கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை - ஜனவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற கொடநாடு வழக்கு விசாரணையில், செல்போன் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஆதாரங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் அரசு வழக்கறிஞர் அவகாசம் கோரியதால் வழக்கை ஜனவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முருகன் உத்தரவு.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி இரவு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது அங்கு காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், முதல் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு தற்போது அனைவரும் ஜாமினில் உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.



மேலும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் விசாரணை அதிகாரி முருகவேல் தலைமையிலான போலீசார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் மட்டுமே ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின் போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் வாதத்தில் தெரிவித்ததாவது, தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையின் போது கைப்பற்றிய 720 செல்போன் தகவல் பரிமாற்றங்களின் உண்மை தன்மை குறித்து சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளது. தனிப்படை போலீசார் ஒப்படைத்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் எலக்ட்ரானிக் ஆதாரங்களை ஆய்வு செய்ய துறையில் உள்ள திறமையான அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. புலன் விசாரணைக்காகவும், செல்போன் தகவல் பரிமாற்றங்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால் கால அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இந்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி முருகன் வழக்கு விசாரணையை ஜனவரி 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...