மின் கட்டண உயர்வால் வார்ப்பட நிறுவனங்களின் போட்டியிடும் திறன் பாதிப்பு - தொழில்துறையினர் குற்றச்சாட்டு..!

வார்ப்பட தொழிலுக்கான மூலப்பொருட்களின் விலை குறைந்த நிலையில், தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதான் காரணமாக மற்ற மாநிலங்களுடன் போட்டியிடும் திறன் பாதிக்கப்பட்டு உள்ளதாக தொழில்துறையினர் குற்றச்சாட்டு.


கோவை: கோவை மாவட்டத்தில் 600 வார்ப்பட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 450 நிறுவனங்கள் குறு, சிறு பிரிவைச் சேர்ந்தவை. கோவை மாவட்டத்தில் வார்ப்பட தொழிலில் சுமார் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இத்தகைய முக்கியத்துவம் கொண்டுள்ள இந்த துறை மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டது. தற்போது மூலப்பொருட்கள் விலை குறைந்த போதும் போதிய பணி ஆணை இல்லாதது மற்றும் மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் வார்ப்பட தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவை குறு, சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் (காஸ்மாபேன்) தலைவர் சிவசண்முக குமார் கூறியதாவது, பம்ப்செட் மற்றும் ஆட்டோமொபைல் துறை தற்போது நலிவடைந்துள்ளது. இதனால் இவ்விரு துறைகளில் இருந்து பெரும் பணி ஆணையை பெரிதும் நம்பியுள்ள குறு, சிறு வார்ப்பட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவை ஒருபுறமிருக்க தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணம் தொழில் துறையினருக்கு மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு சந்தையில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எங்கள் சங்கத்தில் 400 தொழில் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் 200 தொழில் நிறுவனங்களின் செயல்பாடு கடந்த இரண்டாண்டுகளாக மிகவும் குறைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளன. சில நிறுவனங்கள் நிலைமை சீரடையும் வரை தற்காலிக உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளன.

தற்போது 30 சதவீதம் மட்டுமே பணி ஆணைகள் உள்ளன. ஏற்கனவே ஞாயிறு தவிர அனைத்து சனிக்கிழமைகளிலும் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்வரும் நாட்களில் வார நாட்களிலும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல், வார்ப்பட தேசிய தொழில் அமைப்பான தி இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென் (ஐஐஎப்) தென்மண்டல தலைவர் முத்துகுமார் கூறியதாவது,

வார்ப்பட தொழிலில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களான பிக் அயர்ன், ஸ்கிராப் உள்ளிட்ட பொருட்களின் விலை சற்று குறைந்துள்ளது. ஆட்டோ மொபைல், பம்ப்செட் தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளபோதும் சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட துறைகளில் வார்ப்பட தேவை உள்ளது.

இதனால் பெரிய வார்ப்பட தொழில் நிறுவனங்கள் தற்போதுள்ள சூழ்நிலையை சமாளித்து வருகின்றன. பணி ஆணை வழங்கும் நிறுவனங்கள் மூலப்பொருட்கள் விலை குறைந்துள்ளதை சுட்டிக்காட்டி ஆணை வழங்க நிர்ணயிக்கும் தொகையைக் குறைத்து கேட்கின்றனர்.

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை தெரிவித்தால் அவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மின்கட்டண உயர்வால் பெரிய வார்ப்பட தொழில் நிறுவனங்களுக்கும் மற்ற மாநிலங்களுடன் போட்டியிடும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...