக்கு பலன் தருமா என பார்த்துவிட்டு கையெழுத்து போட உள்ளேன்.

ஆளுநருக்கு கையெழுத்து போட உரிமை உள்ளது போல, சரியான சட்டத்திற்கு, மக்களுக்கு பலன் தரும் ஒப்புதலில் கையெழுத்து போடுகிறோமா? என்பதை பார்க்கும் உரிமையும் அவர்களுக்கு உள்ளது.

அரசியல் காரணத்திற்காக ஆளுநர் உரை மறுக்கப்பட்ட போது கூட மறுநாள் பட்ஜெட் தாக்கலில் கூட மக்கள் பாதிக்க கூடாது என உடனடியாக கையெழுத்திட்டேன். மக்கள் பணிகள் சார்ந்து என்னை போன்றவர்கள் உள்ளனர். அது புரியாததால் தான் சிலர் இங்கே விமர்சிக்கிறார்கள் என்பது என் கருத்து.

மக்களை ஆளுநர் சந்திக்கலாம், புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போன்றவர்கள் விமர்சிக்கிறார்கள், ஆனால் மக்களை சந்திப்பதால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை எங்கள் பணி தொடரும்.

தமிழக ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து உண்மையான தன்மை எனக்கு தெரியவில்லை. தமிழக ஆளுநர் குறிப்பிட்ட மதத்தை குறித்து பேசிய மாதிரி தெரிவில்லை, பார்க்கும் பார்வையில் உள்ளது. எல்லோரும் மதச்சார்பற்று இருக்க வேண்டும் என்றால் தமிழக முதல்வரும் அதை கடைபிடிக்க வேண்டும்.

முதல்வர் வாழ்த்து கூறுவதில் பாரபட்சம் பார்க்கிறார். குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களுக்கு வாழ்த்து கிடைக்கவில்லை என கேட்கிறோம். துணை அரசாங்கம் நடத்த ஆசைப்பட்டோம், ஆனால் இணை அரசாங்கம் என அவர்கள் எடுத்துக் கொண்டார்கள், முதல்வர்கள் ஆளுநரின் செயல்பாடுகள் தவறாக புரிந்து கொள்கிறார்கள்,

இணை அரசாங்கம் என்றால் என்ன அவர்களை போல நேரில் சென்று பிரச்சாரம் செய்கிறோமா? இல்லை அரசுக்கு துணையாக இருக்கிறார்கள், இணைக்கு பதிலாக துணை என்று மாற்றிக் கொண்டால் சரியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...